
மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியத்தை அமைத்து தமிழத்திற்கு உரிய தண்ணீரைவழங்க வேண்டுமென வலியுறுத்தியும், தமிழகத்திற்கு துரோகமிழைக்கும் மோடி அரசைக் கண்டித்தும் “காவிரியை மீட்போம்; தமிழகத்தைக் காப்போம்” என்ற முழக்கத்தோடு காவிரி உரிமைமீட்புப் பயணத்தின் ஒரு குழு திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையில் திருச்சி முக்கொம்பிலிருந்தும், மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தலைமையில் இரண்டாவது குழு அரியலூரிலிருந்து டெல்டாவின் கடைமடை பகுதியான கடலூருக்கு வியாழன் மாலை வந்தது. இரு பயணக்குழுவும் சிதம்பரத்தில் ஒன்றாக இணைந்தது. பயணக்குழுவினரை பொதுமக்கள் கட்சியின் தொண்டர்கள் வெடிவெடித்து ஆராவரம் செய்து வரவேற்றனர்.

இதனை தொடர்ந்து சிதம்பரம் அருகே கடவாச்சேரியில் அனைத்து கட்சிகளையும் சேர்ந்த தலைவர்கள் கலந்துகொள்ளும் விவசாயிகளுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மு.க.ஸ்டாலின் பேசுகையில், ‘’ காவேரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று அனைத்து கட்சி கூட்டத்தில் முடிவு செய்து அனைத்து கட்சியினரையும் ஒருங்கிணைத்து ரயில்மறியல், முழு அடைப்பு போராட்டம் என பலதரப்பட்ட போராட்டங்களை நடத்தியுள்ளோம்.
எடப்பாடி அரசு இதுவரை மேலாண்மை வாரியம் அமைப்பது குறித்து மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்கவில்லை. ஆகையால் காவிரியை மீட்போம், தமிழகத்தைக் காப்போம் என்ற முழக்கத்தோடு காவிரி உரிமை மீட்புப் பயணத்தினை இரண்டு குழுக்களாக தொடங்கியுள்ளோம். இந்த இரண்டு குழுக்களுக்கும் வழியெங்கும் மக்கள் எழுச்சிமிகு வரவேற்பு அளித்தனர். இந்த பயணத்தின் மூலம் டெல்டா பகுதியில் உள்ள பொதுமக்கள் விவசாயிகள் விழிப்புணர்வு அடைந்துள்ளதை உணர்ந்து கொண்டோம். இந்நிலையில் சென்னைக்கு ஒரு நிகழ்ச்சிக்கு வருகை தரும் மோடிக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் மோடியின் வருகை துக்கநாளாக அனுசரிக்க அனைவரும் கருப்பு சட்டை அனிந்தும், வீடுகளில் கருப்பு கொடிஏற்றியும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனை தமிழ்நாட்டு மக்கள் முழு மனதோடு நிறைவேற்றி கொடுத்துள்ளனர் இது மகிழ்ச்சியளிக்கிறது. மத்தியில் ஆளும் மோடிஆட்சி தமிழகத்தை பாலைவனமாக மாற்ற முயற்சி செய்து வருகிறது. அதற்கு மாநில ஆட்சியும் துணை நிற்கிறது. கருப்பு கொடி காட்டுகிறார்கள் என்றால் அதனை ஏற்கும் தகுதி இருக்கவேண்டும். இதேபோல் முன்னாள் பிரதமர் நேரு, இந்திராகாந்தி உள்ளிட்டவர்களுக்கு கருப்பு கொடி காட்டப்பட்டுள்ளது. அந்த கண்டனத்தை அவர்கள் ஏற்றுள்ளார்கள். ஆனால் மோடி கருப்பு கொடி கண்டனத்தை சந்திக்க தயார் என்று ஆண்மையுள்ள பிரதமராக இருந்திருப்பார் என்றால் தரையில் வந்து சந்தித்திருப்பார்.
ஆனால் சென்னையிலிருந்து திருவிடந்தை சற்று தூரம். அதனால் வானத்தில் பறந்து செல்வது ஏற்றுகொள்ள கூடியது தான். ஆனால் விமான நிலையத்திலிருந்து கிண்டிக்கு செல்ல 5 நிமிடம் தான். அதற்கு கூட ஹெலிகாப்டரில் பறந்து செல்கிறார். கருப்புகொடி கண்டனத்திற்கு பயந்து ஹெலிகாப்டரில் பறந்து செல்லலாம் ஆனால் ஓட்டு கேட்க மக்களிடம் தரைக்கு இறங்கி வந்துதான் ஆக வேண்டும். பூனை கண்ணை மூடிகொண்டால் பூலோகம் இருண்டுவிடும் என்று நினைத்துள்ளார் மோடி. எனவே ஆகாயத்திலே பறந்து கொண்டிருக்கும் பிரதமர் அவர்களே,
கீழே கொஞ்சம் பாருங்கள், ஒட்டுமொத்த தமிழ் மக்களின் உணர்வுகளின் வெளிப்பாடாய் கருப்புக் கொடிகள் பறந்து கொண்டிருக்கின்றன. இது எம் உரிமை! இனியாவது விழித்துக் கொள்ளுங்கள், இல்லையென்றால் நீங்கள் விழித்துக் கொள்ளும் வரையிலும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கின்ற வரையிலும் எங்களின் போராட்டம் தொடரும்’’ என்றார்.
மேலும், இன்று எங்களின் பயணக்குக்குழுவின் முடிவடையக்கூடிய நிலைக்கு வந்திருக்கலாம். ஆனால் காவேரி மேலாண்மை வாரியம் அமையும் வரை எங்களின் போராட்டம் ஓயாது என்றார். இதனை விவசாயிகள் கை தட்டி வரவேற்றார்கள். இதனை தொடர்ந்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் உள்ளிட்டவர்கள் பேசினார்கள். பின்னர், இரு பயணகுழுக்களும் சிதம்பரத்திற்கு வந்து பொதுமக்கள் மத்தியில் பேரணியாக சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.
முன்னதாக காலை 10 மணிக்கு காட்டுமன்னார்கோயில் அருகே லால்பேட்டையில் மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தலைமையிலான இரண்டாவது பயணக்குழு திமுக கொள்கை பரப்பு செயலாளர் ராசா, ஐ.பெரியசாமி, துரைசாமி விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலதுணைத்தலைவர் வீரபாண்டியன் உள்ளிட்டவர்களுடன் லால்பேட்டை, குமராட்சி ஆகிய பகுதிகளில் பேரனியாக நடந்து சென்று காவிரியை மீட்போம் என்று விழிப்புணர்வை ஏற்படுத்தினார்கள். பின்னர் சிதம்பரம் நகருக்கு வந்து அனைவரும் ஒரு குழுவாக கடலூர் நோக்கி சென்றனர்.