
நாடாளுமன்றத்தில் கடந்த ஜனவரி 31ஆம் தேதி முதல் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வந்தது. இந்த கூட்டத்தொடரில், வக்ஃப் வாரிய சட்டத்திருத்த மசோதா, மணிப்பூரில் குடியரசுத் தலைவர் ஆட்சி மசோதா உள்ளிட்ட மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டது. இதைத் தொடர்ந்து, நாடாளுமன்றத்தில் உள்ள இரு அவைகளிலும் பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்றுடன் (04-04-25) முடிவடைந்தது.
இந்த கூட்டத்தொடரின் போது, கடந்த 5 ஆண்டுகளில் சுற்றுலா தலங்களில் நுழைவுச் சிட்டுகளை விற்பனை செய்ததன் மூலம், இந்திய தொல்லியல் துறைக்கு ஆண்டு வாரியாக கிடைத்த வருவாய் என்ன? என்றும், அதிக வருமானம் பெற்ற சுற்றுலாத் தலங்கள் எது? உள்ளிட்ட கேள்விகள் மத்திய கலாச்சாரத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷேகாவத்திடம் கேட்கப்பட்டது.
அதற்கு பதிலளித்த மத்திய அமைச்சர் கஜேந்திர சிங், “கடந்த 5 ஆண்டுகளில் நுழைவு சீட்டுகள் விற்பனை மூலம் ஆக்ராவில் உள்ள தாஜ்மஹால் ரூ.297 கோடி வருவாய் ஈட்டி அதிக வருவாய் ஈட்டியுள்ள சுற்றுலா தலங்களின் வரிசையில் தாஜ்மஜால் முதல் இடத்தில் உள்ளது. இதற்கு அடுத்ததாக, டெல்லியில் உள்ள குதுப் மினார் 2023-2024 நிதியாண்டில் ரூ.23.80 கோடி ஈட்டி இரண்டாவது இடத்தைப் பெற்றுள்ளது. அதே போல், 2023-2024 நிதியாண்டில் அதிக வருவாய் ஈட்டிய சுற்றுலாத் தலங்களின் பட்டியலில், டெல்லியில் உள்ள செங்கோட்டை ரூ.18.08 கோடி ஈட்டி மூன்றாவது இடத்தில் உள்ளது.
2019 -2020 நிதியாண்டில், ஆக்ராவில் உள்ள ஆக்ரா கோட்டை டிக்கெட் விற்பனை மூலம் அதிக வருவாய் ஈட்டி இரண்டாவது இடத்திலும், குதுப் மினார் மூன்றாவது இடத்திலும் இருந்தது. 2020- 2021 நிதியாண்டில், தமிழ்நாட்டில் உள்ள மாமல்லபுரம் இரண்டாவது இடத்திலும், கோனார்க் சூரிய கோயில் மூன்றாவது இடத்திலும் இருந்தது” எனத் தெரிவித்தார்.