அமைச்சர் ஓ.எஸ்.மணியனின் அலட்சியத்தால் அவரது கார் ஓட்டுநர் பரிதாபமாக இறந்துள்ளதாக அவரது உறவினர்கள் குறைபடுகின்றனர்.
சென்னை சூளைமேடு பகுதியில் வசித்து வந்தார் அமைச்சரின் கார் ஓட்டுனர் சவுந்திரராஜன். இன்று வழக்கமாக அமைச்சருக்கு கார் ஓட்டுவதற்காக சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள ஓ.எஸ்.மணியனின் வீட்டிற்கு சென்றார். அவரை அழைத்து செல்வதற்காக காரை சுத்தப்படுத்திவிட்டு அமைச்சரை காரில் ஏறும்படி அழைத்திருக்கிறார். அப்போது திடீரென சவுந்திரராஜனுக்கு நெஞ்சுவலி ஏற்பட்டிருக்கிறது. அவர் நெஞ்சை பிடித்துக்கொண்டு காரை ஓட்ட முடியாமல் அவதிப்பட்டிருக்கிறார். நெஞ்சுவலியால் துடித்த ஓட்டுநர் சவுந்திரராஜனுக்கு அமைச்சர் முதலுதவிக்கு கூட ஏற்பாடு செய்யவில்லை" என்கின்றனர் அவரது உறவினர்கள்.
" நெஞ்சுவலியால் தவித்த ஓட்டுநருக்கு உதவாமல் அமைச்சர் வீட்டுக்குள் சென்றுவிட்டதாகவும், அமைச்சர் வீட்டில் உள்ளவர்கள் மனிதாபிமானம் கூட இல்லாமல் ஆம்புலன்சுக்கும் தகவல் தெரிவிக்காமல் இருந்துவிட்டனராம். நீண்ட நேரத்திற்கு பிறகு மற்றொரு ஊழியரிடம் சவுந்திரராஜனை மருத்துவமனைக்கு கொண்டு செல்லுமாறு கூறியிருக்கிறார் அமைச்சர். அந்த ஊழியரோ தனது இருசக்கர வாகனத்தில் ஓட்டுநர் சவுந்திரராஜனை பின்னால் அமர வைத்து சிறிது தூரம் அழைத்து சென்றிருக்கிறார். போகும் வழியில் வலிதாங்காமல் கீழே விழுந்திருக்கிறார் ஓட்டுநர். அப்போது அவரது மண்டை உடைந்திருக்கிறது. மண்டை உடைந்த ஓட்டுநர் சவுந்திரராஜன் பரிதாபமாக உயிரிழந்தார். " என்கிறார்கள் சக டிரைவர்கள்.
இந்தநிலையில் ஓட்டுநர் சவுந்திரராஜன் வீட்டுக்குச் சென்ற அமைச்சர் ஓ.எஸ்.மணியனை அவரது உறவினர்கள் விரட்டியடித்திருக்கின்றனர். உரிய நேரத்தில் மருத்துவமனைக்கு அழைத்து செல்லாததால் ஓட்டுநர் சவுந்திரராஜன் மரணமடைந்தார். நெஞ்சுவலியால் துடித்தவருக்கு ஏன் உதவி செய்யவில்லை என்றும் டிரைவரின் உறவினர்கள் கேள்வியெழுப்பியுள்ளனர்.
இதற்கிடையில், சென்னையில் பத்திரிகையாளர்களை சந்தித்து தன்னிலை விளக்கம் கொடுத்திருக்கிறார் அமைச்சர் மணியன். அவர்" டிரைவர் சவுந்தராஜனுக்கு நெஞ்சுவலி வந்தது எனக்கு தெரியாது. கேள்விப்பட்டு டூவிலரில் மருத்துவமனைக்கு அனுப்பினேன், வேண்டுமென்றே பிரச்சினையை கிளப்புகின்றனர் என்றார்.