Skip to main content

உத்தரகாண்ட் சுரங்க விபத்து; இறுதிக்கட்டத்தில் மீட்புப்பணிகள்

Published on 28/11/2023 | Edited on 28/11/2023

 

mining accident; Rescue operations at the final stage

 

உத்தரகாண்ட் மாநிலம் உத்தரகாசி அருகே உள்ள சில்க்யாரா என்ற பகுதியில் அமைந்துள்ள யமுனோத்ரி தேசிய நெடுஞ்சாலையில் சுரங்கம் தோண்டும் பணி நடைபெற்று வந்தது. இந்த சூழலில் கடந்த 12 ஆம் தேதி (12/11/2023) காலை வழக்கம்போல் தொழிலாளர்கள் சுரங்கம் தோண்டும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது திடீரென எதிர்பாராத விதமாகச் சுரங்கப்பாதை இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் பணியில் இருந்த 41 தொழிலாளர்கள் சுரங்கத்தின் உள்ளே சிக்கினர். சுமார் 4.5 கி.மீ. நீளமுள்ள சுரங்கப் பாதையில் 150 மீட்டர் இடிந்து விழுந்து இந்த விபத்து நிகழ்ந்தது.

 

மீட்புப் பணியில் 17வது நாளாகத் தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படைகள், தீயணைப்புத் துறையினர் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினரும் ஈடுபட்டுள்ளனர். மேலும் சுரங்கத்தைத் துளையிடும் பணியின்போது ஆகர் இயந்திரத்தைத் தாங்கிக் கொண்டிருந்த கான்கிரீட் தளம் சேதமடைந்ததால் மீட்புப் பணியில் தொய்வு ஏற்பட்டது. மேலும் துளையிடும் பகுதியில் இரும்புக் கம்பி இருப்பதால் துளையிடுவதில் சிக்கல் ஏற்பட்டு மீட்புப் பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன.

 

அதே சமயம் மீட்புக் குழுவினர் ஆகர் இயந்திரத்தைக் கொண்டு துளையிடும் பணியில் தொடர்ந்து இடையூறு ஏற்பட்டுக் கொண்டே இருப்பதால், மாற்று வழியில் தொழிலாளர்களை மீட்பது குறித்து மீட்புக் குழுவினர் ஆலோசனை மேற்கொண்டனர். இந்த ஆலோசனையின் முடிவில் பிளான் ‘ஏ’ படி நேற்று மாலை கிடைமட்டமாக அமைக்கப்பட்ட குழாய் மூலம் மனிதர்கள் சென்று கைகளால் பள்ளம் தோண்டி இடிபாடுகளை அகற்றும் பணி தொடங்கி இருந்தனர்.

 

mining accident; Rescue operations at the final stage

 

இந்நிலையில் தற்போது சுரங்கப் பாதையில் சிக்கியுள்ள 41 தொழிலாளர்களை கிடைமட்டமாக அமைக்கப்பட்ட குழாய்கள் மூலம் மீட்கப்பட உள்ளனர். இதற்காக மீட்புக் குழுவினர் ஏற்கனவே சுரங்கப்பாதைக்குள் சென்ற நிலையில் தற்போது தொழிலாளர்களின் உடல்நிலையை பரிசோதிக்க மருத்துவக் குழுவினர் சுரங்கப்பாதைக்குள் சென்றுள்ளனர். தொழிலாளர்களுக்கு சிகிச்சை அளிக்க சுரங்கத்திற்குள் தற்காலிக மருத்துவமனையையும் அமைக்கப்பட்டுள்ளது. 

 


 

சார்ந்த செய்திகள்