சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் பரவி வரும் கரோனாவை கட்டுப்படுத்த இந்த மாவட்டங்களில் உள்ள சென்னை காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் தளர்வுகள் விலக்கிக் கொள்ளப்பட்டு ஊரடங்கு கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டுள்ளன.
பேரிடர் மேலாண்மை சட்டம் 2005ன் கீழ் 19.06.2020 அதிகாலை 12 மணி முதல் 30.06.2020 இரவு 12 மணி வரை 12 நாட்களுக்கு இந்த ஊரடங்கு நடைமுறை அமலில் இருக்கும். இந்த 12 நாளில் வரும் இரண்டு ஞாயிற்றுக்கிழமைகளிலும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என அரசு தெரிவித்திருந்தது. அதன்படி, சென்னை உள்பட 4 மாவட்டங்களில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) தீவிர முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. தேவையின்றி வெளியில் வரும் மோட்டார் சைக்கிள், கார், ஆட்டோ ஆகிய வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என்று போலீசார் எச்சரித்து உள்ளனர். மேலே உள்ள படங்கள் சென்னை வியாசர்பாடி மேம்பாலம் பகுதியில் எடுக்கப்பட்டது. வாகனங்கள் செல்ல முடியாதபடி போலீசார் தடுப்புகள் அமைத்துள்ளனர். பொதுமக்களும் வீட்டிலேயே இருந்தனர். இதனால் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டது.