Skip to main content

நிரம்பியது 'மேட்டூர் அணை'

Published on 30/07/2024 | Edited on 30/07/2024
mettur dam

கர்நாடக மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை ஜூலை முதல் வாரத்தில் தொடங்கி தற்போது வரை விட்டு விட்டு கனமழை பொழிந்து வருகிறது. இதனால் கர்நாடகாவின் முக்கிய அணைகளான கிருஷ்ணராஜ சாகர் அணை மற்றும் கபினி, ஹேமாவதி உள்ளிட்ட அணைகளில் நீர்மட்டம் அதிகரித்துள்ளது. இதனால் தொடர்ந்து அதிகப்படியான உபரி நீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டு வருகிறது.

இதனால் மேட்டூர் அணைக்கு தொடர் நீர்வரத்து அதிகரித்து வந்தது. இந்நிலையில் 43 மூன்றாவது முறையாக மேட்டூர் அணை நிரம்பியுள்ளது. நேற்று மாலை 1.58 ஆயிரம் கனஅடி நீர் மேட்டூர் அணைக்கு வந்து கொண்டிருந்த நிலையில் நேற்று மாலை அல்லது இன்று காலைக்குள் மேட்டூர் அணை அதன் முழு கொள்ளளவான 120 அடியை எட்டும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் நேற்று மாலை திடீரென நீர்வரத்து குறைந்தது. இந்நிலையில் தற்பொழுது மேட்டூர் அணை அதன் முழு கொள்ளளவான 120 அடியை எட்டியுள்ளது.

மேட்டூர் அணை நீர்மட்டம் 119.02 அடியிலிருந்து 120 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் நீர் இருப்பு 92.56 டிஎம்சியாக உயர்ந்துள்ளது. காவிரி டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையிலிருந்து 23 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்திற்காகவும் மேட்டூர் அணையில் இருந்து நீர் திறக்கப்பட்டுள்ளது. மேட்டூர் அணையின் 16 கண் மதகுகள் வழியாக உபரி நீர் முழுமையாக வெளியேற்றப்பட்டு வருகிறது. தமிழக முதல்வரின் உத்தரவுப்படி சேலம் ஆட்சியர் பிருந்தாதேவி தண்ணீரை திறந்து வைத்துள்ளார்.

டிசம்பர் 13ஆம் தேதி வரை 137 நாட்களுக்கு பாசனத்திற்கு நீர் திறந்துவிட தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார். மேட்டூர் அணையின் வரலாற்றில் 13வது முறையாக கால்வாய் பாசனத்திற்கு முன்கூட்டியே நீர் திறக்கப்பட்டுள்ளது. மேட்டூர் கிழக்கு, மேற்கு கரை வாய்க்கால்கள் மூலம் மொத்தம் 45 ஏக்கர் நிலம் பாசன வசதிபெற இருக்கிறது. சேலத்தில் 16,443 ஏக்கர் நிலமும், ஈரோட்டில் 17,230 ஏக்கர் நிலமும், நாமக்கல்லில் 11,327 ஏக்கர் நிலமும் பாசன வசதி பெற இருக்கிறது. மேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்டியுள்ளதால் காவிரி கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கையும் மேலும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

சார்ந்த செய்திகள்