Skip to main content

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்; தி.மு.க வேட்பாளர் வேட்புமனுத் தாக்கல்!

Published on 19/06/2024 | Edited on 19/06/2024
 DMK candidate filing nomination on Vikravandi by-election

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் புகழேந்தி. இவர் கடந்த ஏப்ரல் 6 ஆம் தேதி (06.04.2024) உடல்நலக் குறைவால் காலமானார். இவர் மறைந்ததைத் தொடர்ந்து விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதி காலியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டது. இத்தகைய சூழலில்தான் விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதிக்கு ஜூலை 10 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் எனத் தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. அதன்படி கடந்த 14ஆம் தேதி விக்கிரவாண்டி இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் தொடங்கியது.

இந்த இடைத்தேர்தலில் திமுக சார்பில் அன்னியூர் சிவா, நாம் தமிழர் கட்சி சார்பில் அபிநயா பாஜக கூட்டணியில் உள்ள பாமக சார்பில் அக்கட்சியின் மாநிலத் துணைத் தலைவர் சி.அன்புமணி ஆகியோர் போட்டியிட உள்ளனர். அதே சமயம் அதிமுக இந்த இடைத்தேர்தலைப் புறக்கணிக்கிறது எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதே போல், தே.மு.தி.கவும் இந்த இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்திருந்தது. இந்த அறிவிப்புகள் அரசியல் வட்டாரத்தில் பெரும் விமர்சனத்தை ஏற்படுத்தியிருந்தது.

அதே போல், த.வெ.க தலைவரும், நடிகருமான விஜய் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் போட்டியிடாது என்றும், எந்தக் கட்சிக்கும் ஆதரவு இல்லை என்றும் தெரிவித்திருந்தார். இந்த நிலையில், விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தலில் தி.மு.க சார்பில் போட்டியிடும் வேட்பாளர் அன்னியூர் சிவா இன்று (19-06-24) தேர்தல் நடத்தும் அலுவலரிடம் தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்துள்ளார். அப்போது, உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி, எம்.பிக்கள் ரவிக்குமார் மற்றும் ஜெகத்ரட்சகன் உள்ளிடோர் உடன் இருந்தனர். இதனிடையே, இன்று மாலை நேரத்தில் பா.ம.க சார்பில் போட்டியிடும் சி.அன்புமணி வேட்புமனு தாக்கல் செய்ய இருப்பதாக எதிர்பார்க்கப்படுகிறது. 

சார்ந்த செய்திகள்