நாட்டில், அரசியல் சாசனம் சட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்டு 75 ஆண்டுகள் நிறைவடைந்ததை கடைபிடிக்கும் விதமாக கடந்த 4 நாட்களாக நாடாளுமன்றத்தில் உள்ள இரு அவைகளிலும் சிறப்பு விவாதம் நடைபெற்றது. இந்த விவாதத்தின் முடிவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியிருப்பது நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மாநிலங்களவையில் நேற்று (17-12-24) பேசிய அமித்ஷா, “அம்பேத்கர், அம்பேத்கர், அம்பேத்கர், அம்பேத்கர், அம்பேத்கர், அம்பேத்கர் என்று சொல்வது இப்போது ஒரு ஃபேஷன் ஆகிவிட்டது. இதற்குப் பதிலாக, கடவுளின் பெயரை இவ்வளவு சொல்லியிருந்தால், அவர்களுக்குச் சொர்க்கத்திலாவது இடம் கிடைத்திருக்கும். அம்பேத்கரின் பெயரைக் காங்கிரஸ் எடுத்துக்கொள்வதில் பா.ஜ.க மகிழ்ச்சியடைகிறது. ஆனால் அவர் மீதான உண்மையான உணர்வுகள் குறித்தும் காங்கிரஸ் கட்சி பேச வேண்டும்” என்று பேசினார்.
அம்பேத்கர் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் அமித்ஷா பேசியதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இன்று காலை (18-12-24) நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் உள்ளிட்ட இந்தியா கூட்டணி கட்சியினர், பாபாசாகேப் அம்பேத்கர் புகைப்படத்தை கையில் ஏந்தி போராட்டம் நடத்தினர். மேலும், அம்பேத்கரை புகழும் வகையில் ‘ஜெய் பீம்’ என அவர்கள் தொடர்ந்து முழக்கமிட்டனர். இந்த விவகாரத்தில், அம்பேத்கர் குறித்து சர்ச்சைக்குரிய பேசவில்லை என்றும், எதிர்கட்சியினர் திரித்து பொய் கூறுகின்றனர் என்றும் பிரதமர் மோடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் விளக்கம் அளித்தனர்.
இந்த நிலையில், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், “நேற்று மத்திய உள்துறை அமைச்சர் அம்பேத்கர் குறித்து பேசியிருப்பது கண்டனத்துக்குரியது. போற்றப்பட வேண்டிய பட்டியலின தலைவரை அவமானப்படுத்தியது வருத்தமளிக்கிறது. பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சியினர், அரசியல் சாசனத்தின் மீது நம்பிக்கை இல்லாமல் இருக்கின்றனர் என்று சொல்ல வேண்டிய கட்டாயத்தில் நான் இருக்கிறேன்.
அவர்களுக்கு அரசியல் சாசனத்தின் மீது நம்பிக்கை இல்லை. அவர்கள் மனுஸ்மிருதியைப் பற்றி பேசுகின்றனர். அமித்ஷாவுக்கு ஆதரவாக இன்று பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில் 6 ட்வீட் போடுகிறார். அப்படி என்ன தேவை இருக்கிறது?. டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கரைப் பற்றி யாராவது தவறாக சொன்னால், அவரை அமைச்சரவையில் இருந்து நீக்க வேண்டும். ஆனால், அவர்கள் இருவரும் நண்பர்களாக இருக்கின்றனர். அதனால், தான் தங்களது பாவத்தை ஒருவருக்கொருவர் ஆதரிக்கின்றனர். பாபாசாகேப் அம்பேத்கருக்கு எதிராக யாராவது பேசினால், அவரை அமைச்சரவையில் இருந்து பிரதமர் மோடி நீக்கியிருக்க வேண்டும். பாபாசாகேப் அம்பேத்கர் மீது பிரதமர் மோடி மரியாதை வைத்திருந்தால், அமித்ஷாவை அமைச்சரவையில் இருந்து இன்றே நீக்க வேண்டும்” என்று கூறினார்.