கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக முதல்வர் பழனிசாமி ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் உள்ளிட்ட அமைச்சர்களும், தலைமைச் செயலாளர் சண்முகம், சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் உள்ளிட்ட உயர் அதிகாரிகளும் கலந்துக் கொண்டனர்.
இதில் மத்திய அரசின் ஊரடங்கு தளர்வு வழிகாட்டுதலைச் செயல்படுத்துவது தொடர்பாக ஆலோசனை நடைபெற்றதாகத் தகவல் வெளியாகியிருந்தது. இந்த நிலையில் தமிழகத்தில் மே- 3 ஆம் தேதி வரை ஊரடங்கு கட்டுப்பாடுகளில் எந்தத் தளர்வும் இல்லை எனத் தமிழக அரசு அறிவித்துள்ளது. கரோனா மேலும் பரவுவதைத் தடுக்க கடும் நடவடிக்கையைத் தொடர்ந்து தீவிரப்படுத்த வேண்டியுள்ளது. மேலும் அத்தியாவசியப் பணிகள் மற்றும் சேவைகளுக்கு ஏற்கனவே அளிக்கப்பட்ட விதிவிலக்கு தொடரும். நோய்த் தொற்று குறைந்தால் வல்லுநர் குழு ஆலோசனைப்படி நிலைமைக்கு தகுந்தவாறு முடிவு எடுக்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
பஞ்சாப், கர்நாடகா, டெல்லி ஆகிய மாநிலங்கள் மே 3- ஆம் தேதி வரை தளர்வுகள் இல்லை என ஏற்கனவே அறிவித்திருந்த நிலையில், தமிழக அரசு தற்போது அறிவித்துள்ளது. தெலங்கானா மாநிலத்தில் மே 7- ஆம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து அம்மாநில அரசு அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.