Skip to main content

பரந்தூர் விமான நிலையம் குறித்து தமிழக அரசு முழு விளக்கம்!

Published on 21/01/2025 | Edited on 21/01/2025
Tamil Nadu Government full explanation about Parantur Airport

பரந்தூர் விமான நிலையம் அமைக்கும் திட்டம் 10ஆண்டுகளுக்கும் மேலாகவே ஆய்வு செய்யப்பட்டு உருவாக்கப்பட்டுள்ளது. பரந்தூரில் சென்னையில் இரண்டாவது விமான நிலையம் அமைவதால் தொழில், மருத்துவம், சுற்றுலா முதலிய துறைகள் பெரிய அளவில் வளர்ச்சி பெறும். மக்கள் பாதிக்கப்படாமல் தமிழ்நாடு அரசு நடவடிக்கை மேற்கொள்ளும் என அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “சென்னை மாநகரின் இரண்டாவது பெரிய விமான நிலையம் பரந்தூரில் அமைக்கப்படுவது குறித்து தமிழ்நாடு அரசு மிகுந்த கவனத்துடன் செயல்பட்டு வருகிறது. மக்களின் வாழ்வாதாரமும், நலன்களும் எந்தவகையிலும் பாதிக்கப்படக்கூடாது என்ற அடிப்படையில் தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கும், இளைஞர்களின் வேலைவாய்ப்புகளுக்கும் பொருளாதார மேம்பாடுகளுக்கும் உறுதுணையாக அமையும் என்பதால் இத்திட்டத்தை செயல்படுத்த முனைந்துள்ளது.

இந்திய விமான ஆணையம் மேற்கொண்ட சாத்தியக்கூறு ஆய்வின் கண்டுபிடிப்புகள் மற்றும் டிட்கோ (TIDCO) மேற்கொண்ட மேலும் விரிவான பகுப்பாய்வு ஆகியவற்றின் அடிப்படையில், பின்வரும் காரணங்களுக்காக கிரீன்ஃபீல்ட் விமான நிலையத்தை மேம்படுத்துவதற்கு பண்ணூரை விட பரந்தூர் தளம் மிகவும் பொருத்தமான தளமாக உருவெடுத்துள்ளது. பரந்தூரில் உள்ள திட்டத் தளம், வரவிருக்கும் சென்னை - பெங்களூரு விரைவுச் சாலைக்கு அருகில் உள்ளது. இது மேலே விவரிக்கப்பட்டுள்ள மற்ற சாலை மற்றும் ரயில் இணைப்பைத் தவிர, தேவையான இடங்களுக்கு எளிதாகவும், குறைந்த செலவிலும் சென்றுவரத்தக்க இடமாக அமைந்துள்ளது. பண்ணூரில் 1,546 குடும்பங்கள் வசிக்கின்ற நிலையில், பரந்தூரில் அதைவிட 500 குடும்பங்கள் குறைவாக 1,005 குடும்பங்கள் மட்டுமே வசிக்கின்றது. பண்ணூருடன் ஒப்பிடும்போது, விமானச் செயல்பாடுகளுக்கு மனிதனால் உருவாக்கப்பட்ட தடைகள் குறைவாகவே உள்ளன. அங்கு பல ஈ.எச்.டி (EHT) கோடுகள் தளத்திலும் அதைச் சுற்றியும் உள்ளன மற்றும் தளத்திற்கு அருகில் செயல்படும் தொழில்கள் பல உள்ளன.

விமான நிலையத்தின் செயல்பாடு மற்றும் பிற தேவைகளுக்காக பரந்தூரில் உள்ள உத்தேச தளத்தில் போதுமான கட்டமைப்புகள் இல்லாத நிலம் உள்ளது. பண்ணூர் அருகே உள்ள நிலங்கள் குடியிருப்புகள் மற்றும் தொழிற்சாலைகளுடன் வளர்ச்சியடைந்துள்ளதால், அங்கு விமான நிலையப் பணிகளுக்காக கூடுதல் நிலங்களைக் கையகப்படுத்துவது கடினம். பரந்தூரில் அமையும் விமான நிலையத்தைச் சுற்றி எதிர்கால மேம்பாடுகளுக்கு அதிக அளவில் காலி நிலங்கள் இருப்பதால் சிறப்பாகத் திட்டமிட முடியும். அதேசமயம் பண்ணூரில் முன்மொழியப்பட்ட திட்டப் பகுதி திருப்பெரும்புதூர் தொழிற்பேட்டைக்கு அருகில் உள்ளது. மேலும் நிரந்தர தொழில்துறை மற்றும் குடியிருப்புக் கட்டமைப்புகளுடன் வளர்ச்சியடைந்துள்ளது. பண்ணூருடன் ஒப்பிடும் போது, பரந்தூரில் நிலம் கையகப்படுத்துவதற்கான செலவு குறையும். தொழில்துறை மற்றும் பிற வளர்ச்சிகளால் சூழப்பட்ட பண்ணூரில் உள்ள திட்டத் தளத்துடன் ஒப்பிடும் போது, பரந்தூரில் உள்ள திட்ட தளம் ஒப்பீட்டளவில் வளர்ச்சியடையாமல் உள்ளது.

பண்ணூரில் முன்மொழியப்பட்ட திட்டப் பகுதியின் வளர்ச்சியடைந்த தன்மை கையகப்படுத்துதல் செலவில் கணிசமான அதிகரிப்புக்கு வழிவகுக்கும். இந்த, அரசு பொறுப்பேற்றதற்கு முன்பாகவே, அதாவது 2020ஆம் ஆண்டிலேயே முந்தைய ஆட்சியினால் பரந்தூர் விமான நிலைய இடம் தேர்வு செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. பரந்தூர் விமான நிலையத்தின் மூலம் தொழில் வளர்ச்சி முதலான பல்வேறு முன்னேற்றங்கள் ஏற்படும் வாய்ப்புகள் அமைந்துள்ளன. இந்த அடிப்படையில்தான். விமானப் போக்குவரத்து ஆணையத்தினால் சென்னை மாநகரின் இரண்டாவது விமான நிலையத்தை அமைத்திட பரந்தூர் பகுதி தேர்வு செய்யப்பட்டுள்ளது.

Tamil Nadu Government full explanation about Parantur Airport

ஒரு புதிய விமான நிலையத்தை உருவாக்குவது என்பது அந்தப் பகுதியின் பொருளாதார வளர்ச்சிக்கு மிகப்பெரிய உதவியாக இருக்கும். இந்தியாவின் மற்ற பெரிய நகரங்களான டெல்லி, கொல்கத்தா, ஐதராபாத், பெங்களூரு ஆகிய விமான நிலையங்களுடன் ஒப்பிடும்போது சென்னை விமான நிலையம் மிகச் சிறியதாகும். டெல்லி விமான நிலையம் ஏறத்தாழ 5,106 ஏக்கரிலும், மும்பை விமான நிலையம் 1,150 ஏக்கரிலும், ஐதராபாத் விமான நிலையம் 5500 ஏக்கரிலும், பெங்களூரு விமான நிலையம் 4,000 ஏக்கரிலும் அமைந்துள்ளன. ஆனால் தற்போதைய சென்னை விமான நிலையம் 1,000 ஏக்கரில்தான் அமைந்துள்ளது.

இது அளவில் சிறியதாக இருந்தாலும் ஆண்டிற்கு 2 கோடி மக்கள் சென்னை விமான நிலையத்தைப் பயன்படுத்துகிறார்கள். அடுத்த சில ஆண்டுகளில் இது 3 கோடிக்கு மேல் அதிகரிக்கும் எனவும், அடுத்த 10 ஆண்டுகளில் 8 கோடி பயனாளிகள் சென்னை விமான நிலையத்தைப் பயன்படுத்துவார்கள் எனவும் மதிப்பிடப்பட்டுள்ளது. 2000ஆம் ஆண்டிலேயே தகவல் தொழில்நுட்பப் பூங்கா (டைடல் பார்க்) போன்றவை எதிர்கால நோக்குடன் அமைக்கப்பட்டதால்தான் தகவல் தொழில்நுட்பத்தில் தமிழ்நாடு அபரிதமாக வளர்ந்துள்ளது. அதுபோலத்தான் பரந்தூர் விமான நிலையமும்.

Tamil Nadu Government full explanation about Parantur Airport

எதிர்காலப் பொருளாதாரப் புரட்சிக்கு அடித்தளமாக அமையும் என கணிக்கப்பட்டுள்ளது. பரந்தூர் விமான நிலையம் பயணிகளின் வசதி என்பதைக் கடந்து, நாட்டின் தொழில் வளர்ச்சிக்கும் இன்றியமையாததாய்த் தேவைப்படுகிறது. திராவிட மாடல் அரசு எப்போதும் மக்களின் நலன்களை முன்வைத்தே திட்டங்களை உருவாக்கிச் செயல்படுத்தி வெற்றிகண்டு மக்களின் பாராட்டுகளைப் பெற்று வருகிறது என்பது நாடே நன்கு அறிந்த ஒன்றாகும். இந்நிலையில் பரந்தூர் விமான நிலையம் அமைப்பது தொடர்பாக அரசியல் கட்சிகளின் தலைவர்களில் யார் வேண்டுமானாலும் பரந்தூர் மக்களைச் சென்று சந்தித்து அவர்களின் குறைகளைக் கேட்டு அவற்றை அரசின் கவனத்திற் கொண்டு வரும் பட்சத்தில் நிச்சயம் தமிழ்நாடு அரசு மக்களின் குறைகளைப் பரிவுடன் ஆராய்ந்து மக்கள் நலனைப் பாதுகாக்கும்.

பரந்தூர் பகுதியின் நீர்நிலைகளையும் எந்த அளவிற்கு சீர்செய்ய முடியும் என்பதை ஆராய உயர்மட்டக்குழு  அமைக்கப்பட்டுள்ளது. அதன் பரிந்துரைகளையும் அரசு கவனத்தில் கொள்ளும். பரந்தூர் விமான நிலையம் தமிழ்நாட்டின் முன்னேற்றத்திற்கு உறுதியாகத் தேவைப்படும் ஒன்றாக இருக்கும் காரணத்தினால் மக்கள் பாதிக்காத வகையில் அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. வளர்ச்சி ஒருபுறம் என்றால் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படக் கூடாது என்பதிலும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மிகுந்த கவனத்துடன் செயல்படுகிறார்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சார்ந்த செய்திகள்