நாட்டின் பல மாநிலங்களில் மதுக்கடைகள் இன்று முதல் இயங்க ஆரம்பித்துள்ள நிலையில், ஒவ்வொரு கடையிலும் நூற்றுக்கணக்கான குடிமகன்கள் இதனைக் கொண்டாடி வருகின்றனர்.
கரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள சூழலில், தற்போது ஒருசில இடங்களில் இந்த ஊரடங்கு தளர்த்தப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக மகாராஷ்டிரா, கர்நாடகா, டெல்லி மற்றும் அசாமில் மதுக் கடைகளைத் திறக்க அம்மாநில அரசுகள் அனுமதி அளித்துள்ளன.
கர்நாடகாவில் 40 நாட்களுக்குப் பிறகு இன்று முதல், வணிக வளாகங்களில் அல்லாமல் தனியாக இயங்கும் மதுக்கடைகளைத் திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் சிவப்பு மண்டலத்தில் உள்ள கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் உள்ள வணிக வளாகத்தில் அமைந்துள்ள கடைகள் தவிர பிற இடங்களில் உள்ள மதுக் கடைகளைத் திறக்க அம்மாநில அரசு அனுமதி அளித்துள்ளது. மேலும், டெல்லியில் கரோனா பாதிப்பு குறைவாக இருக்கும் இடங்களில் கட்டுப்பாடுகளுடன் 150 மதுக்கடைகள் திறக்க அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து இன்று காலை முதலே நாட்டின் பல்வேறு மதுக்கடைகள் வெளியே கூட்டம் அலைமோத ஆரம்பித்தது. பல இடங்களில் தேங்காய் உடைத்து பூஜைகள் நடைபெற்றன, சில இடங்களில் கடை வாசலின் முன் நடனமாடி குடிமகன்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். சமூக இடைவெளியின் முக்கியத்துவம் குறித்து அரசாங்கம் தொடர்ந்து அறிவுறுத்தி வரும் சூழலில், அதனையெல்லாம் காற்றில் பறக்கவிட்டு காலை முதல் கடைகளில் அடித்து பிடித்து மது பாட்டில்களை வாங்கிச் செல்கின்றனர் மதுபிரியர்கள்.