Skip to main content

Exclusive: ‘தம்பி ஞானசேகரன்...’; சர்ச்சையைக் கிளப்பிய வீடியோ - விளக்கம் கொடுத்த அப்பாவு!

Published on 22/01/2025 | Edited on 22/01/2025
appavu explains video related to Anna University convict Gnanasekaran

சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கில் ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்டார். அதே சமயம் இந்த வழக்கை சென்னை அண்ணாநகர் துணை ஆணையர் சினேகபிரியா, ஆவடி துணை ஆணையர் ஐமான் ஜமால், சேலம் துணை ஆணையர்  ஆகியோர் அடங்கிய சிறப்புப் புலனாய்வுக்  குழு விசாரித்து வருகிறது. ஞானசேகரன் திமுகவைச் சேர்ந்தவர் என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டிய நிலையில், அவர் திமுக உறுப்பினர் இல்லை, ஆதரவாளர் என முதல்வர் மு.க.ஸ்டாலின் விளக்கம் அளித்தார்.

இந்த நிலையில் கடந்த பத்து நாட்களுக்கு முன்னதாக, சபாநாயகர் அப்பாவு புத்தக வெளியீட்டு விழா ஒன்றில் கலந்துகொண்டு பேசினார். அதில்.. என் தம்பி ஞானசேகரன் என அவர் பேசியதாக ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதற்கு பலரும் கடுமையான எதிர்ப்பை தெரிவித்தனர். அது எப்படி ஒரு பாலியல் குற்றவாளி உங்களுக்கு தம்பி ஆனார்? இப்போது தெரிகிறது அந்தக் குற்றவாளி திமுக தான் என..  என்று எதிர்த்தரப்பை சேர்ந்தவர்கள் கருத்து பதிவிட்டனர்.

தமிழக பாஜக தலைவர், தமிழக அரசு இந்த வழக்கை நேர்மையாக விசாரிக்கிறதா என்ற சந்தேகம் மக்கள் மத்தியில் இருக்கும் நிலையில், ஒரு பெண்ணுக்கு நேர்ந்த பாலியல் கொடுமை, உங்களுக்கு மேடை நகைச்சுவையா சபாநாயகர் அப்பாவு அவர்களே? எனக் கேள்வி எழுப்பியிருந்தார். இந்த நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவுவை தொடர்பு கொண்டு நாம் கேட்டபோது, “நிகழ்ச்சிக்கு வந்திருந்த ஒருவர் எனக்கு சால்வை போடுகிறார். அவரது பெயர் என்னெனக் கேட்டேன்.. ஞானசேகரன் என அவர் தன்னை அறிமுகம் செய்துகொண்டார். நான் உடனே இந்தப் பெயர்தானே இப்போது முக்கியமான பெயர் என்றேன்.. அதற்கு அவர்.. நான் அவரில்லை என ஜோக்காக சொல்கிறார். பிறகு.. நான் பேசும்போது.. இவரை கையைக் காட்டி.. என் தம்பி ஞானசேகரின் பெயர் கொண்டவர் எனப்  பேசினேன். அதை பாஜகவினர் ஒட்டி வெட்டி பரப்புகின்றனர்” என்று கூறினார். 

சார்ந்த செய்திகள்