மணிப்பூர் மாநிலத்தில் முதல்வர் பைரன் சிங் தலைமையிலான பா.ஜ.க ஆட்சி நடைபெற்று வரும் நிலையில், மாநிலத்தின் பெரும்பான்மை சமூகமான மைத்தேயி சமூகத்தினர், தங்களைப் பழங்குடியினர் பட்டியலில் சேர்த்து சலுகைகள் வழங்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். இதற்குப் பழங்குடியின மக்களான குக்கி மற்றும் நாகா மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனையடுத்து கடந்த ஆண்டு மே மாதம் 3ம் தேதி ஒருங்கிணைந்த பழங்குடியின மாணவர் அமைப்பு அந்த மாநிலத்தில் பேரணி நடத்தினர். இந்தப் பேரணியில் வன்முறை வெடித்தது.
இந்த வன்முறையைத் தொடர்ந்து பல நூறு பேர் கொல்லப்பட்டு, பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, வீடுகள் சூறையாடப்பட்டு, பல மக்கள் வீடுகளற்ற அகதிகளாக மாறினர். ஓரளவுக்கு அங்கு நிலைமை கட்டுக்குள் இருக்கிறது என்று கூறப்பட்டாலும், இன்னும் சில இடங்களில் துப்பாக்கிச் சூடு சம்பவங்களும் தொடர்ந்தபடியே தான் இருக்கின்றன.
இந்நிலையில் மணிப்பூரில் குக்கி சமூகத்தைச் சேர்ந்த தலைமைக் காவலர் சியாம் லால் என்பவர் கடந்த 14 ஆம் தேதி ஆயுதம் தாங்கிய குழுவினருடன் இருப்பது போன்ற காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலானது. அதனைத் தொடர்ந்து அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். சியாம் லால் பணியிடை நீக்கம் செய்ததை எதிர்த்து குக்கி சமூகத்தினர் சுராசந்த்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி காவல் நிலையத்தை சூறையாடினர்.
அப்போது கூட்டத்தை கலைக்க முயன்றபோது இரு தரப்பினருக்கும் ஏற்பட்ட மோதலில் இருவர் உயிரிழந்தனர். 25க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர். இதனால் மணிப்பூரில் மீண்டும் பதற்றமான சூழல் உருவாகியுள்ளது. சுராசந்த்பூர் மாவட்டம் முழுவதும் இணைய சேவை துண்டிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.