Skip to main content

துரோகிகள் வெளியேறுவதால்...! குஷ்புவுக்கு தமிழக மகிளா காங். தலைவர் பதிலடி!

Published on 15/10/2020 | Edited on 15/10/2020

 

Sudha State President at TamilNadu Mahila Congress

 

துரோகிகள் வெளியேறுவதால் காங்கிரஸ் இயக்கம் நிச்சயம் வலிமை பெறும். குஷ்பு அவர்களே விமர்சனங்களை நிறுத்திக் கொள்ளுங்கள். விமர்சனங்கள் தொடர்ந்தால் உரிய பதிலடி கிடைக்கும் என்பதை எச்சரிக்கையாகக் கூற விரும்புகிறேன் எனத் தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் தலைவர் வழக்கறிஞர் ஆர். சுதா கூறியுள்ளார்.

 

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''கட்சி மாறிய சந்தர்ப்பவாதத்தை நியாயப்படுத்த காங்கிரஸ் பேரியக்கம் மீது சேற்றை வாரி இறைக்க தொடங்கியிருக்கிறார் குஷ்பு. காங்கிரஸ் கட்சியின் உண்மை தொண்டர்களின் கேள்விகளுக்கு உங்களால் பதிலளிக்க முடியுமா?

 

காங்கிரசில் இணைந்தபோது என்னென்ன மரியாதை எல்லாம் தரப்பட்டது நினைவிருக்கிறதா? அகில இந்திய காங்கிரஸ் தலைவர் அன்னை சோனியா காந்தி, தலைவர் ராகுல்காந்தி முன்னிலையில் இணைந்தீர்கள். ஆனால், இன்று உங்கள் நிலைமை என்ன? இரண்டு நாட்களுக்கு முன்பு அத்தனை ஆரவாரத்தோடு பா.ஜ.க.வில் இணைய டெல்லி சென்ற உங்களை யார் வரவேற்றார்கள்? பத்தோடு பதினொன்றாக உங்களை இணைத்த கட்சிக்காகவா தொண்டர்களின் இயக்கமான காங்கிரசை பழிக்கிறீர்கள்?

 

தேசிய செய்தித் தொடர்பாளர் என்ற உயரிய பொறுப்பை காங்கிரஸ் உங்களுக்கு அளித்ததே? இப்போது குஷ்புவுக்கெல்லாம் பதவி கொடுக்க முடியாது என பா.ஜ.க.வினர் தொலைக்காட்சி விவாதங்களில் பேசுவது கேட்கிறதா குஷ்பு?

 

சிந்திக்க தெரியாத கட்சி என்று கூறியிருக்கிறீர்களே? ஆறு ஆண்டுகளாக உங்கள் மூளை எங்கிருந்தது என்று நான் கேட்டால் என்ன பதில் சொல்வீர்கள் ?


உழைப்பவர்களுக்கு பலன் கிடைப்பதில்லை என்கிறீர்களே? அடிமட்ட தொண்டர்களாக இருந்து இன்று காங்கிரஸ் சார்பாக சட்டமன்ற நாடாளுமன்றங்களை அலங்கரிக்கும் சகோதரிகள் ஜோதிமணி, விஜயதரணி, ரம்யா, ஹரிதாசை எல்லாம் உங்களுக்குத் தெரியாதா ?

 

பின் தங்கிய கிராமத்தில் மிகப் பிற்படுத்தப்பட்ட சமூகத்தில் பிறந்த நான் இளைஞர் காங்கிரஸ், மகளிர் காங்கிரஸ் எனப் படிப்படியாக உயர்ந்து இன்று மகளிரணி தலைவியாகி இருக்கிறேன். எல்லா காலகட்டத்திலும் எங்களைப் போன்றவர்களின் உழைப்பிற்கு காங்கிரஸ் கட்சி அங்கீகாரம் வழங்கியிருக்கிறதே தவிர ஒதுக்கியதில்லை, ஒடுக்கியதில்லை. ஆறு ஆண்டுகளில் காங்கிரஸ் உங்களுக்கு அளித்த அதீத வாய்ப்புகளுக்கான நன்றி கொஞ்சமாவது இருக்கிறதா ?


மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பெண் ஊராட்சி தலைவர்களிடம் கேளுங்கள். ராஜீவ் காந்தி கொண்டு வந்த சட்டத் திருத்தத்தால் பதவி கிடைத்ததை சொல்வார்கள். 100 நாள் வேலைவாய்ப்புத் திட்டத்தில் பயன்பெறும் பெண்களிடம் கேட்டால் காங்கிரஸ் கட்சியினால் பொருளாதாரம் சுதந்திரம் பெற்றதை சொல்வார்கள்.

 

kushboo

 

பெண்களுக்கான வாய்ப்பு குறித்து பேசுகிறீர்களே, பெண்களுக்கான 33 சதவிகித இட ஒதுக்கீட்டில் நீங்கள் இப்போது சேர்ந்திருக்கும் பா.ஜ.க. கட்சியின் நிலைப்பாடு என்ன?

 

Ad

 

பிரதமர் மோடிமீது கொண்ட நம்பிக்கையால் பா.ஜ.க.வில் சேர்ந்ததாக சொல்கிறீர்களே, அசுர பலத்துடன் ஆட்சியிலிருக்கும் பிரதமர் மோடி மகளிருக்கான 33 சதவிகித இட ஒதுக்கீட்டை சட்டமாக்க முன்வருவாரா? உங்களால் அதனை வலியுறுத்த முடியுமா ?


ஹத்ராஸ் விவகாரத்தில் மோடியைக் கடுமையாக விமர்சித்து விட்டு மனசாட்சிக்கு விரோதமாகவே பேசினேன் என்கிறீர்களே, உண்மையிலேயே உங்களுக்கு மனசாட்சி என்ற ஒன்று இருந்தால் அதனிடம் கேளுங்கள். உண்மை நிலையை அது உங்களுக்குச் சொல்லும்.

 

அழுத்தத்திற்கு உட்பட்டோ அல்லது எந்தப் பலனை எதிர்பார்த்தோ பா.ஜ.க.வில் நீங்கள் இணைந்திருக்கிறீர்கள், அது உங்கள் விருப்பம். அதற்காக தொண்டர்களால் கட்டி எழுப்பப்பட்ட காங்கிரசை களங்கப்படுத்த முயலவேண்டாம். மேகங்களால் வானை கறைப்படுத்த முடியாது. சில மேகங்கள் விலகும்போது வானம் இன்னும் அழகாகவே காட்சி தரும். துரோகிகள் வெளியேறுவதால் காங்கிரஸ் இயக்கம் நிச்சயம் வலிமை பெறும். குஷ்பு அவர்களே, ஆறு ஆண்டுகாலம் காங்கிரஸ் கட்சியில் இருந்தை மனசாட்சியோடு நினைவு கூர்ந்து விமர்சனங்களை நிறுத்திக் கொள்ளுங்கள். விமர்சனங்கள் தொடர்ந்தால் உரிய பதிலடி கிடைக்கும் என்பதை எச்சரிக்கையாகக் கூற விரும்புகிறேன். இவ்வாறு கூறியுள்ளார்.

 

 


 

சார்ந்த செய்திகள்