கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி ஆகிய தென் மாவட்டங்களின் பல இடங்களில் கனமழை பொழிந்து வருகிறது. நேற்று முன் தினம் இரவு முதல் தொடர்ந்து மழை பெய்து வருவதால் தாழ்வான பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்து மக்கள் தவித்து வருகின்றனர். பல்வேறு இடங்களில் போக்குவரத்து சேவையும் பாதிக்கப்பட்டுள்ளது.
தொடர் கனமழை எதிரொலியாக குடியிருப்பு பகுதிகள், சாலைகள், ரயில் நிலையம் என அனைத்து இடங்களிலும் வெள்ளம் சூழ்ந்துள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இதனையொட்டி, தூத்துக்குடி, திருநெல்வேலி, விருதுநகர் உள்ளிட்ட 8 மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. அதே போல், சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லும் விரைவு ரயில் ரத்து செய்யப்பட்டும், மாற்று பாதையில் இயக்கப்பட்டும் வருகின்றன. மேலும், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மற்றும் தென்காசி மாவட்ட மக்களுக்கான அவசர உதவிகளுக்கு உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், தென் மாவட்டங்களில் தொடர் கனமழைக்கு தமிழக அரசு சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் மீட்புப் பணிகள் குறித்து தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அப்போது அவர், “ஓராண்டில் பெய்ய வேண்டிய மழை ஒரே நாளில் பெய்துள்ளது. வரலாற்றில் காணாத அளவுக்கு 3 மாவட்டங்களில் மழை பெய்துள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார். நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய 3 மாவட்டங்களில் மீட்புப்பணி தீவிரமாக நடைபெற்று வருகின்றது. பணிகளுக்காக போதுமான படகுகளை தயாராக வைத்துள்ளோம்.
மக்களின் தேவைக்கேற்ப தென் மாவட்டங்களில் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், தூத்துக்குடியில் 96 சதவீத பேருந்துகள் இயங்கி வருகிறது. திருநெல்வேலி மாவட்டத்தில் மட்டும் 61 சதவீத பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. மாவட்ட நிர்வாகங்கள் அவசர உதவியாக கேட்கும் நிலையில், முன்னுரிமை அடிப்படையில் பேருந்துகள் இயக்கப்படும். பேருந்துகள் தொடர்ந்து பாதுகாப்பான இடங்களில் நிறுத்தப்பட்டு இயக்கப்படுகிறது. மீட்புப் பணிகளுக்காக ராணுவம், கடற்படை, விமானப்படை ஆகிய முப்படைகளின் உதவி கோரப்பட்டுள்ளது” என்று கூறினார்.