Skip to main content

‘பொங்கல் பதக்கங்கள் அறிவிப்பு’ - முதல்வர் மு.க. ஸ்டாலின் உத்தரவு!

Published on 13/01/2025 | Edited on 13/01/2025
Pongal Medals Announcement  CM MK Stalin order

2025ஆம் ஆண்டுக்கான பொங்கல் திருநாளையொட்டி 3 ஆயிரத்து 186 தமிழ்நாடு காவல்துறை மற்றும் சீருடை அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு பொங்கல் பதக்கங்கள் வழங்க தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக தமிழக உள்துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை கூடுதல் தலைமை செயலாளர் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், “தமிழ்நாட்டில் காவல், தீயணைப்பு மற்றும் மீட்புப்பணி, சிறைகள் மற்றும் சீர்திருத்தப் பணிகள் ஆகிய துறைகளில் பணியாற்றும் பணியாளர்கள் தமது பணியில் வெளிப்படுத்தும் நிகரற்ற செயல்பாட்டினை அங்கீகரித்து அவர்களை ஊக்குவிக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் திருநாளன்று தமிழக முதலமைச்சரின் பதக்கங்கள் அறிவிக்கப்பட்டு, வழங்கப்பட்டு வருகின்றன.

அந்த வகையில் இந்த ஆண்டு, காவல் துறையில் (ஆண் மற்றும் பெண்) காவலர் நிலை-2. காவலர் நிலை-1, தலைமைக் காவலர் மற்றும் சிறப்பு சார்பு ஆய்வாளர் நிலைகளில் 3 ஆயிரம் பணியாளர்களுக்கு, ‘தமிழக முதலமைச்சரின் காவல் பதக்கங்கள்’ வழங்க தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆணையிட்டுள்ளார். மேலும் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையில் முன்னணி தீயணைப்போர், இயந்திர கம்மியர் ஓட்டி, தீயணைப்போர் ஓட்டி (தரம் உயர்த்தப்பட்ட இயந்திர கம்மியர் ஓட்டி) மற்றும் தீயணைப்போர் (தரம் உயர்த்தப்பட்ட முன்னணி தீயணைப்போர்) ஆகிய நிலைகளில் 120 அலுவலர்களுக்கும். சிறைகள் மற்றும் சீர்திருத்தப் பணிகள் துறையில் முதல் நிலை வார்டர்கள் (ஆண்), இரண்டாம் நிலை வார்டர்கள் (ஆண்) மற்றும் இரண்டாம் நிலை வார்டர்கள் (பெண்) நிலைகளில் 60 பேர்களுக்கும், ‘தமிழக முதலமைச்சரின் சிறப்பு பணிப்பதக்கங்கள்’ வழங்க தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆணையிட்டுள்ளார்.

அதன்படி தமிழக முதலமைச்சரின் காவல் பதக்கங்கள் பதக்கங்கள் பெறுபவர்களுக்கு நிலைவேறுபாடின்றி மாதாந்திர பதக்கப்படி ரூ.400,  2025 பிப்ரவரி 1ஆம் தேதி முதல் வழங்கப்படும்.  மேலும், காவல் வானொலி பிரிவு, மோப்ப நாய் படைப் பிரிவு மற்றும் காவல் புகைப்படக் கலைஞர்கள் பிரிவுகளில் பணியாற்றும் அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் என ஒவ்வொரு பிரிவிலும் 2 நபர்கள் வீதம், மொத்தம் 6 அதிகாரிகள் மற்றும் அலுவலர்களுக்கு  ‘தமிழக முதலமைச்சரின் காவல் தொழில்நுட்ப சிறப்புப் பணிப் பதக்கம்’ வழங்க  முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆணையிட்டுள்ளார். இப்பதக்கங்கள் பெறும் அதிகாரிகள் மற்றும் அலுவலர்களுக்கு அவரவர்களின் நிலைகளுக்குத் தக்கவாறு ரொக்க தொகை வழங்கப்படும். மேற்கண்ட அனைவருக்கும் பின்னர் நடைபெறும் சிறப்பு பதக்க அணிவகுப்பு விழாவில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் கையொப்பத்துடன் கூடிய பதக்கச்சுருள் வழங்கப்படும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சார்ந்த செய்திகள்