நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காக பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர ஆலோசனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும், நாடாளுமன்றத் தேர்தலுக்கான பணிகளை அரசியல் கட்சிகள் தற்போதே தீவிரப்படுத்தி வருகின்றன. இத்தகைய சூழலில் இந்திய தேர்தல் ஆணையமும் மக்களவைத் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து தொடர்ந்து ஆய்வு நடத்தி வருகிறது.
அந்த வகையில் அ.தி.மு.க. சார்பில் தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காக தொகுதிப் பங்கீட்டுக் குழு, தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு, தேர்தல் பிரச்சாரக் குழு, தேர்தல் விளம்பரக் குழுக்கள் அமைக்கப்பட்டன. அதன்படி இந்தக் குழுவினர் தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதனையடுத்து, நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான விருப்ப மனு விநியோகம் பிப்ரவரி 21 ஆம் தேதி தொடங்கும் என அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார்.
அந்த வகையில், அ.தி.மு.க சார்பாக நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட விரும்புவோருக்கான விருப்ப மனு இன்று (21-02-24) முதல் விநியோகம் செய்யப்படுகிறது. மேலும், அ.தி.மு.க தலைமை அலுவலகத்தில் இன்று முதல் மார்ச் 1 வரை தினமும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை இந்த விருப்ப மனுக்களை பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, பல்வேறு அதிமுக நிர்வாகிகள், நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்காக விருப்ப மனுவை பெற்று வருகின்றனர்.
இந்த நிலையில், அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் மகன் ஜெயவர்தன் தென் சென்னை தொகுதியில் போட்டியிடுவதற்காக விருப்ப மனு பெற்றுள்ளார். இது குறித்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று (21-02-24) செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அப்போது அவர், “எனது மகனுக்கு சீட் கேட்பது வாரிசு அரசியலுக்குள் வராது. ஏனென்றால், கடந்த 2014ஆம் ஆண்டு பொதுச் செயலாளராக இருந்த ஜெயலலிதா, அந்த நாடாளுமன்றத் தேர்தலில் ஜெயவர்தன் போட்டியிட கையெழுத்து போட்டுள்ளார். அதனால், இது வாரிசு அரசியலில் வராது. அதிமுகவில் பற்று உள்ளவர்கள் எந்த நிலையிலும் தடம் மாறமாட்டார்கள். அதிமுகவில் உள்ளவர்களுக்கு வலை வீசி ஆள்பிடிக்கும் வேலையை பா.ஜ.க செய்து வருகிறது. எடப்பாடி பழனிசாமி, நடிகை திரிஷா குறித்து பேசிய அதிமுக முன்னாள் நிர்வாகி ஏ.வி.ராஜு மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் கூறினார்.