
தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அடுத்துள்ள முத்துலாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெய்சங்கர். இவரது மனைவி ரேவதி. இவர்களது மகன் நகுலன்(6). 2019ஆம் ஆண்டு டிசம்பர் 30 தேதி மாலை வீட்டிலிருந்து வெளியே விளையாடச் சென்ற நகுலன் அதன் பின்னர் வீடு திரும்பவில்லை. அவரது பெற்றோர் பல இடங்களில் தேடி கிடைக்காததால், எட்டயபுரம் காவல் நிலையத்தில் அடுத்த நாள் புகார் அளித்தனர்.
புகாரில், ஏங்கல் மகன் காணாமல் போன விவகாரத்தில் முத்துலாபுரத்தைச் சேர்ந்த செல்வராஜ் மகன் அருண்ராஜ் மீது சந்தேகம் உள்ளது என தெரிவித்திருந்தனர். இதனைத் தொடர்ந்து அப்போதைய விளாத்திகுளம் டி.எஸ்.பி. பீர் முகைதீன், போலீஸ் இன்ஸ்பெக்டர் கலா உள்ளிட்ட போலீசார் துப்பு துலக்கி முத்துலாபுரம் வைப்பாற்றில் பதுங்கி இருந்த அருண்ராஜை சுற்றி வளைத்து பிடித்து ஸ்டேசனுக்கு கொண்டு வந்து விசாரித்தனர். கஞ்சா போதையில் இருந்த அவர், சிறுவன் நகுலனை பாலியல் சித்திரவதைக்கு ஆளாக்கி கொலை செய்து விட்டதாக தெரிவித்தார். ஆனால் சிறுவன் உடல் எங்கே என்ற கேள்விக்கு அவரால் சரியாக பதில் தெரிவிக்க முடியவில்லை.
இந்நிலையில், சிறுவன் உடலை கண்டுபிடித்துத் தரக்கோரி முத்துலாபுரம் கிராம மக்கள் தூத்துக்குடி - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் டிசம்பர் 31ஆம் தேதி மறியலில் ஈடுபட்டனர். முத்துலாபுரம் ஆற்றுப்பாலம் மற்றும் வைப்பாறு படுகையோர பகுதிகளில் தேடுதல் வேட்டை நடத்தி காட்டுப்பகுதியில் கிடந்த சிறுவன் உடலை போலீசார் கைப்பற்றினர். பின்னர் சிறுவன் உடலை கிராம மக்களுக்கு போலீஸார் காண்பித்ததை தொடர்ந்து மறியலை கைவிட்டு கிராம மக்கள் கலைந்து சென்றனர். இந்த கொடூர கொலை சம்பவம் அப்பகுதி மக்களை வேதனைக்குக்கும் அதிர்ச்சிக்கும் உள்ளாக்கியது.
இச்சம்பவம் தொடர்பாக எட்டயபுரம் காவல் நிலைய போலீசார் போக்சோ சட்டப்பிரிவு, கொலை குற்றத்திற்கான சட்டப்பிரிவு மற்றும் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இவ்வழக்கின் விசாரணை தூத்துக்குடி போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இதில் நேற்று இவ்வழக்கின் குற்றவாளியான அருண்ராஜ்க்கு இரண்டு ஆயுள் தண்டனைகள் மற்றும் எஞ்சிய வாழ்நாள் முழுவதும் கடுங்காவல் சிறைத் தண்டனை, ரூபாய் 30 ஆயிரம் அபராதம் விதித்து போக்சோ நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இதனைத் தொடர்ந்து கொடூர கொலை சம்பவத்தில் குற்றவாளிக்கு தண்டனை பெற்றுத் தர நடவடிக்கை எடுத்த எட்டயபுரம் போலீசாருக்கும், நீதித்துறைக்கும் முத்துலாபுரம் கிராம மக்கள் நன்றியும் பாராட்டும் தெரிவித்தனர்.
செய்தியாளர் - எஸ்.மூர்த்தி