Skip to main content

மாதவிடாய் ஏற்பட்டதால் தடைப்பட்ட பூஜை; மூட நம்பிக்கையால் பறிபோன பெண்ணின் உயிர்!

Published on 06/04/2025 | Edited on 06/04/2025

 

Woman lost their life as she could not perform puja due to menstruation

உத்தரப்பிரதேச மாநிலம் ஜான்சி மாவட்டம் லால் கோலா குவான் பகுதியைச் சேர்ந்தவர்கள் முகேஷ் சோனி - பிரியான்ஷா சோனி(36) தம்பதியினர். இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். பிரியான்ஷா சோனிக்கு அதீத இறைவழிபாடும், பக்தியும் இருந்துள்ளது. அதன் காரணமாக இந்து பண்டிகையான நவராத்திரி விழாவை இந்த வருடம் சிறப்பு பூஜை, விரதம் என்று சிறப்பாக கொண்டாட மிகுந்த ஆர்வத்துடன் காத்திருந்துள்ளதாகக் கூறப்படுகிறது. 

இந்த நிலையில் கடந்த மார்ச் 30 ஆம் தேதி முதல் தொடங்கிய நவராத்திரி விழா ஏப்ரல் 7 ஆம் தேதி வரை கொண்டாடப்படவுள்ளது.  இந்த சூழலில்தான் நவராத்திரி விழாவை மிகுந்த ஆர்வத்துடன் எதிர்நோக்கி இருந்த பிரியான்ஷா சோனிக்கு கடந்த 30 ஆம் தேதி மாதவிடாய் ஏற்பட்டுள்ளது. இந்து மதத்தில் மாதவிடாய் காலங்களில் பெண்களை தீட்டு என்று ஒதுக்கி வைக்கும் மூடப்பழக்கம் இருந்து வரும் சூழலில் நவராத்திரிக்கு பிரியான்ஷா சோனியால் கடவுளுக்கு விரதம் இருந்து பூஜை செய்யமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது. 

இதனால் மிகுந்த மன வேதனைக்கு உள்ளான பிரியான்ஷா சோனி திடீரென விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த கணவர் முகேஷ் சோனி அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு சற்று உடல்நிலை தேறி வந்துள்ளார். அதன்பிறகு பிரியான்ஷா வீட்டிற்கு அழைத்து வரப்பட்ட நிலையில் மீண்டும் அவருக்கு உடல் நிலை பாதிப்பு ஏற்பட்டதைத் தொடர்ந்து மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக பிரியான்ஷா உயிரிழந்தார். 

மூடநம்பிக்கையால் பெண் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  

சார்ந்த செய்திகள்