![chennai City bus](http://image.nakkheeran.in/cdn/farfuture/fRyURUU0-fADqFgPV_GvotsRzWj243B5O_m6klivtFA/1589778197/sites/default/files/2020-05/chennai_city_bus_21.jpg)
![chennai City bus](http://image.nakkheeran.in/cdn/farfuture/g4eUg24Vi99HUB0f8eXr60NsJwzGpR3t7pC0n6KINjE/1589778199/sites/default/files/2020-05/chennai_city_bus_22.jpg)
![chennai City bus](http://image.nakkheeran.in/cdn/farfuture/qhKOIxRQgbTQVSDn2cazLir9XtMSLZAR50VINMAZm0M/1589778201/sites/default/files/2020-05/chennai_city_bus_24.jpg)
![chennai City bus](http://image.nakkheeran.in/cdn/farfuture/bgVrNpZhuGz1kp7bq08jOayttbqC5oGdzMiEsan-wa0/1589778201/sites/default/files/2020-05/chennai_city_bus_23.jpg)
![chennai City bus](http://image.nakkheeran.in/cdn/farfuture/hIT73ccKf7ZsD-M_vA358QQSmBFaykr9BbwCS5FiJ2c/1589778202/sites/default/files/2020-05/chennai_city_bus_25.jpg)
பல்வேறு தளர்வுகளுடன் 4-ஆம் கட்ட இன்று முதல் அமலுக்கு வந்துள்ள நிலையில் தமிழக அரசின் அனைத்து அலுவலகங்களும் இன்று (திங்கட்கிழமை) முதல் பாதி எண்ணிக்கையிலான ஊழியர்களுடன் இயங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு இருந்ததாவது, ஏற்கனவே பணி நேரத்தை இழந்திருப்பதால் அந்த இழப்பை ஈடுகட்டும் வகையில், வாரத்தில் சனிக்கிழமை உள்பட 6 நாட்களையும் பணி நாட்களாக முறைப்படுத்தப்பட்டுள்ளது. 6 நாட்களும் தற்போதுள்ள வழக்கமான பணி நேரத்தைப் பின்பற்றி அலுவலகம் இயங்க வேண்டும்.
அரசு ஊழியர்கள் 2 பிரிவாகப் பிரிக்கப்பட வேண்டும். முதல் வாரத்தின் திங்கட்கிழமை, செவ்வாய்க்கிழமையில் முதல் பிரிவினர் பணியாற்றுவார்கள். புதன்கிழமை, வியாழக்கிழமையில் இரண்டாம் பிரிவினரும்; வெள்ளிக்கிழமை, சனிக்கிழமையில் முதல் பிரிவினரும் பணியாற்ற வேண்டும்.
அடுத்த வாரத்தின் திங்கட்கிழமை, செவ்வாய்க்கிழமையில் இரண்டாம் பிரிவினரும், புதன்கிழமை, வியாழக்கிழமையில் முதலாம் பிரிவினரும், வெள்ளிக்கிழமை, சனிக்கிழமையில் இரண்டாம் பிரிவினரும் பணியாற்ற வேண்டும்.
இந்த மாற்று வேலை திட்டத்தின்படி ஊழியர் வீட்டில் இருந்தாலும், வேலைக்கு அழைத்தால் அலுவலகத்துக்கு வர வேண்டும். சம்பளப் பட்டியலின்படி குரூப் ஏ பிரிவில் வரும் அனைத்து அரசு ஊழியர்களும் அனைத்து வேலை நாட்களிலும் அலுவலகத்துக்கு வர வேண்டும்.
அதுபோல, சம்பளப் பட்டியலின்படி அல்லாமல், அலுவலகத்தின் தலைமைப் பணியில் இருக்கும் ஊழியர்களும் அனைத்து வேலை நாட்களிலும் அலுவலகத்துக்கு வர வேண்டும். அனைத்து அதிகாரிகள், ஊழியர்களும் பணிக்கு வரத் தயாராக இருப்பதோடு, மின்னணு முறை தகவல் பரிமாற்றத்தையும் ஏதுவாக வைத்திருக்க வேண்டும்.
தலைமைச் செயலகத்தில் இருந்து மாவட்டம் மற்றும் கள அளவிலான அரசு அலுவலகங்கள், ஆணையங்கள், வாரியங்கள், அரசு கழகங்கள், நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள், அரசு சங்கங்கள் உள்ளிட்ட அனைத்து அரசு நிறுவனங்களும் இந்த வகையில் இயங்கும்.
போலீஸ், மாவட்ட நிர்வாகம், அரசுக் கருவூலம், உள்ளாட்சி அமைப்பு அலுவலகங்கள் கடந்த மார்ச் 25-ஆம் தேதி பிறப்பிக்கப்பட்ட ஆணைப் படி செயல்படும். அலுவலகத்துக்கு வந்து செல்வதற்கான போக்குவரத்து வசதிகள் செய்து தரப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
![http://onelink.to/nknapp](http://image.nakkheeran.in/cdn/farfuture/f2-6VTdahUk7PVCzbD7NULmsVnFxGOu4I_v4Ab8hcRE/1586170537/sites/default/files/inline-images/500x300-article-inside-ad-gif.gif)
இன்று முதல் அரசு அலுவலகங்கள் செயல்படுவதால் அரசு ஊழியர்கள் பணிக்குச் செல்ல சென்னை கோயம்பேட்டில் மாநகரப் பேருந்துகளைத் தயார் செய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.