தங்களது சொந்த மாநிலத்திற்கு நடைப்பயணமாக சென்ற 16 புலம்பெயர் தொழிலாளர்கள் மகாராஷ்ட்ர மாநிலம், அவுரங்காபாத்தில், ரயில் விபத்தில் உயிரிழந்த நிலையில், அவர்களது குடும்பங்களுக்கு ஐந்து லட்ச ரூபாய் நிதியுதவி அளிக்கப்படும் என மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே அறிவித்துள்ளார்.
மகாராஷ்டிராவிலிருந்து புலம்பெயர் தொழிலாளர்கள் மத்தியப் பிரதேச மாநிலத்துக்கு ரயில் இருப்புப்பாதை வழியாக நடந்து சென்றுள்ளனர். இன்று அதிகாலை அவர்கள் அவுரங்காபாத்-ஜல்னா ரயில் பாதையில் நடந்துவந்தபோது உடல் அசதி காரணமாக ரயில் தண்டவாளத்தில் படுத்துத் தூங்கியுள்ளனர்.
அப்போது காலை 5.30 மணி அளவில் அந்த வழியே சரக்கு ரயில் ஒன்று வந்துள்ளது. ரயில் தண்டவாளத்தில் தொழிலாளர்கள் படுத்திருப்பதைக் கண்ட ரயில் ஓட்டுநர் ரயிலை நிறுத்த முயன்றும் முடியாததால் தண்டவாளத்தில் படுத்திருந்த தொழிலாளர்கள் மீது ரயில் ஏறிச் சென்றது. இந்தச் சம்பவத்தில் 14 பேர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மீதமுள்ள இருவர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் சோகத்தை ஏற்படுத்தியுள்ள இந்த விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் மோடி, ராகுல் காந்தி உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், இந்த விபத்தில் உயிரிழந்தவராளின் குடும்பங்களுக்கு ஐந்து லட்ச ரூபாய் நிதியுதவி அளிக்கப்படும் என மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே அறிவித்துள்ளார்.