நிதி நெருக்கடியும் கடன் சுமையும் அதற்கான வட்டி தொகையும் அதிகரித்து வரும் நிலையில், தமிழக அரசின் கஜானா காலியாகி வருகிறது. இதே நிலை நீடித்தால் அரசு திவாலாக வேண்டியதுதான் என்கிற எச்சரிக்கையை முதல்வர் எடப்பாடிக்குத் தெரிவித்தப்படி இருந்தார்கள் அரசின் உயரதிகாரிகள்.
இந்த நிலையில்தான், மதுக் கடைகளைத் திறந்தது எடப்பாடி அரசு. அதனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், முதலில் சில நிபந்தனைகளுடன் அனுமதித்த சென்னை உயர்நீதி மன்றம், நிபந்தனைகளை அரசாங்கத்தால் அமல்படுத்த முடியவில்லை எனக் கண்டித்து, மதுக் கடைகள் திறப்புக்குத் தடை விதித்து விட்டது.
இரண்டு நாள் கடை திறப்பில் சுமார் 300 கோடி ரூபாய் எடப்பாடி அரசுக்கு வருவாயாக கிடைத்திருந்தாலும் மதுக் கடை திறப்புக்குத் தடை விழுந்ததில் எடப்பாடிக்கு ஏக அப்-செட் என்கிறார்கள் கோட்டை அதிகாரிகள். இந்த நிலையில், மத்திய மோடி அரசின் மீதும் செம கோபத்தில் இருக்கிறார்கள் முதல்வர் உள்ளிட்ட சீனியர் அமைச்சர்கள்.
குறிப்பாக, கரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக தங்கள் மாநிலத்துக்கு குறிப்பிட்ட அளவிலான நிதியை ஒதுக்கீடு செய்ய வேண்டும் எனப் பிரதமர் மோடிக்கு தொடர்ச்சியாகக் கோரிக்கை வைத்தப்படி இருக்கிறார் எடப்பாடி. இதனை அடிக்கடி டெல்லிக்கு தலைமைச் செயலாளர் சண்முகம் நினைவுப்படுத்தியும் வருகிறார். ஆனால், மத்திய அரசோ தமிழகத்தை மாற்றாந்தாய் மனநிலையிலேயே அணுகிக் கொண்டிருக்கிறது.
பேரிடர் காலத்தில் கொடுத்து உதவ வேண்டிய நிதி உதவியைக் கூட தர வேண்டாம்; ஆனால், தமிழகத்துக்கு நியாயமாகத் தர வேண்டிய ஜி.எஸ்.டி. நிலுவைத் தொகையையாவது தாருங்கள் எனக் கெஞ்சாத குறையாக டெல்லிக்குத் தகவல் அனுப்பி வருகின்றனர் அதிகாரிகள். ஆனால், அசைந்து கொடுக்கவில்லை டெல்லி. இதனால், மத்திய அரசு மீது செம காட்டத்தில் இருக்கிறது எடப்பாடி அரசு.