பெண்கள் மீதான தொடர் தாக்குதலுக்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் கடும் கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளி்யிட்டுள்ளார்.
’’மதுரை மாவட்டம் திருமங்கலம் நடுவக்கோட்டையையைச் சேர்ந்த சித்ராதேவி என்ற பள்ளி மாணவி காதலிக்க மறுத்ததால் அதேஊரைச் சேர்ந்த பாலமுருகன் என்பவரால் பெட்ரோல் ஊற்றி எரிக்கப்பட்ட நிலையில், இன்று உயிரிழந்தார் என்ற செய்தி கேட்டு பேரதிர்ச்சியடைந்தேன். தங்களது பெண்ணிற்கு தொந்தரவு கொடுப்பதாக பாலமுருகன் மீது அந்த மாணவியின் பெற்றோர் புகார் அளித்தும் காவல்துறையினர் நடவடிக்கை எடுக்காமல் அலட்சியமாக இருந்ததன் விளைவு, இன்று பெண்ணின் உயிர் பறிபோய் இருப்பதாக அவர்கள் வேதனை தெரிவித்துள்ளார்கள். மாணவி சித்ராவதேவியின் மரணத்திற்கு காரணமான பாலமுருகன் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆளுங்கட்சியின் ஏவல்துறையாக செயல்படாமல், மக்களுக்காக சேவை செய்யும் துறையாக காவல்துறை செயல்படவேண்டும்.
சென்னையை அடுத்த நாவலூரில் உள்ள தனியார் மென்பொருள் நிறுவனத்தில் பொறியாளராக பணிபுரிந்து வரும் லாவண்யாவை தாக்கி வாகனம், பணம், நகைகளை மர்மநபர்கள் கொள்ளையடித்த சம்பவத்தையும், சென்னை மடிப்பாக்கம் அருகே வாணுவம்பேட்டையில் ரத்த பரிசாதனை மையத்தில் அந்த மையத்தின் உரிமையாளர் ராஜா என்பவரால் ஆசிட் ஊற்றி யமுனா என்ற பெண் எரிக்கப்பட்டு கொல்லப்பட்டுள்ளார்.
இதுபோன்று பெண்கள் மீது தொடர் தாக்குதல் நடந்து வருவதை நான் வன்மையாக கண்டிக்கிறேன். நடு இரவில் பெண் ஒருவர் நடந்து செல்லும் காலம் எப்பொழுது வருகிறதோ அப்பொழுதுதான் உண்மையான சுதந்திரம் நாட்டிற்கு கிடைத்ததாகும். ஆனால் சுதந்திரம் அடைந்தும் 70 ஆண்டுகளை கடந்துள்ள நிலையிலும் பெண்கள் மீது தொடர்ந்து வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டு வருவது உண்மையிலே கண்டிக்கத்தக்கது. இனி வரும் காலங்களில் பெண்களின் பாதுகாப்பை தமிழக அரசு உறுதிசெய்யவேண்டும். இன்னுயிர்களை இழந்துவாடும் அவரது குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன். அவர்களது ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன். பாதிக்கபப்ட குடும்பத்திற்கு அரசு உரிய நிவாரணமும், பாதிக்கப்பட்ட லாவண்யாவுக்கும் அரசு உதவிகள் செய்யவேண்டும். ஹர்சினி கொலை வழக்கில் தர்ஷன் என்பவனுக்கு தூக்குதண்டனை விதிக்கப்பட்டுள்ள தீர்ப்பு வரவேற்கதக்கது. இதுபோல் தீர்ப்புகள் கடுமையாக இருந்தால் தான் பெண்கள் மீது தொடர்ந்து வரும் பாலியல் கொடுமைகள் நிகழாவண்ணம் காப்பாற்றமுடியும். அதற்கு அரசும், நீதிமன்றமும் இதுபோன்ற குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்.
மேலும் சென்னை ஐஐடியில் மத்திய அமைச்சர்கள் பங்கேற்ற விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்திற்கு பதிலாக சமஸ்கிருதத்தில் கடவுள் வாழ்த்து பாடப்பட்டுள்ளது. தமிழகத்தில் தொன்றுதொட்டு வரும் பழக்கத்தை மாற்ற முயல்வது அனுமதிக்க முடியாது. இதுபோன்ற நிகழ்வுகள் எதிர்காலத்தில் நிகழா வண்ணம் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் தமிழ் மொழிக்கு பின்னடைவை ஏற்படுத்தும் எந்தவொரு விஷயத்தையும் தேமுதிக பொறுத்துக்கொள்ளாது.’’