மகாராஷ்டிரா மாநிலத்தில் முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் சிவசேனா மற்றும் பா.ஜ.க. கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இதில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் 2 ஆம் தேதி தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அஜித் பவார் மற்றும் தனது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 8 பேர், பா.ஜ.க. மற்றும் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா அணியில் இணைந்தனர். அதனைத் தொடர்ந்து, மகாராஷ்டிரா துணை முதலமைச்சராக அஜித் பவார் பதவி ஏற்றுக் கொண்டார். அவரது அணியைச் சேர்ந்த 8 பேர் முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அமைச்சரவையில் அமைச்சர்களாகப் பதவி ஏற்றுக் கொண்டனர்.
இத்தகைய சூழலில் நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி நாடு முழுவதும் மொத்தம் ஏழு கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. அதே வேளையில் நாடு முழுவதும் தேர்தல் நடத்தை விதிகளைத் தேர்தல் ஆணையம் அமலுக்கு கொண்டு வந்துள்ளது. இதனையொட்டி அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதிப் பங்கீடு, வேட்பாளர்கள் எனத் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.
இந்நிலையில் பா.ஜ.க. கூட்டணியில் உள்ள அஜித் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு பாராமதி மக்களவைத் தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதனையடுத்து பாராமதி தொகுதியில் பா.ஜ.க. கூட்டணி சார்பாக தேசியவாத காங்கிரஸ் தலைவர் அஜித்பவாரின் மனைவி சுனித்ரா போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டது. ஆனால் அஜித்பவாரின் மனைவி சுனித்ராவை எதிர்த்து பாராமதி தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட உள்ளதாக ஏக்நாத் ஷிண்டே சிவசேனா நிர்வாகி விஜய் ஷிவதாரே பேசியுள்ளார். இதனால் மகாராஷ்டிரா பா.ஜ.க. கூட்டணியில் தொடர்ந்து மோதல் போக்கு இருந்து வருவதாக கூறப்படுகிறது. மேலும் கூட்டணியில் இருந்துகொண்டே போட்டி வேட்பாளராக களமிறங்கும் விஜய் ஷிவதாரேவை சிவசேனாவில் இருந்து நீக்காவிட்டால், பா.ஜ.க. கூட்டணியில் இருந்து வெளியேறப்போவதாக அஜித்பவார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.