Skip to main content

திகார் சிறையில் இருந்து வெளியே வந்த அரவிந்த் கெஜ்ரிவால்!

Published on 13/09/2024 | Edited on 13/09/2024
Arvind Kejriwal came out of Tihar Jail

டெல்லி மதுபானக் கொள்கை தொடர்பான பணமோசடி வழக்கில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத்துறையால் கடந்த மார்ச் மாதம் 21ஆம் தேதி கைது செய்யப்பட்டார். சுமார் 50 நாட்கள் திகார் சிறையில் அடைக்கப்பட்ட அரவிந்த் கெஜ்ரிவால், தன் மீதான கைது நடவடிக்கையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கை விசாரித்து வந்த உச்சநீதிமன்றம் கடந்த மே மாதம் 10ஆம் தேதி அவருக்கு இடைக்கால ஜாமீன் வழங்கியது.

மேலும் அந்த ஜாமீன் உத்தரவில், அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜூன் 1 வரை மட்டுமே இடைக்கால ஜாமீன் வழங்குவதற்கான உத்தரவைப் பிறப்பிப்பதாகத் தெரிவித்திருந்தது. அதோடு ஜூன் 2ஆம் தேதி அரவிந்த் கெஜ்ரிவால் சரணடைய நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதன் பிறகு, அரவிந்த் கெஜ்ரிவால் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்தார். இதனிடையே, தனக்கு வழங்கப்பட்ட இடைக்கால ஜாமீனை நீட்டிக்கக் கோரி அரவிந்த் கெஜ்ரிவால் மனுத்தாக்கல் செய்திருந்தார். ஆனால், அந்த மனு நிராகரிக்கப்பட்டதால், ஜூன் 2ஆம் தேதி, அரவிந்த் கெஜ்ரிவால் திகார் சிறையில் சரணடைந்தார். இதனை தொடர்ந்து, ஜூன் 26ஆம் தேதி இந்த முறைகேடு தொடர்பாக விசாரிப்பதற்காக அரவிந்த் கெஜ்ரிவாலை சி.பி.ஐ கைது செய்தது. 

இதனிடையே, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், அமலாக்கத்துறை தன்னை கைது செய்தது தவறு எனக் குறிப்பிட்டு டெல்லி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. இருப்பினும். சி.பி.ஐ கைது செய்ததன் காரணமாக அரவிந்த் கெஜ்ரிவால் திகார் சிறையிலேயே இருந்து வந்தார். இந்த நிலையில், சிபிஐ கைது செய்திருப்பதை எதிர்த்து அரவிந்த் கெஜ்ரிவாலின் அளித்த ஜாமீன் மனு தொடர்பான வழக்கு இன்று (13-09-24) விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், பல்வேறு நிபந்தனைகள் விதித்து அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு, சி.பி.ஐ கைது செய்த வழக்கில் ஜாமீன் வழங்கியது. 

உச்சநீதிமன்றம் ஜாமீன் அளித்ததை அடுத்து டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்தற்போது திகார் சிறையில் இருந்து வெளியே வந்தார். வெளியே வந்த அவரை ஆம் ஆத்மி கட்சியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். இதையடுத்து, அரவிந்த் கெஜ்ரிவால் தனது தொண்டர்கள் மத்தியில் உரையாற்றினார். அப்போது அவர், “கடவுள் என் பக்கம் இருக்கிறார்; நான் நேர்மையானவன். சிறை வைப்பதன் மூலம் என்னை ஒடுக்க நினைத்தனர். முன்பை விட 100 மடங்கு வலிமையோடு உள்ளேன்” எனப் பேசினார்.  

சார்ந்த செய்திகள்