இருபது சதவிகித ஆக்சிஜனை பூமிக்கு உற்பத்தி செய்து தருவதால் பூமியின் நுரையீரலாக கருதப்படும் அமேசான் காடுகள் அடிக்கடி எரிந்து புகைவதால் புவிவெப்பமயமாதல் அதிகரிக்கிறது என்று விஞ்ஞானிகள் எச்சரித்து வருகிறார்கள். இந்த காட்டுத்தீயானது இயற்கையானது அல்ல. திட்டமிட்ட செயல் என்றே சூழல் செயல்பாட்டாளர்களால் பார்க்கப்படுகிறது. பிரேசில் நாட்டின் அதிபராக சயீர் போல்சனரார் பதவியேற்றபிறகு அமேசான் காடழிப்பு மிகவும் அதிகரித்துள்ளது என்ற குற்றச்சாட்டும் நிலவுகிறது.
எங்கோ எரிகிறது என்று அலட்சியத்துடன் இருந்த உலக மக்கள், அமேசான் காடுகள் முழுவதும் எரிந்தால் உலகமே இல்லை என்று உணர்ந்து, அக்காடுகள் குறித்து கவனம் செலுத்தி வருகின்றனர். வளர்ச்சி என்கிற பெயரில் அமேசான் காடுகளை அழித்து வரும் சயீர் போலசனராருக்கு இது எரிச்சலை தந்துள்ளது. அதனால்தான், ஐநா பொதுசபை கூட்டத்தின் அவர் பேசியபோது, ‘’அமேசான் எரிக்கப்படவில்லை. நம்பிக்கை இல்லையென்றால் நேரில் வந்து பார்த்துக்கொள்ளலாம். தவிர, அமேசானை உலகத்தின் நுரையீரல் என்றும், மனிதகுலத்தின் பொக்கிசம் என்றும் உலகத்தினர் தவறான நம்பிக்கை கொண்டிருக்கிறார்கள். அமேசான் உலகின் நுரையீரல் என்று அர்த்தமற்ற வாதம் செய்துகொண்டிருக்கிறார்கள்’’என்று ஆத்திரப்பட்டுள்ளார்.
உலகமே உற்றுநோக்குவதால் செய்வதறியாது பிதற்றுகிறார் சயீர் போல்சனரார். காட்டழிப்பை நிறுத்தினால் கவலைகொள்ளாதிருக்கும் உலகம்.