![ammk 33](http://image.nakkheeran.in/cdn/farfuture/W4hB7Dgjby1oaXA7hDaw7_JhQb7DZG-Re2E3QOmey4k/1597506798/sites/default/files/inline-images/ammk%2021.jpg)
தமிழகத்தில் 2021 ஆம் ஆண்டு சட்டமன்ற பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கு இன்னும் எட்டு மாதங்களே உள்ள நிலையில் ஒவ்வொரு அரசியல் கட்சிகளும் தேர்தல் வியூகங்களை வகுத்து வருகின்றது.
தினகரன் கட்சி துவங்கிய காலங்களில் பட்டிதொட்டி முதல் பட்டணம் வரை கூடிய கூட்டம் எல்லாம் அரசியல் கட்சியினரை திரும்பிப் பார்க்க வைத்தது.
பெரும்பாலான தொகுதிகளில் அமமுக வேட்பாளர்கள் வெற்றி பெறுவார்கள் என்று கருத்துக்கணிப்புகள் வெளியாகின. ஆனால் தேர்தல் முடிவுகள் வேறு மாதிரி அமைந்தது பல வேட்பாளர்கள் டெபாசிட் இழந்தனர். அதே சமயம் ஊரக உள்ளாட்சித் தேர்தலில் வேட்பாளர்களை களம் இறக்கிய தினகரன் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை என்றாலும் கூட அமமுக வேட்பாளர்கள் கணிசமான வாக்குகளை பெற்றனர்.
தற்போது சட்டப்பேரவை தேர்தலை மையமாக வைத்து எம்ஜிஆர் திட்டத்தை நடைமுறைப்படுத்த ஆரம்பித்துவிட்டனர்.
திருச்சி மாநகராட்சியை பொறுத்தவரை கோ-அபிஷேகபுரம், ஸ்ரீரங்கம், அரியமங்கலம், பொன்மலை என நான்கு கோட்டங்கள் உள்ளன. அம்மா மக்கள் முன்னேற்ற கழக திருச்சி மாநகர் மாவட்டத்தில் அரசியல் ரீதியாக 8 பகுதிகள் 82 வட்ட கழகங்கள் உள்ளன. மலைக்கோட்டை, பாலக்கரை, ஏர்போர்ட் பகுதிகளில் பகுதிக்கு 10 வட்ட கழகங்களும் , ஜங்ஷன் பகுதியில் 12 வட்ட கழகமும், தில்லைநகர், உறையூர் பகுதிகளில் 11 வட்ட கழகங்களும் உள்ளன. பொன்மலை, திருவரம்பூர் பகுதிகளில் தலா 9 வட்ட கழகங்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது.
8 பகுதிக்கு 82 வட்டக் கழக நிர்வாகிகள் நியமிக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றனர். திருவரம்பூர் வடக்கு, தெற்கு என 20 ஒன்றியங்கள் உள்ளது. பனையங்குறிச்சி, குவளக்குடி, கீழமுள்ளக்குடி, வேங்கூர், அரசங்குடி, நடராஜபுரம், கிளியூர், பத்தாளப்பேட்டை, கிருஷ்ணசமுத்திரம், வாழவந்தான் கோட்டை, திருநெடுங்களம் எனவும், தெற்கு ஒன்றியத்தில் கீழக்குறிச்சி, குண்டூர், கும்பக்குடி, நவல்பட்டு, சோழமாதேவி, பணங்களாங்குடி, அசூர் என மொத்தம் 20 ஊராட்சிகள் உள்ளன. திருவரம்பூர் குண்டூர் பேரூராட்சி ஒன்றிய கிளை கழக அமமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில், அமமுக மாநகர் மாவட்ட செயலாளர் ஜெ. சீனிவாசன் கலந்துகொண்டு 12 பக்க தீர்மானம் பதிவேடு புத்தகத்தை கொடுத்திருக்கிறார்.
![ammk](http://image.nakkheeran.in/cdn/farfuture/NxerxPbrqPZ6zWh4d-FEs5uziDlYwUCvdED7KKB60Ys/1597506919/sites/default/files/inline-images/ammk%2023_0.jpg)
அந்த புத்தகத்தின் முகப்பு அட்டையில் தமிழகம் தலை நிமிரட்டும் தமிழர் வாழ்வு மலரட்டும் அமமுக கொடியுடன் பெரியார், அண்ணா, எம்ஜிஆர் படமும் ஜெயலலிதா சசிகலா படமும் அச்சிடப்பட்டு தினகரன் புகைப்படம் நடுவே அமைக்கப்பட்டுள்ளது. தீர்மானம் பதிவேட்டில் மாவட்ட கழகத்தின் பெயர், பகுதி, ஒன்றியம் நகரம், பேரூராட்சி, வட்டம், வார்டு கிளை கழகத்தின் பெயர் என அச்சிடப்பட்டு தீர்மானப் பதிவேடு வழங்கப்பட்டது. தீர்மான பதிவேடு புத்தகம் 12 பக்கங்கள் உள்ளன. பத்து பக்கங்கள் நிர்வாகிகள் பெயர், விலாசத்திற்காக அச்சிடப்பட்டுள்ளன. முதல் பக்கத்தில் வட்டக் கழக, வார்டு கழக, கிளை கழக செயலாளர் பெயர், பாகம் எண், வாக்காளர் அட்டை, ஆதார் எண் கையொப்பம், கைபேசி எண், புகைப்படத்திற்கான இடம் பெற்றுள்ளது. இரண்டு சாட்சிகளின் கையொப்பம், பெயர், உறுப்பினர் பெயர் இடம் பெற்றுள்ளது.
அவைத் தலைவர், செயலாளர், இணைச்செயலாளர் (ஆண், பெண் ) துணைச் செயலாளர் (ஆண், பெண்) பொருளாளர், மேலமைப்பு பிரதிநிதி மகளிர் இரண்டு நபர்களும் ஆண்கள் இரண்டு நபர்களும் என 12 நிர்வாகிகளும் 6 செயற்குழு உறுப்பினர்கள் நிர்வாகிகளாகவும்
33 உறுப்பினர்களாகவும் கொண்ட தீர்மானம் பதிவேடு அச்சிட்டு வழங்கப்பட்டுள்ளது.
ஒன்றிய கழக நிர்வாகிகள் கிளை கழகம் அமைக்க வேண்டும். ஒன்றியம் மூலம் பதிவேட்டில் கூறப்பட்டுள்ள கிளைக்கழக நிர்வாகிகளை மாநகர் மாவட்ட செயலாளர் சீனிவாசன் ஒவ்வொருவரிடமும் நேரில் பேசி ஒப்புதல் பெற்று பதிவேட்டினை தலைமை கழகம் அனுப்பி ஒப்புதல் கையொப்பம் பெற்று இப்பதிவேடு ஒன்றிய கழகத்திற்கு வழங்கப்படும்.
கிளை கழகத்திற்கு மாவட்டச் செயலாளர் கிராமம் கிராமமாக ஒன்றியத்திற்கு நேரடியாக களத்திற்கு சென்று பதிவேட்டினை வழங்கி கிளை கழகங்களை அமைத்து நிர்வாகிகளுடன் ஆலோசனை வழங்கி வருகிறார்.
இச்செயல் திட்டம் தான் எம்ஜிஆர் நடைமுறைப் படுத்திய வெற்றியை தேடித் தந்த திட்டமாகும். கிளைக் கழகம் என்பது அன்றைய காலக்கட்டங்களில் 25 உறுப்பினர்களை சேர்த்து அமைப்பது ஆகும் என்றனர். அது மட்டுமின்றி எம்ஜிஆர் மன்றம், அம்மா பேரவை, இளைஞர் அணி, மகளிர் அணி, மாணவர் அணி, அம்மா தொழிற்சங்கம், வழக்கறிஞர் பிரிவு, சிறுபான்மையினர் நலப் பிரிவு, மாவட்ட விவசாய பிரிவு, மருத்துவ அணி, மீனவர் அணி, இலக்கிய அணி, அமைப்பு சாரா ஓட்டுநர்கள் அணி, இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறை, தகவல் தொழில்நுட்பம் ஆண், தகவல் தொழில்நுட்பம் பெண் ,வர்த்தக அணி, பொறியாளர் அணி, நெசவாளர் அணி என 20 சார்பு அணி நிர்வாகிகள் உள்ளனர்.
![ammk](http://image.nakkheeran.in/cdn/farfuture/cPn6kG4GNzumUkZdcvG02nx01R8YUXj3HVrgaWnfXLs/1597507004/sites/default/files/inline-images/ammk%2024.jpg)
இதுகுறித்து மூத்த அதிமுகவினரிடம் பேசுகையில்,
திருச்சி வெல்லமண்டியில கூட்டம் நடக்கும் போது செக்க செவேல்னு சிரிச்ச முகத்தோடு தலையில் தொப்பியோடு கருப்பு கண்ணாடி அணிந்து வருவார். அவர் தான் எம்ஜிஆர். அவர் தலை தெரிந்த உடனே மக்கள் கூட்டம் ஆர்ப்பரிக்கும். இளைஞர் பட்டாளத்தினர் விசில் சத்தம் பட்டைய கிளப்பும். அவரது சிரித்த முகமும், பாடல்களும் ரிக்ஷாக்காரரிலிருந்து ஏழை, எளியவர்களிடமும் கொண்டு சேர்த்த வசீகர முகமாக இருந்தது.
அந்த அணுகுமுறை அனைவரையும் வெகுவாக கவர்ந்தது. ஆனாலும் கிளைக்கழக கட்டமைப்பு ஒவ்வொரு வாக்காளரிடமும் வீட்டுக்கே கொண்டு சேர்த்தது.
ஒவ்வொரு ஒன்றியங்களிலும் இருபத்தி ஐந்து நபர் கொண்ட கிளைக் கழகங்களை அமைத்தார். கிளைக் கழக நிர்வாகிகளே ஒன்றிய பூத் கமிட்டிக்கு அவைத் தலைவர் செயலாளர் பொருளாளர் பதவியை வகிப்பார் மாவட்டச் செயலாளர்கள் யார் வேண்டுமானாலும் மாறலாம். ஆனால் பூத் கமிட்டி நிர்வாகிகள் அதாவது கிளை கழக நிர்வாகிகள் முக்கிய அணி நிர்வாகியாக செயல்படுவார்கள்.
தேர்தல் நேரத்தில் கிளைக்கழக நிர்வாகிகளே ஒவ்வொரு ஊரிலும் உள்ளூர் அங்காளி பங்காளியிடம் மாமன் மச்சினனிடம் உரிமையாக வாக்கு சேகரிப்பாளராக இருப்பார்கள்.
அதுவே வெற்றிக்கான கட்டமைப்பாக இருந்தது.
திருச்சியை பொருத்தமட்டில் கே. சௌந்தரராஜன் முதல் மாவட்ட செயலாளராக இருந்து ஒன்றியங்களில் கிளைக் கழகங்களை அமைத்தார். பின்பு பாட்டா கோபால், ரத்தினவேல், முருகையன், பரமசிவன், நடராஜன், பரஞ்சோதி, மரியம்பிச்சை , மனோகர், வெல்லமண்டிநடராஜன் குமார் என மாவட்டச் செயலாளர்கள் தொடர்கிறார்கள்.
1991 முதல் 1996 வரையிலும், 2001 முதல் 2006 வரையிலும் 2011 முதல் இன்று வரை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஜெ. ஜெயலலிதா தலைமையில் ஆட்சி அமைத்தது. எம்ஜிஆர் மறைவிற்குப் பின்பு ஜெ, ஜானகி என இரு பிரிவாக அதிமுகவினர் செயல்பட்டனர். பின்பு ஜெயலலிதாவை ஏற்றுக் கொண்டனர்.
ஜெ வாழ்க்கையில் பல போராட்டங்கள் வந்தபொழுது சசிகலா உடனிருந்தார். அவர்களுடன் கருத்து மோதல்கள் ஏற்படும் பொழுது இரண்டு மூன்று தடவை பிரிந்தார்கள். மீண்டும் இணைந்தார்கள். இதுவே வரலாறு. தற்போது அதிமுக வாக்கு வங்கியை சசிகலா ஆதரவாளர்களாக அமமுகவினர் பிரித்து வருகின்றார்கள். இரண்டு பிரிவாக செயல்பட்டாலும் எம் ஜி ஆரையே இருவரும் பிடித்துக்கொண்டு இருப்பதுதான் ஹைலைட்.
அதிமுக பொறுப்பில் இருப்பவர்கள் தனது முக மதிப்பில் கிடைத்த வாக்குகளில் பொறுப்பு வகிக்கவில்லை. ஜெயலலிதா அம்மையார் சேகரித்த வாக்குகளில் தான் அதிமுகவினர் பொறுப்பு வகித்து வந்தார்கள்.
அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்பது உரிமைப் போராட்டத்தில் இடைப்பட்ட காலத்திற்காக உருவாக்கப்பட்ட ஒரு அமைப்பு என கூறப்பட்டாலும் மாநகர், பகுதி, வட்டக் கழகம், ஒன்றியம், கிளை கழகம் என கட்சிக்கான கட்டமைப்பை பலப்படுத்தியிருப்பது அரசியல் முதிர்ச்சியை காட்டுவதாகவே அமைகின்றது. தற்பொழுது கர்நாடக மாநிலத்தில் சிறைத் தண்டனை காலத்தை அனுபவித்துவரும் சசிகலா அம்மையார் வெளியே வந்தாலும் தேர்தலில் நிற்க முடியாது. ஆனால் சசிகலா அம்மையாரால் பொறுப்பிற்கு வந்த அதிமுகவினர் நிச்சயம் சசிகலா அம்மையாரை சந்திப்பார்கள். பின் தொடர்வார்கள். ஸ்லீப்பர் செல் என்று கூறிவந்த டிடிவி.தினகரன் இதுவரை ஸ்லீப்பர் செல் யார் என்பதை அடையாளப்படுத்தாமல் விட்டுவிட்டார்.
இன்றளவும் தினகரன் உடன் தொடர்பில் இருப்பவர்கள் சில அதிமுகவினர் இருக்கத்தான் இருக்கிறார்கள். அரசியலில் நிரந்தர எதிரியும் நிரந்தர நண்பர்களும் கிடையாது.
தினகரனை பொருத்தமட்டில் களப்பணியில் துரிதப்படுத்தி வருகிறார். கட்சிக் கட்டுப்பாட்டை தங்களுடன் இருந்தவர்களையே கட்டுப்பாட்டில் வைக்காமல் விட்டுவிட்டார். இதனாலேயே பலர் அவரவர் விருப்பம் போல் பல்வேறு அரசியல் அமைப்புகளில் இணைத்துக் கொண்டனர்.
2021 சட்டமன்ற தேர்தலை பொறுத்த மட்டில் தமிழகத்தில் அதிமுக, திமுக, காங்கிரஸ், பாஜக, சிபிஐ, சிபிஎம், பாமக, தேமுதிக, விடுதலை சிறுத்தை கட்சியினர் உப்பட பல அமைப்புகள் இருந்தாலும் அதிமுக திமுகவை தொடர்ந்து அம்மா மக்கள் முன்னேற்றக் கழக கட்டமைப்பு பரவலாக பலப்படுத்தப்பட்டுள்ளது. வாக்கு வங்கியும் சட்டமன்ற தொகுதிக்கு 10,000 முதல் 15,000 வாக்கு வங்கி வாக்காளர்களும் உள்ளது குறிப்பிடத்தக்கது.
இந் நிலையில் கிளைக் கழகத்தை கையிலெடுத்து எம்ஜிஆர் பாணியில் களமிறங்கும் டிடிவி தினகரன் வியூகம் நிச்சயம் வாக்கு வங்கியை உயர்த்த உதவும் என்றார்.
கடவுள் நம்பிக்கையற்ற நாத்திகக் கொள்கைகளைக் கடைப்பிடிக்கும் திராவிடக் கட்சியில் இருந்தே அரசியலில் கோலோச்சிய எம்ஜிஆரை இறந்து 33 ஆண்டுகளுக்கு மேலாகியும், ரு அரசியல் கட்சியின் வெற்றிக்கு எம்ஜிஆரே பயன்படுகிறார்.
இன்றும் எம்.ஜி.ஆர் வாக்கு வங்கியை பயன்படுத்தவே அரசியல் கட்சியினர் தேர்தல் வியூகத்தை பயன்படுத்துவது தெள்ளத்தெளிவாக தெரிகிறது. திருச்சியில் அமமுகவினர் எம்.ஜி.ஆர். பார்முலாவை பயன்படுத்தி இருப்பது தமிழகம் முழுவதும் பரவும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.