மதுரையில் முன்னாள் துணை மேயர் (அழகிரியின் மனசாட்சி) மன்னனின் மகள் திருமணம் பெரும் விமர்ச்சியாக இன்று நடைபெற்றது மதுரை மாநகர் எங்கும் அழகிரியை வரவேற்று பேனர், போஸ்டர், தோரணம் என்று அதகளபட்டது. நீண்ட இடைவெளிக்கு பிறகு மதுரை மக்கள் மீண்டும் அழகிரியா” என்று ஆச்சரியத்துடன் பார்த்தது பெரும்பரபரப்பை ஏற்படுத்தியது. விழாவில் ரஜினி ரசிகர் கூட்டம் ஆங்காங்கே ஆர்பரிக்க திருமண அரங்கில் பாடகர் மனோ ரஜினி பாட்டாக பட்டைய கிளப்ப.. அழகிரி என்ட்ரி ஆனதும்..
அண்ணணுக்கு ஜே… நம்ம அழகிரி அண்ணனுக்கு ஜே.. என்று வழக்கமான ரஜினி பாட்டை மாற்றி பாட அங்கிருந்த இளவட்டங்கள் விசில் காதை பிளக்க அழகிரி மேடை ஏறி தாலியை மணமக்களிடம் கொடுத்து விட்டு, மைக்கை பிடித்து மன்னன் பேருக்கு ஏற்றார் போல் நமக்கும் மன்னன்தான் பதவிக்காக ஓடாத மன்னன்.. என் தளபதி.. என்க விசில் சத்தம் காதை கிழித்தது..
என் பாசத்திற்குறிய உடன் பிறப்புகள் என் தம்பிமார்கள் நான் தேர்தலில் நின்றபோதும் சரி கட்சிக்காக உண்மையாக உழைப்பவர்கள்.. சிரிக்கிறார்.. ஆமா உண்மையாக இருப்பவர்களுக்கு சோதனை காலம் வரத்தான் செய்யும்… கலைஞர் திரும்ப வருவார் திரும்பவும் வருவார்.. மறுபடியும் சிரிக்கிறார்…
”வருகிறதேர்தலில் எங்கள் பலம் என்னவென்று எல்லோருக்கும் காண்பிப்போம்”.. ’தற்போது திமுகவில் உள்ளவர்கள் அனைவரும் பதவிக்காகவே கட்சியில் இருக்கிறார்கள். அடுத்த தேர்தல் வரும் போது யார் கட்சியில் இருப்பார்கள், யார் பதவியில் இருப்பார்கள் என்பது தெரியும்’.. அதுவரை பொறுத்திருங்கள் என்று அரசியல் பன்ச் வைக்க” நான் அரசியல் இப்ப பேச வேண்டாம் இன்னும் ஒரு வருடம் இருக்கு அதுவரை பொறுமையா இருப்போம் என்று நினைத்திருந்தேன் ஆனா பேசவச்சுட்டாங்க.. என்று பின்னாடி நின்றுகொண்டு இருந்த நடிகர் விஜயகுமாரை பார்த்து சிரிக்கிறார்..
அதிமுகவின் சோலைராஜா.. பாஜகவின் அரசகுமார், மற்றும் பாஜக பொறுப்பாளர்கள் ஆகியோர் அருகில் நின்று கொண்டு இருக்க எல்லோரும் பதிலுக்கு சிரிக்க மன்னன் அழகிரியை சாப்பிட அழைத்து கொண்டு போக அவரோடவே நடிகர் விஜயகுமாரும் போனார்.
மேடையை விட்டு அழகிரி நகர்ந்ததும் திமுகவின் ஸ்டாலின் அணியின் சோலைரவி, தேனி மூக்கையா, வேலுச்சாமி ஆகியோர் தலையை காண்பித்துவிட்டு திரும்பினர்.. திமுகவினர் நிறைய பேர் கரைவேட்டி இல்லாமல் மப்டியில் வலம் வர அதில் ஒரு தொண்டர் நம்மிடம், இந்த பாஜக காரன்களும் ரஜினி மன்ற நிர்வாகிகளும் அண்ணனை சுற்றி நிற்பதை பார்த்தால் வேறு ஏதோ ரூட்டு போடுறாய்ங்களோ….
தேர்தல் சமயத்தில் ரஜினி கூட போயிருவாரோ என்று சந்தேகமா இருக்கு…என்க அருகில் இருந்த மற்றொரு தொண்டரோ அண்ணே அப்படியெல்லாம் போயிடமாட்டார் ஆனா பாஜக காரய்ங்க ஏன் நம்ம அண்ணனை சுற்றி சுற்றி வருகிறார்கள் அதுதான் புரியலை என்றார்.
திருமண அரங்கில் உள்ள பாட்டு கச்சேரியில் ”எஜமான் காலடி மண்ணெடுத்து நெற்றியில பொட்டுவைப்போம்….எஜமான் அவர் சொல்லுக்குதான் நாங்க இப்ப கட்டுபட்டோம் ..எங்களைதான் நம்புகிற பூமி இனி எங்களுக்கு நல்லவழி காமி”…என்று பாடகர் சத்தமாக பாட ..நாமும் ஏதோ புரிந்தும் புரியாமலும் வாழ்த்திவிட்டு வெளியேறினோம்.