பிரதமர் மோடி பக்கோடா கடை போடுவது கூட வேலைவாய்ப்புதான் எனக்கூறியதைக் கண்டு கவரப்பட்ட இளைஞர் ஒருவர், பக்கோடா கடை அமைப்பதற்காக நிதி உதவி ஏற்படுத்தித் தரவேண்டும் எனக்கோரி மத்திய தகவல் தொலைத்தொடர்புத்துறை அமைச்சர் ஸ்மிரிதி இராணிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

சமீபத்தில் தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டியளித்த பிரதமர் மோடி, ‘உங்கள் கட்டிடத்திற்கு வெளியே பக்கோடா கடை வைத்திருப்பவர் நாளொன்றுக்கு ரூ.200 வருமானம் ஈட்டுகிறார். அதுகூட வேலைபாய்ப்புதானே’ எனக் கூறினார். இதைக் கண்டு ஆர்வமடைந்த உத்தரப்பிரதேசம் மாநிலம் அமேதி பகுதியைச் சேர்ந்த அஷ்வின் மிஸ்ரா எனும் இளைஞர் பக்கோடா கடை அமைக்க முடிவு செய்துள்ளார். ஆனால், அதற்கான நிதி திரட்ட வசதி இல்லாததால், நிதி உதவி செய்ய பரிந்துரைக்கும்படி மத்திய தகவல் மற்றும் தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் ஸ்மிரிதி இராணி மற்றும் மோஹ்சின் ராஸா என்பருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
‘நான் படித்து முடித்துவிட்டு, வேலையில்லாமல் தவித்துவந்தேன். அப்போது பிரதமர் மோடி பக்கோடா கடை வைப்பதுகூட வேலைவாய்ப்புதான் எனக்கூறியது என்னை வெகுவாகக் கவர்ந்தது. நான் பக்கோடா கடை போட்டால் எனக்கு வேலை கிடைப்பதோடு, மற்றவர்களுக்கு வேலையும் கொடுக்கலாம். இதற்காக வங்கிகளுக்குச் சென்றால் எனக்கு கடன் வழங்க மறுக்கின்றனர். பிரதமரும், மத்திய அமைச்சர்களும் இதுவரை 10 கோடி பேர் பிரதம மந்திரி முத்ரா திட்டத்தின் மூலம் கடனுடதவி பெற்றுள்ளதாகக் கூறினர். மோடி பொய் கூற மாட்டார் என்பது எனக்குத் தெரியும். வங்கி ஊழியர்கள் எனக்கு நிதி தர மறுத்த நிலையில், எனக்கு நிதி உதவி செய்ய பரிந்துரைக்கும் படி உங்களுக்கு கடிதம் எழுத முடிவு செய்தேன்’ என அந்தக் கடிதத்தில் எழுதியுள்ளார் அஷ்வின்.
கடிதம் எழுதிய அஷ்வின், அமேதி பகுதியின் பாஜக சமூக வலைதளப்பிரிவில் தலைமைப் பொறுப்பு வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.