சமஸ்கிருதத்தை விட தமிழ் பழமையான மொழி என பிரதமர் மோடி கூறியுள்ளார். ஒருவேளை பிரதமர் இதனை மாற்றி கூறியிருந்தால் பிரேக்கிங் நியூஸ் ஆகியிருக்கும் என பாஜக மாநில தலைவர் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து இன்று காலை சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
தமிழத்திற்கான தண்ணீர் குறைக்கப்பட்டுள்ளது மிகவும் மனவேதனையை தருகிறது. காவிரி உரிமையை பெற சட்ட வல்லுனர்களுடன் தமிழக அரசு ஆலோசனை நடத்த வேண்டும். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும்.
பிரதமர் நரேந்திரமோடி கூறியதால் தான் அதிமுகவின் இரு அணிகளை இணைக்க ஒப்புக்கொண்டேன் என துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறுவது குறித்து, அவரிடம் தான் கேட்க வேண்டும்.
சட்டம் ஒழுங்கை காப்பாற்றுவதில் இருந்து தமிழக அரசு தோல்வி அடைந்துள்ளது. ஓபிஎஸ் கூறிய அமைதிப்பூங்காவாக உள்ள தமிழகத்தில் தான், கேக்கை அரிவாளால் வெட்டும் நிலை உள்ளது. பயங்கரவாதிகளின் புகலிடமாக தமிழகம் மாறிவிடக்கூடாது.
பழமையான தமிழ்மொழியை நான் கற்றுக்கொள்ளவில்லையே என்று வருத்தமாக இருக்கிறது. சமஸ்கிருதத்தை விட தமிழ் பழமையான மொழி என பிரதமர் மோடி கூறியுள்ளார். ஒருவேளை பிரதமர் இதனை மாற்றி சொல்லியிருந்தால் பிரேக்கிங் நியூஸ் ஆகியிருக்கும்.
தமிழகத்தில், தமிழை பாஜகவால் தான் காப்பாற்ற முடியும். இதுவரை ஆண்டவர்கள் தமிழை அரசியல் வியாபாரமாக தான் கருதிவந்தனர். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.