அதிமுக செயற்குழுவில் முதல்வர் பதவி குறித்து எடப்பாடிக்கும் பன்னீருக்கும் நேரடியாக விவாதம் நடந்திருப்பதாகச் சொல்லப்படுகிறது. இன்று காலையில் கூடிய அதிமுக செயற்குழுவில் பேசிய ஓபிஎஸ், ‘’நடப்பு ஆட்சிக்கு மட்டும்தான் அண்ணன் எடப்பாடியார் முதலமைச்சர். அதாவது, 2021-வரை அவர் முதல்வராக இருப்பார் என எனக்கு கொடுக்கப்பட்ட உறுதிமொழியை கொடுத்தனர். அதுவரை இணைந்து செயல்படுங்கள் என கேட்டுக்கொண்டனர். அதனை ஏற்றேக் கொண்டே கட்சியில் இணைய சம்மதித்தேன். ஆட்சியில் துணை முதல்வராக இருக்க மட்டுமே ஒப்புக்கொண்டேன். அதனால், 2021 தேர்தலில் அவரை முதலமைச்சர் வேட்பாளராக ஏற்க இப்போது என்னால் முடியாது‘’ என்றிருக்கிறார்.
தொடர்ந்து அவர் பேசும்போது, ‘’எனது நிர்வாகத் திறமையை பிரதமர் மோடி அவர்களே பாராட்டியுள்ளார்‘’ என தெரிவித்திருக்கிறார் பன்னீர். அப்போது அமைதியாக இருந்த எடப்பாடி, ஓபிஎஸ் பேசி முடித்ததும், இதற்கு பதிலடி தரும் விதமாக, ‘’ கடந்த மூன்று ஆண்டுகாலமாக சிறப்பான ஆட்சியை தமிழகத்திற்கு கொடுத்து வருகிறீர்கள் என பிரதமர் மோடி என்னை பாராட்டியிருக்கிறார்’’ என ஆவேசம் காட்ட, கே.பி.முனுசாமி குறுக்கிட்டு, ’’இப்படியே பதிலுக்கு பதில் சொல்வது சரியாக இல்லை. யார், யாரை முதல்வராக்கியது? யார், யாரை பாராட்டியது? என்பதெல்லாம் தேவையில்லாதது. யார் நல்லாட்சி செய்தார்கள் என்பதை மக்கள் கவனித்துக் கொண்டிருக்கிறார்கள் ‘’ என இரு தரப்புக்குமான வாக்குவாதங்களை முடிவுக்கு கொண்டு வந்திருக்கிறார்.
அதன்பிறகே, ’’முதல்வர் வேட்பாளர் யார்? என்பது குறித்து முடிவை நீங்கள் இருவருமே இணைந்து எடுங்கள்’’ என்று செயற்குழுவின் சீனியர் உறுப்பினர்கள் சிலர் வலியுறுத்தியதை செயற்குழு ஒப்புக்கொண்டது என்கிறார்கள் கூட்டத்தில் கலந்துகொண்டவர்கள்.