
டெல்லியிலிருந்து அடுத்த 7 நாட்களுக்கு நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு இயக்கப்படும் சிறப்பு ரயில்களில் பயணிக்க 45 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயணிகள் டிக்கெட் முன்பதிவு செய்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஊரடங்கால் நாட்டின் பல்வேறு இடங்களில் சிக்கியுள்ள மக்கள், தங்களது சொந்த ஊர்களுக்குச் செல்லும் வகையில் டெல்லியிலிருந்து திப்ரூகார்க், அகர்தலா, ஹவுரா, பாட்னா, பிலாஸ்பூர், ராஞ்சி, புவனேஷ்வர், செகந்திராபாத், பெங்களூரு, சென்னை, திருவனந்தபுரம், மட்கான், மும்பை, அகமதாபாத், ஜம்மு தாவி ஆகிய நகரங்களுக்கு 15 ரயில்கள் இயக்கப்பட உள்ளன. இந்தப் பயணங்களுக்கான டிக்கெட் முன்பதிவு நேற்று மாலை நடைபெற்றது. இதில் அதிகளவிலான டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ரயில்களில் பயணிக்க மொத்தம் 45,533 பயணிகள் டிக்கெட் பெற்றுள்ளனர். இதன்மூலம் ரயில்வே துறைக்கு ரூ.16 கோடி வருவாய் கிடைத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் முதல் ரயில் டெல்லியிலிருந்து மத்தியப் பிரதேசம் பிலாஸ்பூருக்கு இன்று மாலை பயணத்தைத் தொடங்குகிறது.
மேலும், இந்த ரயில் பயணத்தை மேற்கொள்ளும் பயணிகளுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதன்படி, பயணிகள் அனைவரும் ரயில் நிலையத்துக்கு ரயில் புறப்படுவதற்கு 90 நிமிடங்களுக்கு முன்பாகவே வர வேண்டும், அனைத்துப் பயணிகளும் கண்டிப்பாக முகக் கவசம் அணிய வேண்டும், பயணத்துக்கு முன்பாக பரிசோதனைக்கு உட்பட வேண்டும், பயணிகள் சொந்தமாகப் படுக்கை விரிப்புகள், கம்பளி ஆகியவற்றையும் கொண்டுவர வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஆரோக்கிய சேது செயலியை அனைவரும் கட்டாயம் வைத்திருக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.