அதிமுக ஆட்சியில் படுகொலையாகும் மக்கள், பறிபோகும் ஜனநாயகம் என்ற பொருளில் மாதிரி சட்டமன்றக் கூட்டம் நடைபெறுகிறது. இதில் துப்பாக்கிச்சூடு விவாதத்தில் பேசிய தங்கம் தென்னரசு,
தூத்துக்குடியில் துப்பாக்கிச்சூடு நடைப்பெற்று 13 மனித உயிர்கள் பலியாகி உள்ளது. முதலில் இந்த பலியான உயிர்கள் 13 தானா? என்ற சந்தேகம் எனக்கு உள்ளது. எங்களுக்கு கிடைத்த தகவலின் படி பலியானவர்கள் எண்ணிக்கை 30-ஐ தாண்டும்.
நடந்த சம்பவத்திற்கு முதல் காரணம் உளவுத்துறை செயலிழந்து இருந்தது தான். தூத்துக்குடி போராட்டம் உடனடியாக தன்னெழுச்சியாக நடந்தது இல்லை. 99நாட்களாக நடந்த போராட்டம் 100வது நாளில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தை நோக்கி ஒரு அமைதி பேரணியாக செல்வோம் என்ற அறிவித்துள்ளனர். ஆனால் இதை பொருட்டாக எடுக்காமல், எத்தனை பேர் போராட்டத்திற்கு வருவார்கள் என்ற கணக்கு கூட தெரிந்துக்கொள்ளாத ஒரு சூழ்நிலையால் இந்த துயரச்சம்பவம் நடந்துள்ளது.
போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தக்கூட அங்கு யாரும் இல்லை. அமைதியாக பேரணியாக வந்தவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியது காவல்துறை. இப்படி ஒரு திட்டமிட்ட படுகொலையை நடத்திவிட்டு முதல்வர் துப்பாக்கிச்சூடு நடந்ததே தெரியாது என்கிறார். இத்தகைய திட்டமிட்ட துப்பாக்கிச்சூட்டை 2 நாட்களாக நடத்தி இளைஞர்களை இழுத்துச்செல்கிறார்கள். யார் துப்பாக்கிச்சூட்டில் இறந்தது என்று முதல்வர் கூறுகிறார். பயங்கரவாதிகள் புகுந்துவிட்டார்கள் என்கிறார். 17 வயது சிறுமி ஸ்னோலின் பயங்கரவாதியா?
இப்படி ஒரு திட்டமிட்ட படுகொலையை நிறைவேற்றியது காவல்துறை. அந்த காவல்துறையில் பொறுப்பேற்ற மாவட்ட எஸ்.பி, உளவுத்துறை அதிகாரிகள், டிஜிபி உள்ளிட்ட உயர் அதிகாரிகள், மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அத்தனை பேர் மீதும் வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என வலியுறுத்துகிறேன். மேலும் இதற்கெல்லாம் முக்கிய காரணமாகிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி ராஜினாமா செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.