ஒவ்வொருவர் வங்கிக்கணக்கிலும் ரூ.15 லட்சம் டெபாசிட் செய்யப்படும் என்ற பிரதமர் மோடியின் வாக்குறுதி குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு பிரதமர் அலுவலகம் பதிலளித்துள்ளது.
2014ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலின் போது, பிரதமர் வேட்பாளராக இருந்த நரேந்திர மோடி பல்வேறு வாக்குறுதிகளை அள்ளி வீசினார். அப்போது வெளிநாடுகளில் பதுக்கப்பட்டிருக்கும் கறுப்புப்பணத்தை மீட்டுக் கொண்டுவருவேன். அங்குள்ள பணத்தை இந்தியர்களின் வங்கிக்கணக்கில் செலுத்தினால், ஒவ்வொருவருக்கும் ரூ.15 லட்சம் கிடைக்கும் என்று கூறினார்.
இந்நிலையில், ஒவ்வொருவரின் வங்கிக்கணக்கிலும் ரூ.15 லட்சம் டெபாசிட் செய்வேன் என மோடி கூறினாரே, அதற்கான தேதி பற்றிய தகவல் வேண்டும் என தகவல் அறியும் உரிமைச் சட்ட ஆர்வலர் மோகன்குமார் சர்மா, ஆர்.டி.ஐ. மனு அளித்திருந்தார். பிரதமர் மோடி பணமதிப்பு இழப்பு நடவடிக்கை மேற்கொண்டு 18 நாட்கள் ஆகியிருந்த நிலையில், கடந்த 2016, நவம்பர் 26ஆம் தேதி மோகன்குமார் சர்மா இந்த மனுவை சமர்ப்பித்திருந்தார்.
இதுதொடர்பாக பதிலளித்துள்ள பிரதமர் அலுவலகம், ‘ஒவ்வொருவர் கணக்கிலும் ரூ.15 லட்சம் செலுத்துவதற்கான தேதி, தகவல் அறியும் உரிமைச் சட்ட விதிகளின் படி ‘தகவல்’ என்ற வரையறைக்குள் வராது. எனவே, இதுகுறித்து பதிலளிக்க இயலாது என தெரிவித்துள்ளது. மேலும், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் படி தகவல் என்றால் பதிவுகள், ஆவணங்கள், குறிப்புகள், மின்னஞ்சல்கள், கருத்துகள், அறிவுரைகள், பத்திரிகை வெளியீடுகள், சுற்றறிக்கைகள், உத்தரவுகள், ஒப்பந்தங்கள், அறிக்கைகள், மாதிரிகள், தரவு பொருட்கள் உள்ளிட்டவைதான் எனவும் விளக்கமளிக்கப் பட்டுள்ளது.