நீட் தேர்வில் மிகப்பெரிய முறைகேடு நடந்திருப்பதாக மத்திய கல்வித்துறைக்கு மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி கடிதம் எழுதியுள்ளார்.
மருத்துவப்படிப்பில் சேருவதற்கான நுழைவுத்தேர்வான நீட் நாடு முழுவதும் மே 6ஆம் தேதி நடைபெற்றது. மேற்கு வங்கம் மாநிலத்தில் உள்ள கோஸ்ஸிப்போர் பள்ளிக்கூடத்தில் நடந்த தேர்வில், பெங்காலி மொழியை தேர்வு மொழியாக தேர்வுசெய்த 600 மாணவர்களில் 520 பேருக்கு மட்டுமே அவர்கள் சார்ந்த மொழியில் வினாத்தாள்கள் வழங்கப்பட்டன. மீதமிருந்த மாணவர்களுக்கு பிறமொழி வினாத்தாள்கள் கொடுக்கப்பட்டது மிகப்பெரிய சர்ச்சையானது. இதேபோல், ஹூக்ளி மாவட்டத்தில் உள்ள பள்ளியிலும் தேர்வில் முறைகேடு நடந்துள்ளது.
இதுகுறித்து மத்திய கல்வித்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகருக்கு கடிதம் எழுதியுள்ள மம்தா பானர்ஜி, ‘பல மாணவர்களுக்கு வினாத்தாள்களின் நகல்கள் வழங்கப்பட்டிருக்கின்றன. அவை மற்ற மாணவர்களின் பதிவு எண்ணில் இருந்ததால், அந்தத் தேர்வை எழுதிய மாணவர்களுக்கு எந்தவித பலனும் கிடைக்கப்போவதில்லை. மேலும், பெங்காலி மொழியில் தேர்வெழுத விண்ணப்பித்த மாணவர்களை ஆங்கிலம் மற்றும் இந்தியில் தேர்வெழுத கட்டாயப்படுத்தியுள்ளனர். எனவே, வினாத்தாள் பற்றாக்குறையால் நகல்கள் வழங்கப்பட்ட மாணவர்களுக்கு நீதிகிடைக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும். தேவைப்பட்டால் அந்த மாணவர்களுக்கு மறுதேர்வு நடத்த ஏற்பாடு செய்து, அவர்களுக்கான வாய்ப்பு முறையாக வழங்கப்பட வேண்டும்’ என வலியுறுத்தியுள்ளார்.
2017ஆம் ஆண்டு மேற்கு வங்கம் மாநிலத்தில் இதேபோல முறைகேடுகள் நடந்தன. தேர்வெழுதும் மாணவர்களின் வாழ்க்கையில் விளையாடுவது மோசமானது என மம்தா பானர்ஜி அப்போது தெரிவித்திருந்தார்.
இதேபோல், தமிழகத்தின் மதுரையில் நடந்த தேர்விலும் மாணவர்களுக்கு தமிழ் மொழிக்கு பதிலாக பிறமொழிகளில் வினாத்தாள்கள் வழங்கப்பட்டன. இது மிகப்பெரிய சர்ச்சைக்குள்ளாகி, பெற்றோர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மற்ற மாநிலங்களை விடவும் நீட் தேர்வினால் தமிழகம் மிக மோசமான பிரச்சனைகளைச் சந்தித்தது. ஆனால், மேற்கு வங்கம் மாநில முதல்வரைப் போல அல்லாமல், தமிழகத்தில் எதையும் கண்டுகொண்டதாகத் தெரியவில்லை. நீண்டகாலமாக நீட் தேர்வினை எதிர்த்து வந்த தமிழகம், தற்போது அதன் கொடுமைகளை அனுபவித்துக் கொண்டிருக்கிறது.