உத்தரப்பிரதேசம் மருத்துவர் கஃபீல்கானுக்கு அலகாபாத் உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது.
உத்தரப்பிரதேசம் மாநிலம் கோரக்பூரில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 10ஆம் தேதி, ஆக்சிஜன் சிலிண்டர்கள் தட்டுப்பாட்டால் 70க்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிரிழந்தன. இந்த கோர சம்பவத்தின் போது, ஆக்ஸிஜன் சிலிண்டர்களை ஏற்பாடு செய்து குழந்தைகளைக் காப்பாற்றிய மருத்துவர் கஃபீல்கான் பலரிடத்திலும் பாராட்டுகளைப் பெற்றார். ஆனால், அடுத்த சில தினங்களிலேயே மருத்துவர் கஃபீல்கான் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார்.
அவர் சிறையில் அடைக்கப்பட்டு எட்டு மாதங்கள் ஆகின்றன. இந்த எட்டு மாதங்களில் அவருக்கு ஜாமீன் கேட்டு ஆறு முறை மனு கொடுத்திருந்தும் அனைத்து மனுக்களும் நிராகரிக்கப்பட்டன. கஃபீல்கான் சிறையில் உடல்நலக்குறைவு, உயர் ரத்த அழுத்தம், மன அழுத்தம் உள்ளிட்ட பிரச்சனைகளால் அவதிப்படுவதாகவும், அவருக்கு முறையான சிகிச்சை அளிக்கப்படவில்லை என்றும் குற்றச்சாட்டுகள் எழுந்தன.
இந்நிலையில், சில தினங்களுக்கு முன்னர் மருத்துவர் கஃபீல்கான் சிறையில் இருந்தபடி எழுதிய கடிதத்தை அவரது மனைவி சபிஸ்தா செய்தியாளர்கள் சந்திப்பில் வாசித்தார். அதில் நிர்வாகக் கோளாறுகளை மறைப்பதற்காக என்னை பலிகடா ஆக்கிவிட்டார்கள். முதல்வர் யோகி என்னை சந்தித்தபிறகு என் வாழ்க்கையே தலைகீழாக மாறிவிட்டது. என் கடமையைச் செய்தும் இன்று சிறைக்கம்பிகளுக்குப் பின்னால் தவித்துக் கொண்டிருக்கிறேன் என எழுதியிருந்தார்.
இதையடுத்து, கஃபீல்கானுக்கு நீதி கோரியும், அவரை ஜாமீனில் வெளியிடக் கோரியும் சமூக வலைத்தளங்களிலும், பொது அமைப்புகளின் சார்பிலும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன. அதேசமயம், மருத்துவர் கஃபீல்கானுக்கு ஜாமீன் கோரும் மனு இன்று அலகாபாத் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அந்த மனுவை ஏற்றுக்கொள்வதாக அறிவித்த நீதிபதிகள், மருத்துவர் கஃபீல்கானுக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டனர்.