Skip to main content

நாம் கண்டுகொள்ளாத நல்லவர்!

Published on 26/12/2017 | Edited on 26/12/2017
நாம் கண்டுகொள்ளாத நல்லவர்!

தோழர் நல்லக்கண்ணு பிறந்தநாள்...  






ஊருக்கே தெரியும் இவர் நல்லவர் என்றும், அவர் சார்ந்த கட்சி தொழிலாளர் கட்சி என்றும், ஆனாலும் இவரை ஏற்கவில்லை கோவை மக்கள். இத்தனைக்கும்  கோவை, தொழிலாளர்களை அதிகம் கொண்ட நாடாளுமன்ற தொகுதி. அத்தோடு அவர் தேர்தலில் போட்டியிடுவதையே  நிறுத்திக்கொண்டார். 1999 நாடாளுமன்ற தேர்தலில்  கோவை நாடாளுமன்ற தொகுதியில் நல்லக்கண்ணு போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து நின்ற போட்டியாளர்,  பா.ஜ.க.வின் சி.பி.ராதாகிருஷ்ணன். அதுவரை தமிழகத்தில் பெரிதாக கால் பாதிக்காத பாஜகவின் வேட்பாளரிடம்  ஊரறிந்த நல்லவர் தோற்றார். 54,000 ஓட்டுகள் வித்தியாசத்தில். அத்வானி வருகையின் போது நடந்த  கோவை குண்டுவெடிப்புக்குப்பின்   ஓராண்டுக்குள் வந்த தேர்தல் அது. அதோடு திமுக கூட்டணி பலமும்  பாஜகவுக்கு இருந்தது என்றாலும் நல்லகண்ணு போன்ற ஒரு வேட்பாளரை தோற்கடித்தது துரதிர்ஷ்டமே. சகாயத்தையும், ரஜினியையும் அழைக்கும் நாம்தான் இவர் போன்றவர்களை ஒதுக்கி வைக்கிறோம். உண்மையில் அரசியலுக்கு மட்டுமல்ல ஒரு நல்ல தமிழகம் உருவாகவும் அவர்களைவிட, இவரே மிகவும் தேவை.





தன் 93வது வயதிலும் துடிப்பான இளைஞனாக அறப்போர் புரியும் இவர் டிசம்பர் 26 1925ல் திருவைகுண்டத்தில் (திருநெல்வேலி) பிறந்தார். பள்ளிப்பருவத்திலேயே ஆங்கிலேயருக்கு ஆதரவான ஒரு நாடக ஒத்திகை அவர் பள்ளியில் நடைபெற்றபோது அதை எதிர்த்து போராடியவர். அதற்காக ஆசிரியர்கள் தண்டித்தபோது பள்ளிப்  புறக்கணிப்பு போராட்டம் நடத்தியவர். காந்தியைவிட நேருவின்மீதும், அவர் எழுத்துக்களின்மீதும் காதல்  கொண்ட இவர் காங்கிரஸில் இணைந்தார். பின் காங்கிரஸ் நிலச்சுவான்தார்கள் மற்றும் பணம் படைத்தோரின் புகலிடமாக மாறி வருவதாக நினைத்த நல்லக்கண்ணு அதிலிருந்து வெளியேறி கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்தார். ஆரம்பத்தில் நெல்லை மாவட்ட விவசாய சங்க செயலாளராக இருந்தபோது நிலஉரிமை போராட்டம் மேற்கொண்டு "உழுபவருக்கே நிலம்" என்ற வார்த்தையை உண்மையாக்கினார். 





அரசியலில் அவர் கடைபிடித்த நேர்மை, ஜனசக்தியில் செய்தி வெளியிட்ட அவரின் துணிச்சல், இன்றுவரை ரூ.4,000க்கு ஒரு சாதாரண வீட்டில் குடியிருக்கும் எளிமை, மனைவி உடல்நிலை மோசமானபோதும் சுற்றுப்பயணம் மேற்கொண்ட மனவலிமை,  திருநெல்வேலி ஜாதி கலவரத்தில் தனது மாமனார் கொல்லப்பட்டபோதும், நிதானம் தவறாமல் தக்க முடிவு எடுத்தது மட்டுமின்றி சுற்றுப்பயணத்தையும் சிறப்பாக முடித்த அவரின் பொறுமை, கம்யூனிஸ்ட் பற்றி தவறாக பிரச்சாரம் செய்தவர்களிடம்  கம்பெடுத்துக்கொண்டு சென்ற அவரின் வீரம்,  பணத்தை துட்சமாக நினைத்த அவரின் மனம் இதுமட்டுமில்லாமல் தானே தன் துணிகளை துவைப்பது, நேரம் இருந்தால் உடன் இருப்பவர்களுக்கு உணவு சமைத்து தருவது போன்ற அனைத்துமே அவரிடமிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டியவைதான்.

"இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளும் இணையவேண்டும் அதுதான் இந்தியாவிற்கு தேவை"  என்ற சிந்தனைக்கொண்ட "தோழர்" நல்லக்கண்ணு பிறந்த தினம் இன்று. தினகரனுக்கு வந்த மூன்று மாதத்தில் ஆதரவு அளித்த நாம், இன்றுவரை நல்லக்கண்ணுவிற்கு கொடுக்காமல் இருப்பது அரசியல் பற்றிய அறிவு குறைவாக இருப்பதையே வெளிக்காட்டுகிறது.

கமல்குமார் 


சார்ந்த செய்திகள்