தமிழகத்தில் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் ஏப்ரல் 29ந்தேதி வெளியிட்டது பள்ளிக்கல்வித்துறை.
இதில் தமிழகத்தில் உள்ள 32 மாவட்டங்களில் 98.53 சதவிதம் அளவுக்கு தேர்ச்சி பெற்று திருப்பூர் மாவட்டம் முதலிடத்தையும், தமிழகத்தில் பின்தங்கிய மாவட்டமாக கருதப்படும் ராமநாதபுரம் மாவட்டம் 98.48 சதவித அளவுக்கு மாணவ – மாணவிகள் தேர்ச்சி பெற்று இரண்டாம் இடத்தையும் பிடித்தது.
இதில் வேதனையான தகவல் இந்த ஆண்டும் வேலூர் மாவட்டம் கடைசியிடத்தை பிடித்துள்ளது. 2018-2019 ஆம் ஆண்டில் 89.98 சதவிதம் அளவே மாணவ – மாணவிகள் தேர்ச்சி பெற்று 32 மாவட்டங்களில் கடைசி இடத்தை பிடித்துள்ளது இம்மாவட்டம். இந்த ஆண்டு மட்டுமல்ல கடந்த சில ஆண்டுகளாகவே தேர்ச்சி விகிதத்தில் கடைசி இரண்டு இடங்களிலேயே உள்ளது வேலூர் மாவட்டம்.
ஏப்ரல் 19ந்தேதி வெளிவந்த 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தேர்வு முடிவுகளில் வேலூர் மாவட்டம் கடைசி இடத்தையே பிடித்திருந்தது. 12 ஆம் வகுப்பிலும் தொடர்ச்சியாக கடைசி இடத்தையே பிடித்துவருகிறது வேலூர் மாவட்டம்.
வேலூர் மாவட்டம் கடைசி இடம் பிடிப்பது தொடர்பாக ஆசிரியர்கள் தரப்பில் பேசும்போது, இதற்கு பல்வேறு காரணங்கள் இருந்தாலும், மிக முக்கிய காரணங்கள் என்றால் இந்த மாவட்டம் அடிப்படையில் மிகப்பெரிய மாவட்டம், பள்ளிகள் அதிகமாகவுள்ளது. ஒரு பள்ளிக்கு ஒருவர் ஃபெயில் என்றாலும் அதிக பள்ளிகள் உள்ளதால் அதிக மாணவ-மாணவிகள் ஃபெயிலாகி தேர்ச்சி விகிதம் குறைந்து, கடைசி இடத்துக்கு போய்விடுகிறது. அதேபோல் இங்கு அரசுப்பள்ளிகள், அரசு உதவிப்பெரும் பள்ளிகள் அதிகம். முதல் 10 இடங்களை பிடிக்கும் மாவட்டங்களை பாருங்கள், அங்கெல்லாம் அரசுப்பள்ளிகளைவிட தனியார் பள்ளிகள் அதிகம் அதனால்தான் அங்கு தேர்ச்சி சதவிதம் அதிகம், இங்கு குறைவாக உள்ளது என்றார்.
மாவட்டத்தில் உள்ள கல்வியாளர்கள் தரப்பில் பேசியபோது, பெரிய மாவட்டமாக இருப்பதால், அதிகளவு ஆசிரியர்கள் உள்ளனர். இந்த ஆசிரியர்களை அதிகாரிகள் சரியாக கண்காணிப்பதில்லை, இது முதல் குறைபாடு. மற்றொன்று தேவையான அளவு ஆசிரியர்கள் நியமனம் இல்லாதது, மற்றொரு குறைப்பாடு. ஆசிரியர்கள் தங்கள் பணியை அர்ப்பணிப்போடு செய்யாதது போன்றவையே தேர்ச்சி விகிதம் குறைவுக்கு காரணம் என்கிறார்கள்.
பொதுநலன் விரும்பிகளோ, இந்த மாவட்டத்தில் கிராமங்கள் அதிகளவில் உள்ளன. அந்த கிராமங்களில் வாழ்பவர்களில் ஒடுக்கப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்கள்தான் அதிகளவில் வசிக்கின்றனர். அவர்களால் தங்களது வாழ்க்கையை வாழ்வது இங்கு பெரும் சிக்கலாகவுள்ளது. வெளியூர்களுக்கு அவர்கள் வேலைக்கு செல்வதால், அவர்களால் படிக்கும் பிள்ளைகளை கண்காணிக்க முடிவதில்லை, இதுவும் ஒருகாரணம். அதேபோல், தற்காலத்தில் படிக்க வரும் மாணவர்கள் படிப்பதில் அதிக கவனம் செலுத்துவதை தாண்டி, சாதி பிரச்சனைகளில் அதிகளவில் பள்ளிகளிலேயே ஈடுபடுகின்றனர். இதனால் சமூக விரோத செயல்களில் ஈடுபடுகின்றனர். இதனை கண்டிக்கும் ஆசிரியர்கள் மீதும் தாக்குதல் நடத்துகின்றனர். இதுபோன்ற பிரச்சனைகளை கலைந்தால் மட்டுமே இந்த மாவட்டம் கல்வியில் முன்னேறும் என்றார்.