நடந்துகொண்டிருக்கும் சட்டசபை கூட்டத்தொடர் தொடங்குவதற்குமுன், தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு, சேலம் எட்டு வழி சாலை, கவர்னர் உரிமை மீறல் என பல பிரச்சனைகளால் பரபரப்பாக, நெருப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. பரபரப்பாக இருக்கிறதோ இல்லையோ கலகலப்பாக இருப்பது தெரிகிறது. கலகலப்புக்கு முக்கிய காரணமாக இருக்கும் திமுக முன்னாள் அமைச்சர், சட்டமன்ற உறுப்பினர் துரைமுருகனிடம் கேட்டோம்... என்ன நடக்கிறது சட்டமன்றத்தில்?
" 'சினிமாவுக்கு வந்திருந்தால் ஜெயலலிதாவுடன் நடித்திருப்பேன்' என்று நான் கூறியதாகப் பேசப்பட்டது. அன்று சட்டமன்றத்தில் கிராமியப் பாடல்களையெல்லாம் அரசு ஊக்குவிக்க வேண்டும் என்று பேசிய போது 'இவ்வளவு சொல்றீங்களே நீங்க நடிப்பிங்களா?' என்று கேட்டார் ஒருவர். நான் நடிச்சிருக்கேனு சொன்னேன். அதோட விட்டிருக்கலாம். ஓ.பி.எஸ். எழுந்து, அம்மாவே சொல்லிருக்காங்க 'துரைமுருகன் அரசியலுக்கு வராம சினிமாவுக்கு வந்திருந்தா சிவாஜியே இருந்திருக்க மாட்டாரு'னு. இல்லைங்களா?னு கேட்டாரு. நான் இல்லைனா சொல்ல முடியும்? ஆமா சொன்னாங்கனு சொன்னேன். அவ்வளவுதான் சொன்னேன். ஆனா டிவில 'நான் ஜெயலலிதாவோட நடித்திருப்பேன்'னு போட்டாங்க.
ஜெயலலிதா இருக்கும்போது சட்டமன்றத்தில் ஒரு நாள் மிக ஆக்ரோசமாக பேசிக்கொண்டிருந்தேன், சிவாஜி கணேசன் ‘மனோகரா’வில் பேசியதுபோல. பேசி முடிந்தும் அனைவரும் அப்படியே பார்த்துக்கொண்டிருந்தார்கள். அப்போது 'துரைமுருகன் ஒன் மினிட்'னு ஜெயலலிதா சொன்னாங்க. நான் 'மேடம்'னு சொன்னேன். அப்போது அவங்க சொன்னாங்க, "அதிர்ஷ்டவசமாகவோ துரதிர்ஷ்டவசமாகவோ நீங்க சினிமால இல்ல, இல்லைனா சிவாஜி சாரை மிஞ்சியிருப்பீங்க"(Fortunatly or Unfortunatly you were not there in cinema, otherwise sivaji ganesan sir wouldn't be there) என்று சிரித்துக்கொண்டே கூறினார். இதைத்தான் ஓ.பி.எஸ் சொன்னார்.
நான் சட்டமன்றத்தில் பலரை கிண்டல் செய்திருக்கிறேன். கலகலப்பாக பேசும்போது யாரும் கோபப்பட மாட்டார்கள், அதை ஜாலியாக எடுத்துக்கொள்வார்கள். நான் சட்டமன்றத்திற்குச் செல்லவில்லையென்றால் அனைவரும் கேட்பார்கள், 'அண்ணே போர் அடிக்குதுனே நீங்க வாங்க'னு.
இரண்டு நாட்களுக்கு முன் கூட சட்டசபையில் அமைச்சர் ஒருவர் எங்களுக்கு பதில் கூற ஆவேசமாக எழுந்தார். உடனடியாக சபாநாயகர் 'அமைதியாக உட்காருங்கள், இல்லையென்றால் சட்டக்குறிப்பிலிருந்து நீக்கி விடுவேன்' என்று கூறினார். உடனடியாக நான் மூக்கறுப்பு ஆகிவிட்டது என்பதை உணர்த்தும் வகையில் சைகையில் காட்டினேன். (செய்து காட்டுகிறார்) உடனடியாக அனைவரும் சிரிக்க ஆரம்பித்துவிட்டனர். நான் கிண்டல் செய்தவரும் கூட 'ஏன்னே' என்று சிரித்தார். எல்லாரிடமும் நான் நன்றாக பேசுவேன், எல்லாரிடமும் நான் நன்றாகப் பழகுவேன்.
எடப்பாடி பழனிசாமி, 'அம்மா அவர்கள் கூறியதை நிவர்த்தி செய்துவிட்டோம். நான் சொன்னதில் இதையெல்லாம் செய்திருக்கிறேன்' என்று பெருமையாகச் சொன்னார். அதற்கு நான் 'அம்மா சொன்னதை நிவர்த்தி செய்துவிட்டீர்கள் சரி, நீங்களும் சொன்னதை செய்துவிட்டேன் என்று சொல்கிறீர்கள். நடுவில் ஓபிஎஸ் இருந்தாரே, அவர் ஒன்றுமே சொல்லவில்லையா, அவரைப்பற்றியும் எதாவது சொல்லுங்களேன்'னு சொன்னேன். 'மூட்டி விடுறீங்களா, இந்த முறை ஒன்றும் நடக்காது' என்று சொன்னார். அதற்கு, 'போனமுறை நடந்துவிட்டதா?'னு கேட்டேன்"
என்கிறார் சிரித்துக்கொண்டே.
தொகுப்பு : கமல்குமார்