பாஜக ஆட்சி குறித்து தன்னுடைய கருத்துக்களை நம்மோடு ஆம் ஆத்மி கட்சியின் சார்பில் கர்நாடகாவில் போட்டியிடும் வேட்பாளர் வசீகரன் பகிர்ந்துகொள்கிறார்.
அவர் கூறியதாவது “கர்நாடக மக்கள் தெளிவாக உள்ளனர். பாஜக ஆட்சியால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலம் கர்நாடகம். குறுக்கு வழியின் மூலமாகவே கர்நாடகாவில் ஆட்சியைப் பிடித்தது பாஜக. இந்த முர்றை அவர்களை கர்நாடக மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். மோடி என்ன குட்டிக்கரணம் போட்டாலும் பாஜக வெல்ல முடியாது. எங்கள் மீது ஊழல் குற்றச்சாட்டு சுமத்துவதில் பாஜக ஆர்வமாக உள்ளது. அனைத்துமே ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள். டெல்லியில் நாங்கள் ஆட்சி செய்வது பாஜகவின் கண்ணை உறுத்துகிறது.
இவர்களுக்கு சாதகமாக தீர்ப்பு வழங்குபவர்களுக்கு உயர் பதவி அளிப்பது இவர்களுடைய வழக்கம். அந்த வகையில் ராகுல் காந்திக்கு சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்த நீதிபதிக்கும் பதவி உயர்வு வழங்கியுள்ளனர். வெட்கமே இல்லாத அரசாங்கம் பாஜக அரசாங்கம். அவர்கள் எந்த எல்லைக்கும் செல்வார்கள். மானங்கெட்ட கட்சி பாஜக. பாஜக செய்யும் மத அரசியல், சாதி அரசியலை மக்கள் புரிந்துகொண்டுள்ளனர். தமிழ்நாடு ஆளுநர் அவருடைய வேலையை மட்டும் செய்ய வேண்டும். அவருடைய பேச்சுக்களை இனி மக்கள் ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்ளக் கூடாது.
இந்த ஆளுநர் தமிழ்நாட்டுக்கு எதிரானவர். அரசுக்கு மட்டுமல்லாமல் மக்களுக்கும் எதிரானவராக இவர் இருக்கிறார். இவர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர் அல்ல. இந்த நிலைமை நீடித்தால் மக்களால் அடித்து விரட்டப்படுவார் ஆளுநர். ஆட்சியை எல்லாம் யாராலும் கலைக்க முடியாது. அதிமுகவின் ஜெயக்குமார் ஏதாவது பேச வேண்டும் என்று பேசுகிறார். திமுகவை குறை சொல்ல அதிமுகவுக்கு எந்தத் தகுதியும் இல்லை. குஜராத்தில் ஒவ்வொரு வருடமும் பல பெண்கள் கடத்தப்படுகிறார்கள் என்கிற தகவல் வந்துள்ளது. அப்படியென்றால் முதலில் கலைக்கப்பட வேண்டியது குஜராத் பாஜக அரசுதான்.
மக்கள் வாழ்வதற்குத் தகுதியில்லாத இடமாக குஜராத் இருக்கிறது. மோடியையும் பாஜக கூட்டத்தையும் முதலில் அப்புறப்படுத்த வேண்டும். அவர்களால் இன்று நாட்டுக்கு பேராபத்து ஏற்பட்டுள்ளது. ஜனநாயக விரோத செயல்களில் அவர்கள் ஈடுபட்டு வருகிறார்கள். அனைத்தையும் விட இன்று முக்கியமானது பாஜகவை வீழ்த்துவது தான். எனவே வரும் தேர்தலில் அவர்கள் வீழ்த்தப்படுவார்கள். வரும் 2024 தேர்தலில் ஒரு நல்ல ஆரோக்கியமான முடிவை ஆம் ஆத்மி எடுக்கும்.”