Skip to main content

எங்களிடம் ஒரு மந்திரம் இருக்கு! செயல் தலைவர் வசந்தகுமார் எம்.எல்.ஏ. பேட்டி

Published on 03/02/2019 | Edited on 04/02/2019
vasanthakumar



தமிழக காங்கிரஸ் கமிட்டியின் செயல் தலைவர்களில் ஒருவராக நியமிக்கப்பட்டுள்ள நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினர் வசந்தகுமார் நக்கீரன் இணையதளத்திடம் சில கருத்துக்களை பகிர்ந்து கொண்டார்.
 

செயல் தலைவர் பதவியை எப்படி நினைக்கிறீர்கள்?
 

ராகுல்காந்தி இந்த பதவியை வழங்கியிருக்கிறார். நல்ல பதவியை தந்த அவருக்கு நன்றிகளை தெரிவித்துக்கொள்வதோடு, கட்சிக்காக மேலும் தீவிரவமாக உழைப்பேன். 
 

பாராளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நேரத்தில் காங்கிரஸ் தலைவர் மாற்றப்பட்டுள்ளாரே?
 

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவரை நியமிப்பதும், மாற்றுவதும் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவரின் விருப்பம். அவருடைய விருப்பத்திற்கு ஏற்ப நாங்கள் செயல்படுகிறோம். 
 

பாராளுமன்றத் தேர்தலில் தமிழக காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாடு என்ன?
 

காங்கிரஸ் - திமுக கூட்டணித்தான் நிலைப்பாடு. 
 

திமுக - காங்கிரஸ் கூட்டணி பேச்சுவார்த்தை எப்படி உள்ளது?
 

திமுக - காங்கிரஸ் கூட்டணி என்பது ஏற்கனவே உறுதியாகிவிட்டது. அதில் எந்த பிரச்சனையும் இல்லை. 
 

திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு எத்தனை தொகுதிகள்? எந்தெந்த தொகுதிகள் ஒதுக்கப்படும்?
 

அது ராகுல்காந்திக்குத்தான் தெரியும். 
 

கடந்த பாராளுமன்றத் தேர்தலில் குமரியில் பொன்.ராதாகிருஷ்ணனை எதிர்த்து போட்டியிட்டு இரண்டாவது இடத்திற்கு வந்தீர்கள். வரும் பாராளுமன்றத் தேர்தலிலும் போட்டியிடுவீர்களா?
 

மீண்டும் குமரி தொகுதியில் போட்டியிடுவதற்கு ராகுல்காந்தியிடம் வாய்ப்பு கேட்போம். அவர் அனுமதித்தால் போட்டியிடுவோம். 
 

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியில் நிறைய உட்கட்சி பூசல் உள்ளதே?
 

காங்கிரஸ் கட்சி எந்த ஒரு தனி நபருக்கும் சொந்தமில்லை. அதில் நான் பெரியவனா? நீ பெரியவனா என்று சண்டைப்போடுவதில் அர்த்தமேயில்லை. எல்லோருக்கும் பெரியவங்க ராகுல்காந்திதான். ராகுல்காந்திதான் நெம்பர் 1. நாங்களெல்லாம் ஜீரோ. அதனால் ராகுல்காந்தி என்ன சொல்கிறாரோ அதனை நாங்கள் கேட்கப்போகிறோம். 
 

உட்கட்சி பூசலால் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் வெற்றி வாய்ப்பு பாதிக்காதா?
 

அதற்கெல்லாம் எங்களிடம் ஒரு மந்திரம் இருக்கு. நாங்கள் அந்த மந்திரத்தை பிரயோகிச்சமென்றால் எல்லாம் சரியாகிவிடும். 
 

ஜி.கே.வாசன் மீண்டும் அகில இந்திய காங்கிரஸ் கட்சியில் இணைவற்கான வாய்ப்பு உள்ளதா?
 

கண்டிஷன் பேரில் யாரையும் சேர்க்க மாட்டார்கள். யாராக இருந்தாலும் அவர்களாக வந்து காங்கிரஸ் கட்சியில் இணைந்துகொள்ள வேண்டியதுதான். 
 

இடைக்கால பட்ஜெட் வரக்கூடிய தேர்தலுக்கு பின் எடுக்கப்பட உள்ள புதிய வளர்ச்சிப்பாதைக்கான டிரைலர் என பிரதமர் நரேந்திர மோடி சொல்லியிருக்கிறாரே?
 

விவசாயிக்கு ஒரு நாளைக்கு 17 ரூபாய் கொடுப்பேன் என்பது டிரைலரா? ஜி.எஸ்.டி.யால் பாதிக்கப்பட்டவர்களுக்கு எந்த பதிலும் இல்லை. இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு பற்றி எதுவும் இல்லை. இந்த தற்காலிக பட்ஜெட் தற்காலிகமாகவே இருக்கும். பாராளுமன்றத் தேர்தலில் நாங்கள் வெற்றி பெற்று மக்கள் நலத் திட்டங்களை செயல்படுத்துவோம். 
 

மாநில அளவில் பொறுப்புக்கு வந்துவிட்டீர்கள். பாஜகவின் மாநிலத் தலைவராக இருப்பவர் தமிழிசை சௌந்தரராஜன் உங்கள் உறவினர். அவர்கள் காங்கிரஸ் கட்சியை எதிர்த்து கடுமையான பேட்டியோ, அறிக்கையோ வெளியிட்டால்...
 

அதையும் தாண்டி, அதற்கு மேலேயும் அறிக்கை வெளியிடுவோம். 

 

vasathakumar



உறவினர் என்பதால்...
 

யார் எந்த இடத்தில் இருந்தாலும் எங்களுக்கு கவலையில்லை. நாங்கள் பிறப்பால் காங்கிரஸ்காரர்கள். எங்களுக்கு காங்கிரஸ் கட்சித்தான் முக்கியம். சொந்தமெல்லாம் சம்மந்தமில்லை...
 

ராகுல்காந்தி பிரதமர் வேட்பாளராக முன்நிறுத்தப்படுவாரா?
 

கண்டிப்பாக.
 

மம்தா பானர்ஜி நடத்திய பொதுக்கூட்டத்தில் தேர்தலுக்குப் பின் பிரதமரை தேர்ந்தெடுப்போம் என அதில் கலந்து கொண்ட தலைவர்கள் பேசினார்களே?
 

அது அவர்களுடைய நிலைப்பாடு. ராகுல்காந்தியை பிரதமர் வேட்பாளராக முன்னுறுத்துவோம். வெற்றி பெறுவோம். அவர்களும் எங்களை ஆதரிப்பார்கள். 
 

 

 

சார்ந்த செய்திகள்