கடந்த 8ம் தேதி மதிமுக பொதுச்செயலாளர் வைகோவின் வேட்புமனு பரிசீலனை முடிந்தது. அதில் அவர் மாநிலங்களவை உறுப்பினராவதில் எவ்வித சிக்கலும் இல்லை என முடிவானது. இதைத்தொடர்ந்து அதை பல்வேறு தரப்பினரும் வரவேற்றனர். இந்நிலையில் இன்று துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடுவிற்கு அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் சசிகலா புஷ்பா கடிதம் எழுதியுள்ளார். அதில் பின்வருமாறு தெரிவித்துள்ளார்.
“தமிழக மாநிலங்களவை உறுப்பினராக வைகோ மனுதாக்கல் செய்துள்ளார். அவர் மீது காவல்துறையினர் தேசத்துரோக வழக்கு பிரிவு 124(எ) கீழ் வழக்குப்பதிவு செய்தனர். அதில் ஓராண்டு சிறைதண்டனை கொடுக்கப்பட்டது. இரண்டு ஆண்டு சிறைத்தண்டனை அளிக்கப்பட்டால் மட்டுமே பதவி ஏற்கமுடியாது.
அதே நேரம் தார்மீக ரீதியாக வைகோ மாநிலங்கவையில் பதவி ஏற்பு பிரமாணம் செய்துகொள்ள தகுதியற்றவர். அவர் தொடர்ச்சியாக தேசவிரோத கருத்துக்களையும், பிரமருக்கு எதிரான கருத்துக்களையும் பேசிவருகிறார். பிரதமரை தமிழினத்திற்கு எதிரானவர் என்கிற சித்தரிப்பை தமிழ் சமுதாய மக்களிடையே உருவாக்கி வருகிறார். தொடர்ந்து அவரது பேச்சு பிரதமருக்கு எதிரான ஒரு அலையை தமிழ் சமூகத்தில் உருவாக்கி வருகிறது.
தனக்களிக்கப்பட்ட தண்டனைக்குப்பிறகும் அவர் அளித்த பேட்டியில், தனது நிலையிலிருந்து மாறமாட்டேன், அதே தனது நிலைப்பாட்டில் தொடருவேன் என பகிரங்கமாக பேட்டி அளிக்கிறார். இது நீதித்துறையை அவமதிக்கும் தண்டனைக்குரிய செயலாகும். இதற்கு எதிராக நான் டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர உள்ளேன்.
தாங்கள் மேற்கண்ட நிலையை கருத்தில் கொண்டு வருங்கால இளைஞர் சமுதாயத்தை காக்கும் தார்மீக கடமை அடிப்படையில் தேசத்திற்கு எதிராக பேசுபவர்களுக்கு தக்க பாடம் புகட்டவேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.”
வைகோவின் மனு பரிசீலிக்கும்போது அதிமுக வேட்பாளர்கள் உள்ளிட்ட யாரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.