Published on 10/07/2019 | Edited on 10/07/2019
நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக கூட்டணி 353 இடங்களை பெற்று தனி பெரும்பான்மையுடன் ஆட்சியை கைபற்றியது. இதில் பாஜக மட்டும் 303 இடங்களை கைப்பற்றியது. காங்கிரஸ் கட்சி 52 இடங்களில் மட்டுமே வெற்றிபெற்று எதிர்க்கட்சி அந்தஸ்த்தை இழந்தது. நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் தோல்விக்கு பொறுப்பேற்று காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து ராகுல் காந்தி ராஜினாமா செய்தார். இந்த நிலையில் மக்களவையில் முதல் வரிசை இருக்கையில் யார் அமர்வது என்ற சர்ச்சை கிளம்பியுள்ளது.

அதாவது மக்களவையில் ராகுல்காந்திக்கு எதிர்க்கட்சிகளின் வரிசையில் முதல் வரிசையில் சீட் ஒதுக்கப்பட மாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் முதல் வரிசையில் காங்கிரஸின் சோனியா காந்திக்கும், காங்கிரஸ் மக்களவைக் குழுத் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுதரிக்கும் தலா ஒரு இடம் மட்டுமே ஒதுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. திமுக உட்பட மற்ற எதிர்க்கட்சிகளுக்கு முதல் வரிசையில் தலா ஒரு இடம் ஒதுக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. இதனையடுத்து ராகுல் காந்திக்கு இரண்டாம் வரிசையில் இடம் கொடுக்கப்படும் என்று சொல்லப்படுகிறது. ராகுல் காந்திக்கு முதல் வரிசையில் இடம் ஒதுக்கப்படாது என்று மக்களவையில் கூறியிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.