மறைந்த முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான கலைஞரின் 100வது பிறந்தநாள் இந்த ஆண்டு முழுவதும் கொண்டாடப்படும் என முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். அதனையொட்டி தமிழகம் முழுவதும் கலைஞர் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நிலையில் சென்னை துறைமுக சட்டமன்ற தொகுதியில் இராஜா அண்ணாமலை மன்றத்தில் அமைச்சர் சேகர்பாபு கலைஞர் நூற்றாண்டு விழாவை ஏற்பாடு செய்திருந்தார். அந்த விழாவில் வைரமுத்து, மதுக்கூர் ராமலிங்கம் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டு பேசினார்கள்.
அதில் வைரமுத்து பேசியதாவது; “கலைஞர் மிகச் சிறந்த நகைச்சுவையாளர் என்பதற்கு சான்றாக ஒன்றை சொல்கிறேன், ஒரு மேடையில் கலைஞர், நான், அமைச்சர்கள் உள்ளிட்டவர்கள் இருந்தோம். அந்த நிகழ்ச்சியை முடித்து விட்டு கலைஞர் வேறு ஒரு நிகழ்ச்சிக்கு போக வேண்டும் என்ற கட்டாயம். அதனை அறிந்து கொண்டு நாங்கள் அனைவரும் சுருக்கமாக உரையாற்றினோம். அந்த நேரத்தில் மீன்வளத்துறை அமைச்சராக இருந்த சாமி, கலைஞரை கடந்து ஒலிபெருக்கியில் பேச சென்றார். அப்போது கலைஞர், மீன்வளத்துறை அமைச்சர் என்பதற்காக சாமியை அழைத்து ‘திமிங்கலம் மாதிரி பேசக்கூடாது, அயிரை மீன் மாதிரி பேச வேண்டும்’ என்று கூறினார். இந்த நகைச்சுவையை கேட்டபிறகு தான் என்ன பேச வந்தோம் என்பதை மறந்து இரண்டே நிமிடத்தில் தனது உரையை முடித்தார் சாமி.
கலைஞரின் வாழ்க்கையில் அதிகமாக கவலைப்பட்டது தமிழர்களுக்கு இன்னும் கொஞ்சம் நன்றி இருந்திருக்கலாமே என்பது தான். குடிசை மாற்று வாரியம் அமைத்து வீடு கட்டி கொடுத்து வெள்ளை அடித்து கொடுத்தால் அந்த சுவற்றில் ‘கலைஞர் ஒழிக’ என்று எழுதி இருக்கிறார்கள் என்று கூறினார். ஒரு குடும்பத் தலைவன் தன் மனைவியிடமும், மகனிடமும் நன்றியை எதிர்பார்ப்பதை போல ஒரு நாட்டின் தலைவனும் மக்களிடம் நன்றியை எதிர்பார்க்கிறான். அதில் ஒன்றும் தவறு இல்லை. குறைந்தபட்சம் ஒரு புன்னகையில் தனது நன்றியை தெரிவித்திருக்கலாம். நன்றி இல்லாதது யாருடைய தவறு.
இதற்கு சான்றாக சங்க இலக்கியத்தில் இருந்து ஒரு பாடலை சொல்கிறேன்.‘யார் மேல தப்பு’ என்ற ஒரு பாடல் இருக்கிறது. அந்த பாடலில், ஒரு அழகான பெண் தண்ணீர் எடுப்பதற்கு வீதியில் செல்லும் போது அவள் அழகை பார்த்த அத்தனை ஆண்களும் மயங்கி விடுகிறார்கள். அந்த இடத்தில் புலவர், ‘இது யார் மேல தப்பு’. இது பெண்ணின் தவறா? அல்லது அவளை பெற்ற அவளின் பெற்றோர்களின் தவறா? என்று கேட்டுவிட்டு, இறுதியில் அந்த புலவர், அது அந்த நாட்டின் அரசன் மேல்தான் தப்பு என்று கூறுகிறார். ஏனென்றால், ஒரு நாட்டில், மதம் பிடித்த யானை ஒன்று ஆற்றுக்கு தண்ணீர் குடிக்க வருகிறது என்றால் பறை அடித்து மக்களுக்கு எச்சரிக்கைக் கொடுப்பார்கள். அதே போல் இப்படி ஒரு அழகான பெண் வீதியில் வருகிறாள் என்றால் பறை அடித்து தான் முன்னறிவிப்பு செய்திருக்க வேண்டாமா. எனவே இது அரசனின் தவறு தான் என்று புலவர் கூறுகிறார்.
அதே போல், இது கலைஞரின் தவறு தான். கலைஞர் குடிசை மாற்று வாரியம் அமைத்து சுவற்றை கட்டி கொடுத்தார். அந்த சுவற்றில் அவன் ‘கலைஞர் ஒழிக’என்று எழுகிறான் இது உங்களுக்கு தேவையா? என்று புலவர் அரசனிடம் கேட்பது போல் நாங்கள் கலைஞரிடம் கேட்டபோது, ‘விடுங்க தம்பி அவன் ஒழிக என்று எழுவதற்கு முன்னால் கலைஞர் என்று எழுதினால் அல்லவா’ என்று பதில் தருவார். இது தான் கலைஞர். கலைஞரை பற்றி பேச வேண்டுமென்றால் பேசி கொண்டே போகலாம்” என்று பேசினார்.