சிவகங்கை தொல் நடைக்குழு நிறுவனர் புலவர் கா. காளிராசா செய்தியாளர்களுக்கு தெரிவித்ததாவது, “சிவகங்கை தொல்நடைக் குழுவினர் தொல்லியல் சார்ந்த பொருட்கள், இடங்கள் பற்றி மாணவர்களுக்கும் பொது மக்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தொல்நடைப் பயணம் மேற்கொள்ளுதல், பள்ளி கல்லூரிகளில் கருத்தரங்கு நடத்துதல், உலகப் பாரம்பரிய நாள், வாரம் போன்ற விழாக்களைக் கொண்டாடுதல், அவ்வப்போது தொல்லியல் சார்ந்த கண்டுபிடிப்புகளை நிகழ்த்தி செய்தியாக வெளியிடுதல், தொல்லியல் தலங்களுக்குப் பொது மக்களையும் மாணவர்களையும் அழைத்துச் சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தல் போன்ற பணிகளைத் தொடர்ச்சியாக செய்து வருகிறது.
தற்போது சிவகங்கை தொல்நடைக்குழு தொல்நடைப் பயணம் 4-ஐ ஒருங்கிணைத்து குடுமியான்மலை, சித்தன்னவாசல், புதுக்கோட்டை அரசு அருங்காட்சியகம், திருமயம் ஆகிய இடங்களுக்கு அழைத்துச் சென்றனர். தொல்நடைப் பயணம் தொடங்குவதற்கு முன்பாக தொல்நடைப் பயண கையேடு வெளியிடப்பட்டது இக்கையேட்டை தலைவர் சுந்தரராஜன், துணைத் தலைவர் முனீஸ்வரன் வெளியிட ஓய்வு பெற்ற வேளாண் இணை இயக்குநர் இளங்கோ பெற்றுக் கொண்டார்.
குடுமியான் மலையில் உள்ள இசைக் கல்வெட்டு மற்றும் ஏழாம் நூற்றாண்டு குடைவரைக் கோவில் அங்குள்ள பாண்டியர் கால கல்வெட்டுகள், சிகா நாதர் திருக்கோவில், நாயக்கர் கால வியத்தகு கற்சிலைகள் ஆகியவற்றைக் கண்டு மகிழ்ந்தனர். சித்தன்னவாசலில் உள்ள 1200 ஆண்டுகள் பழமையான குடைவரை ஓவியங்களைப் பார்த்து அன்றைய நாளில் எளிய வண்ணங்களைக் கொண்டு இவ்வளவு சிறப்பாக வரைந்த திறனைப் பார்த்து வியந்து போயினர்.
புதுக்கோட்டை அரசு அருங்காட்சியகத்தில் உள்ள பறவைகள், பாம்பினங்கள், கடல் வாழ் உயிரினங்கள் போன்ற பதப்படுத்தப்பட்ட காட்சிக் கூடங்களைப் பார்த்தும் அங்குள்ள டைனோசர் அசைவு மற்றும் ஒலிக் காட்சியைக் கண்டும் பிரமித்தனர். பின்னர் சேதுபதி மன்னர்களால் கட்டப்பட்ட திருமயம் மலைக்கோட்டை, கோட்டையின் இடைப்பகுதியில் அமைந்துள்ள சிவன் குடைவரை, திருமயம் மலையில் தென்பகுதியில் அமைந்துள்ள ஏழாம் நூற்றாண்டு திருமால் குடைவரைக் கோவில். சிவன் கோவில் போன்றவற்றை கண்டனர். மேலும் அங்குள்ள கல்வெட்டுகள், இசை சார்ந்த கல்வெட்டு லிங்கோத்தவர் சிற்பம், சிவனுக்கு வாயிற்காவலராக நிற்கும் எமன் மற்றும் சித்திரகுப்தர் சிற்பங்களைப் பார்த்தும் மகிழ்ந்தனர். இந்த தொல்நடைப் பயணம் மிகுந்த மகிழ்ச்சி அளித்தவுடன் தொல்லியல் சார்ந்த விழிப்புணர்வு ஏற்படுத்தியதாகக் கலந்து கொண்டவர்கள் கூறினர். இதில் சிவகங்கை தொல்நடைக்குழு தலைவர் சுந்தரராஜன், செயலர் இரா. நரசிம்மன், துணைத் தலைவர் முனீஸ்வரன், ஓய்வு பெற்ற வேளாண்மை இணை இயக்குநர் இளங்கோவன், ஓய்வு பெற்ற வங்கி மேலாளர் முருகானந்தம், ஆசிரியர் முத்து காமாட்சி இந்திரா, ஈஸ்வரி, லோகமித்ரா ஆகியோருடன் 25 மாணவர்கள் உட்பட எண்பதுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்” என்று தெரிவித்தார்.