கரோனா நோய்த் தொற்று பரவலைக் கட்டுக்குள் கொண்டு வரும் நோக்கில் நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்ட பொது முடக்கத்தால் பாதிக்கப்பட்ட பொருளாதாரம் மற்றும் வாழ்வாதாரத்தை அடுத்து பூதாகரமாக விஸ்வரூபம் எடுத்து வருவது வேலையிழப்பு.
இந்தியாவில், கேரளத்திற்கு அடுத்து தமிழ்நாட்டில் இருந்துதான் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் அமெரிக்கா, சௌதி அரேபியா, குவைத், மலேசியா, கனடா, சிங்கப்பூர் உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்குப் பணி நிமித்தமாகச் செல்கின்றனர்.
கோவிட் – 19 பரவல் காரணமாக அமெரிக்காவில் வேலையிழப்பு அதிகரித்து வருவதால், உள்நாட்டுப் பணியாளர்களுக்கு முதலில் முக்கியத்துவம் கொடுக்கவேண்டும் என்ற நோக்கில், மற்ற நாடுகளில் இருந்து, அறிவியல், மருத்துவம், தொழில் நுட்பத் துறையில் சிறப்புப் பணிகளை மேற்கொள்பவர்களுக்கு வழங்கும் ஹெச்1பி விசா மற்றும் பிற பணிகளுக்கு ஹெச்2பி மூலம், அமெரிக்காவில் பணியாற்றி வருபவர்களை வெளியேற்றும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது அமெரிக்க அரசு.
அமெரிக்காவில் ஹெச்1பி விசாமூலம் பணி புரிந்து வருபவர்களில் இந்திய ஐ.டி. துறையைச் சேர்ந்தவர்கள்தான் அதிகம். 3 லட்சத்துக்கும் மேற்பட்ட இந்தியர்கள் ஹெச்1பி விசாவில் பணியாற்றி வருகின்றனர். இவர்களில் பெரும்பாலானோருக்கு வேலை பறிபோகும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில், குறிப்பாக பெங்களூர் மற்றும் சென்னையில் பல ஐ.டி. நிறுவனங்கள் பணியாளர்களை வீட்டிலிருந்தே (Work from home) பணி புரியும் நிலையை உருவாக்கித் தந்துள்ளது. அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகளிலிருந்து வரும் பணி வாய்ப்புகள் குறைந்து வரும் நிலையில், ஐ.டி. நிறுவனங்களில் பணியாற்றும் பல நிலை ஊழியர்களின் வேலையில் நிச்சயமற்ற தன்மை உள்ளதால் பல பணியாளர்களுக்கு வேலை பறிபோகும் அபாயம் உள்ளது.
கால் டாக்சி மற்றும் உணவு விநியோகிக்கும் நிறுவனமான உஃபர் நிறுவனம், தங்கள் அமெரிக்க கிளைகளில் பணி புரியும் பணியாளர்களை, வணிகம் குறைந்துள்ளதைக் காரணம் காட்டி ஒரே நாளில் 3,700 பேரை பணிகளில் இருந்து நீக்கியுள்ளது.
பல வெளிநாடுகளில் பணி புரிந்து வரும் இந்தியர்களும், அதே போன்ற வேலையிழப்பு நெருக்கடியை எதிர்கொண்டு வருகின்றனர்.
சர்வதேச மேலாண்மை ஆலோசனை நிறுவனமான ‘ஆர்தர் டி லிட்டில்’ வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில், “நாட்டில் வேலையின்மை 7.6 சதவீதாம் என்பதிலிருந்து 35 சதவீதமாக அதிகரிக்க வாய்ப்புள்ளது. சுமார் 13.6 கோடி பேர், தங்களது வேலையை இழப்பார்கள் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இதனால் வேலையில்லாதோர் எண்ணிக்கை 17.4 கோடியாக உயரும்” என்று அந்த ஆய்வறிக்கையில் கூறப்பட்பட்டுள்ளது.
பி.விஜயலட்சுமி
தமிழகத்தில் சில ஆண்டுகளாக வேலையில்லா திண்டாட்டம் இருந்தபோதிலும தற்போது ஊரடங்கால், தொழில் முடக்கம், உற்பத்தி பாதிப்பு, விற்பனை தேக்கம் உள்ளிட்ட காரணங்களால் பல நிறுவனங்கள் மூடபடும் வாய்ப்புள்ளதால், வேலையிழப்பு அதிகமாகும்.
படித்து, பட்டம் பெற்ற இளைஞர்கள் வேலைக்காக காத்திருப்போர் பட்டியல் நீண்டுள்ள நிலையில், இந்தாண்டு படித்து முடித்து கல்லூரிகள் குறிப்பாக பொறியியல் கல்லூரிகளிலிருந்து வெளிவரும் இலட்சக்கணக்கான இளைஞர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகும்.
இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்திக் கொடுப்பதற்காக, ‘எம்ப்ளாய்மென்ட் எக்ஸ்சேஞ்ச்’ எனப்படும், மாநில அரசின் வேலை வாய்ப்பு அலுவலகங்கள், எல்லா நகரங்களிலும் உள்ளன. அவற்றால், படித்த இளைஞர்களுக்கு பயன் இருக்கிறதா என்பது பலரின் நீண்ட நாள் கேள்வி.
தமிழக அரசில், வேலைகளுக்கு ஆட்களைத் தேர்வு செய்ய நடத்தப்படும், டி.என்.பி.எஸ்.சி., குரூப் 2 மற்றும் குரூப் 4 சமீபத்தில் நடத்தப்பட்ட தேர்வுகளில் வெட்கக்கேடான முறைகேடுகளால், நியாயமான முறையில் வேலைவாய்ப்பு கிடைக்குமா? என்று இளைஞர்களுக்கும், அவர்களின் பெற்றோருக்கும் அச்சத்தை ஏற்படுத்தும் வகையில், தமிழகத்தின் வேலைவாய்ப்பு நிலை உள்ளது.
சமீபகாலமாக, தமிழகத்தில் பெரிய அளவில், எந்தத் தொழில் நிறுவனமும் தொழில் தொடங்கவில்லை. ஏற்கனவே பல ஆண்டுகளாக செயல்பட்ட, சில நிறுவனங்கள் ஜி.எஸ்.டி. போன்ற பல பிரச்சினைகளால் அண்டை மாநிலங்களுக்கு இடம் பெயர்ந்தன.
இந்நிலையில், இந்தியப் பொருளாதாரத்தைச் சமன் செய்ய, சிறப்பாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கும் எல்.ஐ.சி. உட்பட பொதுத்துறை நிறுவனங்களைத் தனியாருக்கு தாரைவார்த்து கொடுக்கும் முயற்சியில் மத்திய அரசு தொடர்ந்து நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது.
பொது முடக்கத்தால் ஏற்பட்டுள்ள இழப்பைப் போக்க, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், தற்போது வெளியிட்டுள்ள அறிக்கையில், “மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதியளிப்புத் திட்டத்தின் கீழ், வெளி மாநிலத்துக்குச் சென்று பணியாற்றிவிட்டு, சொந்த மாநிலம் திரும்பியுள்ள தொழிலாளர்கள் தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தில் சேர்க்கப்படுவார்கள்.
இதன்மூலம் 14.62 கோடி பேருக்கு வேலை வாய்ப்பு அளிக்கப்படும். புதிதாக 2.33 கோடி வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன” என்று தெரிவித்துள்ளார். அனைவருக்கும் பொருந்தாத இத்திட்டத்தால் என்ன பயன்? மத்திய அரசு அறிவிக்கும் அனைத்துத் திட்டங்களும், திட்டங்களாகவே உள்ளன. நடைமுறைப்படுத்தப்பட்டு சாமானிய மக்கள் எளிதாகப் பயன்பெறும் வகையில் அமைவதில்லை!
மத்திய அரசின் நிலைமை இவ்வாறு இருக்க, மாநில அரசு, “இந்தியாவின் எதிர்காலம்” என்று போற்றப்படும் இளைஞர்களின் வாழ்க்கையை நிர்ணயிக்கும் வேலை வாய்ப்பில் அதிக அக்கறை கொள்ளாமல், இரண்டு முறை (2015 ஜெயலலிதா அம்மையார் முதல்வராக இருந்த கால கட்டம்) மற்றும் 2019ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற ‘உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில்’ பல இலட்சம் கோடி ரூபாய்க்கு, தமிழகத்தில் புதிய தொழில் துவங்க பல புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டதாகவும், இதன்மூலம் பல புதிய தொழிற்சாலைகள் நிறுவப்படவுள்ளதாகவும் இன்றைய முதல்வர் பெருமிதத்துடன் அன்றைய சூழலில் தெரிவித்தார். அதன் வெளிபடை தன்மையும், உண்மை நிலையும் நன்கு அறிவோம்.
ஊரடங்குக்கு பின்னர் தமிழகத்தில், வேலையின்மையால், பட்டதாரி இளைஞர்களின் எதிர்கால வாழ்க்கை தலைகீழாக மாறும். மேலே நாடுகளிலிருந்து வரும் பணியாளர்களை வேலையில் அமர்த்தவே பல நிறுவனம் ஆர்வம் காட்டும். இதனால் கிராமப்புற மற்றும் சென்னைவாசிகளுக்கு வேலை வாய்ப்பு என்பது பெரும் சவாலாக அமையும்.
படித்து முடித்து, பல கனவுகளோடு வெளிவரும் இளைஞர்களுக்கு நல்ல பாதையை அமைத்து கொடுக்க வேண்டியது பெற்றோரின் பொறுப்பு மட்டும் அன்றி அரசாங்கத்தின் தலையாய கடமையாகும்.
கரோனா நோய்த் தொற்றில் இருந்து மக்களின் உயிர்களைக் காப்பதில் மட்டுமின்றி; நாட்டில் பெரிய விளைவுகளை ஏற்படுத்தும் வேலையிழப்பு பிரச்சினையிலிருந்து பணியாளர்களைக் காக்கும் பொறுப்பும் அரசுக்கு உள்ளது. மத்திய - மாநில அரசுகள் வேலை வாய்ப்பில் உறுதியான அணுகுமுறையைக் கையாளவேண்டும் என்பதே அனைவரின் விருப்பம்!.
திருமதி. பி.விஜயலட்சுமி
சமூக ஆர்வலர்.