தமிழ்நாடு அரசு கேபிள் டிவி கட்டணத்தை குறைத்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டு மக்களின் கோரிக்கையை ஏற்று, தமிழ்நாடு முழுவதும் (வேலூர் மாவட்டம் நீங்கலாக) வருகிற 10-ந்தேதி முதல் ரூ.130+ஜி.எஸ்.டி. என்ற மாத சந்தா கட்டணம் நிர்ணயித்துள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன் என முதல்வர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் தற்போது அரசு கேபிள் டி.வி. கட்டணமாக மாதம் ரூ.220 + ஜி.எஸ்.டி. கட்டணம் சேர்த்து ரூ.259.60 வசூலிக்கப்பட்டது. கட்டண குறைப்பு மூலம் இனி ரூ.153.40 வசூலிக்கப்படும். இதன்படி கட்டணம் ரூ.106 அதிரடியாக குறைக்கப்பட்டுள்ளது. திடீர் என்று எதற்காக இந்த கட்டணம் சலுகை பற்றிய அறிவிப்பு வெளியானது என்ற சர்ச்சை தற்போது எழுந்துள்ளது. வேலூர் தொகுதி தேர்தலே அதற்கு காரணம் என்றும் கூறப்படுகிறது.
சில தினங்களுக்கு முன் வேலூர் தொகுதி தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய திமுக தலைவர் மு.க ஸ்டாலின் தமிழகத்தில் கேபிள் டிவி கண்டனம் எந்த அளவுக்கு உள்ளது என்பதை புள்ளி விவரங்களோடு சில தகவல்களை தெரிவித்தார். மேலும், ஏழை எளிய மக்கள் எப்படி இந்த அளவுக்கு கட்டணம் செலுத்துவார்கள் என்று கேள்வி எழுப்பினார். இந்த விவகாரம் முதல்வர் தரப்புக்கு, உளவுத்துறை வாயிலாக சென்றுள்ளது. ஏற்கனவே, முத்தலாக் விவகாரத்தில் ரவீந்தரநாத் ஆதரவாக வாக்களித்ததால் முஸ்லிம்கள் அதிருப்தியில் இருப்பதாக கூறப்பட்டு வரும் நிலையில், ஸ்டாலின் பிரச்சாரம் மேலும் மக்கள் மத்தியில் அதிமுகவுக்கு எதிர்ப்பை ஏற்படுத்தும் என அவருக்கு தகவல் சொல்லப்பட்டதாக கூறப்படுக்கிறது. இதனால், கேபிள் டிவி இயக்குநர்களிடம் ஆலோசனை மேற்கொண்ட முதல்வர் எடப்பாடி, ஆலோசனையின் முடிவில் கட்டண குறைப்புக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.