கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆளுநரை எடப்பாடி பழனிசாமி சந்தித்துப் பேசினார். அப்போது ஆளுங்கட்சியான திமுக மீது பல்வேறு ஊழல் புகார்களைக் கொடுத்ததாகச் செய்தியாளர்களிடம் தெரிவித்திருந்தார். இந்த விவகாரம் ஆச்சரியத்தை ஏற்படுத்திய நிலையில், இதுதொடர்பாக பன்னீர்செல்வம் அணியினர் அவரை கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார்கள். அமித்ஷா வருகையின் போது வாய் தவறிப் பேசியதற்காக மன்னிப்பு கேட்கவே அவர் சென்றதாகப் பன்னீர் அணியினர் எடப்பாடியை காய்ச்சி எடுத்து வருகிறார்கள்.
இந்த சூழ்நிலையில் சில நாட்களுக்கு முன்பு செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய எடப்பாடி பழனிசாமி அதிமுக தலைமையில் மிகப் பிரமாண்டமான கூட்டணி வரும் நாடாளுமன்றத் தேர்தலில் அமைக்கப்படும் என்று கூறியிருந்தார். இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாகப் பத்திரிகையாளரின் கேள்வி ஒன்றுக்குப் பதிலளித்த எடப்பாடி பழனிசாமி, அதிமுகவின் மெகா கூட்டணியில் டிடிவி தினகரனின் கட்சிக்கு ஒருபோதும் இடமில்லை என்று தெரிவித்திருந்தார். இந்த விவகாரம் அப்போதே சூடுபிடித்திருந்த நிலையில் இதுதொடர்பாக அடுத்த நாள் கருத்து தெரிவித்த டிடிவி தினகரன் எடப்பாடியுடன் கூட்டணிக்கு வருகிறேன் என்று யாராவது அவரிடம் சொன்னார்களா? அவர் எங்களை வேண்டாம் என்று சொல்ல என்ன இருக்கிறது; அவரையே நாங்கள் ஏற்கவில்லை என்று தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக தற்போது செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய டிடிவி தினகரன் இதுதொடர்பாக பேசியதாவது, " அதிமுகவில் எடப்பாடி அணியில் என்ன இருக்கிறது என்று அவர் மெகா கூட்டணிக்கு அழைப்பு விடுக்கிறார் என்று தெரியவில்லை. கட்சியின் சின்னம் இல்லை; ஆனால் நாங்கள் மெகா கூட்டணிக்குத் தயார் என்று போகும் இடங்களில் எல்லாம் தொடர்ந்து கூறிக்கொண்டு வருகிறார். கட்சியின் அலுவலகத்தையும், பேரையும் வைத்துக்கொண்டு எப்படித் தேர்தலில் நிற்க முடியும் என்று எனக்குத் தெரியவில்லை. எடப்பாடியிடம் அது இரண்டு மட்டும்தான் இருக்கிறது.
தன்னிடமும் ஒரு கட்சி இருக்கிறது; நானும் தேர்தலில் நிற்க விரும்புகிறேன் என்ற நினைப்பில் பேசுகிறார். கூடுதலாக அவர் எதிர்க்கட்சி தலைவராகவும் இருப்பதால் நாம் கூறினால் அனைவரும் நம்புவார்கள் என்று கூறி வாய்க்கு வந்ததை எல்லாம் அடித்து விடுகிறார். ஆனால் அது எதுவுமே சாத்தியமில்லை என்பது நம் அனைவருக்குமே தெரியும். அவரை எந்தக் கட்சியும் நம்பவும் நம்பாது. அவரின் கடந்த கால வரலாறு அப்படி. எனவே அவரை நம்பி கூட்டணிக்கு நாங்கள் மட்டும் அல்ல, யாரும் செல்லமாட்டார்கள். அப்படி நடந்தால் அது தேர்தல் தோல்விக்கு முதல் ஆரம்பமாகத்தான் இருக்கும்.
சின்னம் எங்கே முடங்கியது என்று கேட்கிறீர்கள்; ஆனால் முறையாக இரட்டை இலை சின்னம் இதுவரை முடக்கப்படவில்லை என்றாலும் முடக்கப்பட்ட நிலையில் தானே சின்னம் இருக்கிறது. உள்ளாட்சி இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னம் அக்கட்சிக்குக் கிடைத்ததா? இதற்கு எடப்பாடி விளக்கம் கொடுக்க முடியுமா? இவர் மெகா கூட்டணி அமைப்போம் என்கிறார். இவருடன் கூட்டணி குறித்த கேள்வியைத் தொடர்ந்து கேட்கிறீர்கள், இந்த டுபாக்கூர் அணியுடன் எந்தக் காலத்திலும் கூட்டணி இல்லை. இந்த இருவரும் இணைவது தொடர்பாகக் கேட்கிறீர்கள், அவர்களை ஏற்கனவே யார் இணைத்தார்களோ அவர்கள் நினைத்தால் மீண்டும் இணைவார்கள். அதைத்தவிர வேறு வாய்ப்பில்லை, எனக்கும் அவர்கள் இணைப்புக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. தொடர்பும் இல்லை.