அமித் பகாரியா என்ற பெயரை எத்தனை பேர் கேள்விப்பட்டிருப்பார்கள்? தானுண்டு தன் பிழைப்புண்டு என்று வாழ்நாளை ஓட்டிக்கொண்டிருக்கும் சராசரி குடிமக்கள் பெரும்பாலானோரில் எவரும் கேள்விப்பட்டிருக்கமாட்டார்கள் என்று உறுதிபட கூறிவிடலாம்.
ஆனால், அமித் பகாரியா எவரும் அறிந்திராத அல்லது ‘எல்லோரும் அறிந்த, எங்கும் நிறைந்த’ சராசரிக் குடிமகன்களில் ஒருவர் இல்லை. இந்தியாவின் பெரும் தொழிலதிபர்களில் ஒருவர். 1938 இல் இருந்து வணிகத்திலும் 1949 இல் இருந்து தொழில் துறையிலும் முதலீடு செய்து வெற்றிகரமாக இயங்கி வரும் வணிகக் குடும்பத்தில் பிறந்தவர். 1992 இல் குடும்பத் தொழிலை நிர்வகிப்பதிலிருந்து விலகிக்கொண்டு, சொந்தமாக மருத்துவத்துறை சார்ந்த தொழிலை ஆரம்பித்து, மிகக் குறுகிய காலத்தில் டாட்டா, ரிலையன்ஸ், பிர்லா, சகாரா, போன்ற பெரும் நிறுவனங்களுடன் 2000 கோடி வர்த்தகம் செய்தவர்.
அதிக விற்பனையை எட்டிய மருத்துவ கட்டுமான திட்டமிடுதல் குறித்த நூல் ஒன்றை எழுதியவர். இந்தியன் எக்ஸ்பிரஸ், இமேஜஸ் ரீடெய்ல், இமேஜஸ் மெயில் இயர்புக் போன்ற இதழ்களில் கட்டுரைகள் எழுதியவர். இந்தியாவின் அனைத்து முன்னணி பத்திரிகைகளிலும் இவரைப் பற்றி கட்டுரைகள் வெளியாகியிருக்கின்றன. பிபிசி, சிஎன்பிசி, என்டிடிவி, ஸ்டார் டிவி போன்ற முன்னணி தொலைக்காட்சிகளிலும் இவரைப் பற்றிய செய்திகளும் நிகழ்ச்சிகளும் ஒளிபரப்பாகியிருக்கின்றன. சுருங்கக் கூறினால், இந்தியாவின் மேட்டுக் குடியினர் மத்தியில் நன்கு அறியப்பட்டவர். அவர்களில் ஒருவர்.
அமித் பகாரியா தொழில் – வணிகம் என்ற வட்டத்தோடு தன்னைச் சுருக்கிக்கொள்பவரும் இல்லை. அரசியலிலும் தீவிர ஆர்வம் காட்டி வருபவர். போர்த்திற வல்லுநர் – strategist என்று தன்னைப் பற்றி தானே சொல்லிக்கொள்பவர். அவருடைய வலைப்பக்கத்தில் தன்னை அவ்வாறே அறிமுகம் செய்துகொள்கிறார். (பார்க்க:https://www.amitbagaria65.com/home/tag/1914%3A%20NaMo%20or%20MoNa). நரேந்திர மோடியின் தீவிர ஆதரவாளர்.
இந்தியாவை காக்க கடவுள் எடுத்த அவதாரமே நரேந்திர மோடி என்ற பாஜக தீவிர தொண்டர்களின் நம்பிக்கையை அனுசரனையோடு பார்ப்பவர். இக்கருத்தை முன்மொழிந்து தொடங்கும் கட்டுரை ஒன்றை அவரது வலைப்பக்கத்தில் காணலாம். மீண்டும் நரேந்திர மோடியே பிரதமராக வேண்டும் என்ற தீவிரமான விருப்பத்தை கொண்டிருப்பவர். அதன்பொருட்டு, கடந்த ஆண்டு இவர் எழுதி வெளியிட்ட நூல் தான் '1914 – நமோ ஆர் மோனா' (1914: NaMo or MoNa).
வர இருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகளை இந்நூலில் அலசும் இவர், அதற்கான சாத்தியங்கள் குறைவாக இருப்பதை ஒப்புக்கொள்கிறார். பாஜக-வின் செல்வாக்கு பல மாநிலங்களிலும் சரிந்திருப்பதையும் தென்மாநிலங்களில் பாஜக இன்னும் காலூன்றவே இல்லை என்பதையும் விலாவாரியாக அலசியிருக்கும் இந்நூலில், இந்நிலைமை தொடர்ந்தால், பாராளுமன்ற தேர்தலுக்குப் பிறகு எதிர்கட்சிகளின் கூட்டணி ஆட்சிதான் அமையும் என்றும் அவர்கள் மமதா பானர்ஜியை பிரதம மந்திரியாக தேர்தெடுப்பார்கள் என்றும் கணிக்கிறார்.
ஆனால், நூலின் சுவாரசியம் இந்தக் கணிப்பில் இல்லை. சரிந்திருக்கும் செல்வாக்கை மீட்டு, வரும் நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெறுவதற்கு நரேந்திர மோடி அரசு செய்யவேண்டியவை என்ன என்று இவர் கூறும் ஆலோசனைகள் சுவாரசியம் மிக்கவை என்பதையும் மீறி அதிர்ச்சி தரக்கூடியவை.
அந்த ஆலோசனைகள் பின்வருமாறு:
1. தேர்தலுக்கு ஆறு அல்லது ஐந்து வாரங்களுக்கு முன்பாக, தாவூத் இப்ராஹீம் அல்லது ஹசீஃப் சையது (லக்ஷர் – இ – தய்பாவின் நிறுவனர்களில் ஒருவர்) ஆகிய இருவரில் ஒருவரை கொன்று இந்தியாவிற்கு கொண்டு வரவேண்டும். அதோடு, பாகிஸ்தான் ஆக்கிரமித்துள்ள காஷ்மீர் பகுதிகளில் உள்ள பாகிஸ்தான் தீவிரவாதிகள் முகாம்களின் மீது ஒரு 'சர்ஜிகல் ஸ்ட்ரைக்' தாக்குதலை தேர்தலுக்கு முன்பாக தொடுக்கவேண்டும். அவ்வாறு செய்தால், பாஜக சிறிய வித்தியாசத்தில் வெற்றி பெற்றுவிடும்.
2. சோனியா காந்தி, ராகுல் காந்தி, ப்ரியங்கா காந்தியின் கணவர் ராபர்ட் வதேரா ஆகிய மூவரையும் ஊழல் வழக்குகளில் கைது செய்யவேண்டும். இவர்களோடு, ப. சிதம்பரத்தையும் ஊழல் வழக்கில் கைது செய்யவேண்டும். அதோடு, விஜய் மல்லய்யா அல்லது நீரவ் மோடி ஆகிய இருவரில் ஒருவரை கைது செய்து இந்தியாவிற்கு கொண்டு வரவேண்டும். மேலே குறித்துள்ள முதல் ஆலோசனையோடு சேர்த்து இவற்றையும் செய்தால், பாஜக 350 -ற்கும் மேற்பட்ட தொகுதிகளில் எளிதாக வெற்றி பெற்று அறுதிப் பெரும்பான்மையை எட்டிவிடும்.
3. மேலுள்ள இரண்டு ஆலோசனைகளையும் ஒரு மாற்று வழியாகத்தான் அமித் பகாரியா முன்மொழிகிறார். அவர் சொல்லும் முதல் ஆலோசனை இன்னும் தீவிரமானது. பாகிஸ்தான் மீது 7 - 10 நாட்களில் முடியக்கூடிய குறுகிய கால போர் ஒன்றை தொடுத்து, பாகிஸ்தான் என்ற நாட்டை உலக வரைபடத்திலிருந்தே அழித்துவிடவேண்டும் என்பதுதான் அவர் சொல்லும் முதல் ஆலோசனை.
பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் நாடு என்று உலக அரங்கில் பாகிஸ்தான் தனிமைப்பட்டு இருப்பதாலும், அதன் பொருளாதாரம் மோசமான நிலையில் இருப்பதாலும், அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பும் ஐரோப்பிய கூட்டமைப்பு நாடுகளும் பாகிஸ்தானுக்கு எதிரான கண்டிப்பான நிலையை எடுத்திருப்பதாலும், இந்தப் போரை உலக நாடுகள் எதிர்க்கமாட்டார்கள் என்றும், 7 – 10 நாட்களில் போரை வெற்றிகரமாக முடித்துவிடலாம் என்றும் சர்வ சாதாரணமாக சொல்லிச் செல்கிறார் அமித் பகாரியா.
அமித் பகாரியாவின் இந்த ஆலோசனைகள் ஏதோ ஒரு பெரும் பணக்காரரின் அசட்டுத்தனமான பேச்சு அல்ல. பாஜகவின் அடிமட்ட தொண்டர்களிலிருந்து, உயர்மட்ட தலைவர்கள் வரை பலருக்கும் இருக்கக்கூடிய சிந்தனையை, வெளிப்படுத்தியுள்ளார் அமித் பகாரியா என்றே சொல்லவேண்டும்.
காஷ்மீரில் சிஆர்பிஎஃப் வீரர்கள் மீது தீவிரவாதிகள் தாக்குதல் என்ற செய்தி வெளியானவுடன், “மக்களுடைய இரத்தம் கொதித்துக்கொண்டு இருக்கிறது” என்று நரேந்திர மோடி எதிர்வினை ஆற்றியிருக்கிறார். பாஜக மீண்டும் ஆட்சியை கைப்பற்ற அண்டை நாட்டின் மீது போர் தொடுப்பதுதான் கடைசி ஆயுதம் என்றால் அதற்கு பாஜகவின் அடிமட்ட தொண்டர்களிலிருந்து உயர்மட்ட தலைவர்கள் வரை தயங்கமாட்டார்கள் என்பதை வெளிப்படையாக சொன்ன அமித் பகாரியாவின் ‘சிந்தனையை’ பாஜக தலைவர்கள் நடைமுறையில் பிரயோகம் செய்ய தயாராகிறார்களோ என்று எண்ணச் செய்கிறது அவருடைய எதிர்வினை.
அப்படி ஒரு போர் தொடுக்கப்பட்டால், அது அண்டை நாட்டின் மீதான போராக மட்டும் இருக்காது. சொந்த நாட்டில் தனது எதிரிகள் என்று கருதுவோர் மீதும் பாஜக தொடுக்கும் போராகவும் நீளும்.
கட்டுரையாளரை தொடர்பு கொள்ள... (mathi2006@gmail.com)