இரண்டு நாள் பயணமாக சென்னை வந்த தமிழக காங்கிரசின் புதிய மேலிட பொறுப்பாளரான தினேஷ்குண்டுராவ், சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்வது குறித்து கட்சியின் மூத்த தலைவர்கள் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகளிடம் முதல்கட்ட ஆலோசனையை நடத்தி முடித்திருக்கிறார். சென்னை வந்த முதல் நாளே கூட்டணிக்கு வேட்டு வைக்கும் விதமாக தினேஷ் குண்டுராவ் பேசியதில் பதறிப்போனார்கள் காங்கிரஸ் தலைவர்கள்.
சென்னையில் தினேஷ்குண்டுராவுக்கு உற்சாகமான வரவேற்பை தந்து அசத்தினர் கதர் சட்டையினர். அந்த வரவேற்பில் திக்குமுக்காடிப் போனார், நான்கு முறை தொடர்ச்சியாக கர்நாடகாவில் எம்.எல்.ஏ.வாக இருக்கும் தினேஷ் குண்டுராவ். பத்திரிகையாளர்களை சந்தித்த தினேஷ்குண்டுராவிடம் சட்டமன்ற தேர்தல் குறித்து கேட்கப்பட்ட ஒரு கேள்விக்கு, "சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று திமுக-காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமைக்கும்'' என்றார் மிக சாதாரணமாக.
கூட்டணி ஆட்சி என்ற வார்த்தையை தமிழகத்தின் முக்கிய கட்சிகளான தி.மு.க., அ.தி.மு.க. இரண்டும் விரும்புவதில்லை. அதனால், காங்கிரஸ் தலைவர்கள் ஏகத்துக்கும் பதறிப் போனார்கள். ஆனால், காங்கிரஸ் தொண்டர்களை அது உற்சாகமடைய வைத்தது, டெல்லி வரை பரபரப்பானது.
தினேஷூக்கு மேலிடத்திலிருந்து செம டோஸ். இதுகுறித்து கட்சி சீனியர்களிடம் தனது கருத்தை தினேஷ் முன்வைத்தபோது, கர்நாடகத்தில் செய்வது போல தமிழகத்தில் காங்கிரஸ் அரசியல் செய்திட முடியாது என்பதையும் எடுத்து சொல்லியிருக்கிறார்கள். இந்த ஆலோசனையை அடுத்து, திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் ஆட்சி அமையும் என ஒரு விளக்கத்தை கொடுத்து, சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்தார் தினேஷ்குண்டுராவ்.
இந்த நிலையில், கட்சியின் முன்னாள் தலைவர்கள் மற்றும் முக்கிய பொறுப்பாளர்களிடம் குரூப் குரூப்பாக ஆலோசனை நடத்தினார் தினேஷ்குண்டுராவ். கட்சியினருடனான ஆலோசனைக் கூட்டத்தில், எடுத்த எடுப்பிலேயே, "கூட்டணி பற்றி எதுவும் பேசக்கூடாது. தேர்தலில் திமுக-காங்கிரஸ் கூட்டணியின் வெற்றிக்கு என்ன செய்யலாம் என்பதைத்தான் பேச வேண்டும் என்ற அவர், எனக்கு தமிழ் தெரியாதுன்னு நினைச்சி மோசமாக கமெண்ட் பண்ணலாம்னு நினைக்காதீங்க. எனக்கு தமிழ் நன்றாகவே புரியும். நான் வெற்றி பெற்ற தொகுதியில் ஏராளமான தமிழர்கள் இருக்கிறார்கள்'' என்றதும் கூட்டத்தில் அதுவரை இருந்த சலசலப்புகள் நிசப்தமானது.
கூட்டத்தில் பேசிய அணித் தலைவர்கள், "கடந்த தேர்தலை விட கூடுதல் சீட்டுகளை திமுகவிடம் பேசி வாங்குங்கள்'' என்றனர். "கட்சியைப் பலப்படுத்தும் வகையில் 100 தொகுதிகளை அடையாளம் கண்டு அதில் தீவிர கவனம் செலுத்துங்கள்'' என்றார் தினேஷ்.
முன்னாள் தலைவர்கள், எம்.பி.க்கள், எம்.எல். ஏ.க்களுடன் விவாதித்த குண்டுராவ், "ராகுல் பிரதமராக வர வேண்டும் என முதல் குரல் கொடுத்தவர் ஸ்டாலின்தான். அவர் முதலமைச்சராக நாம் உழைக்க வேண்டும்'' என்று கூட்டணிக்கு வலிமை சேர்க்கும் வகையில் பேச்சை துவக்கினார்.
அப்போது பேசிய தங்கபாலு, "கடந்த தேர்தலில் 41 சீட்டுகளைப் பெற்றோம். திமுகவிடம் இதிலிருந்து ஆரம்பித்து கூடுதல் சீட்டுகளை பெற வேண்டும். அதிக சீட்டுகளை பெறுவது நம்முடைய குறைந்த பட்ச பார்வையாகவும், வாங்கிய சீட்டுகளில் வெற்றிபெற்று கட்சியை வளர்ப்பது அதிகபட்ச பார்வையாக இருக்க வேண்டும்'' என்றார்.
"வாங்கிய இடங்களில் வெற்றிபெறும் வகையில் வேட்பாளர்களை நிறுத்த வேண்டும். தேர்தல்னாலே செலவு என்றாகி விட்டது. அதனால், குறைந்தபட்சம் 5 கோடி ரூபாய் செலவு செய்ய வாய்ப்பிருப்பவர்களுக்குத்தான் சீட் கொடுக்க வேண்டும்'' என்றார் ஈவிகேஎஸ் இளங்கோவன்.
அப்போது பேசிய ஜெயக்குமார் உள்ளிட்ட எம்.பி.க்கள் சிலர், "காங்கிரஸில் சீட்டு வாங்கிட்டு திமுகவிடம் சரண்டராகி விடுகிறார்கள். திமுக ஒத்துழைச்சால் மட்டுமே ஜெயிக்க முடியுங்கிறதினால அங்கு சரணடைகிறார்கள்'' என்று எதார்த்தத்தை வெளிப்படுத்த, குறுக்கிட்ட இளங்கோவன், "இந்த யோசனை எனக்கு தெரியாம போய்டுச்சே. அதனால்தான் எம்.பி. தேர்தல்ல நான் தோத்துட் டேனோ?'' என கமெண்ட் பண்ணியிருக்கிறார்.
அப்போது பேசிய எம்.எல்.ஏ.க்கள், "திமுகவிடம் ஜெயிக்கக்கூடிய இடங்களாக பார்த்து வாங்குங்க. அதிமுக அமைச்சர்கள் போட்டியிடுற தொகுதிகளை நமக்கு ஒதுக்கிடப் போறாங்க'' என்றனர். அப்போது, "தொகுதி பங்கீடுகளை கடைசி நேரம் வரைக்கும் இழுத்துக்கிட்டு இருக்காதீங்க. தேர்தலுக்கு 2 மாதங்களுக்கு முன்பே காங்கிரஸுக்கான தொகுதிகளை பேசி முடியுங்கள்'' என எம்.பி.க்கள் சைடிலிருந்து குரல் எழுந்தது.
கார்த்திசிதம்பரம் பேசும்போது, "கட்சியிலுள்ள அனைத்து சமூகத்தினருக்கும் வாய்ப்பளிக்கிற மாதிரி சீட்டுகளை வாங்க வேண்டும். பெண்களுக்குரிய முக்கியத்துவம் தரப்பட வேண்டும். மாநில தலைவர் எங்களுடன் கலந்து பேசுவதே இல்லை'' என்றெல்லாம் குறைப்பட்டுக் கொண்டார். அதேபோல, இந்த தேர்தலில் மகிளா காங்கிரசுக்கு அதிக முக்கியத்தும் தரவேண்டும் என கரூர் ஜோதிமணி சொல்ல, டெல்லியில் உட்கார்ந்து சீட் வாங்கிட்டு, இப்போது மகிளா காங்கிரஸ் முக்கியத்துவம் பற்றி பேசினால் எப்படி என முணுமுணுப்பு எழுந்தது.
திருநாவுக்கரசு பேசும்போது, மாவட்டத் தலைவர்களை மாற்றக்கூடாது என்றார். அப்போது பேசிய கே.எஸ். அழகிரி, "எனக்கு முன்பிருந்த தலைவர்கள் எப்படி செயல்பட்டார்களோ அதிலிருந்து நானும் விலக மாட்டேன்'' என சொல்ல, "மாவட்ட தலைவர்கள் மாநில நிர்வாகிகள் மாற்றம் அவசியம்தான். அதில் விருப்பு வெறுப்பு இருக்காது. எல்லோரிடமும் கலந்தாலோசித்து முடிவெடுப்பேன்'' என்றார் தினேஷ்.
அப்போது மாணிக்கம்தாகூர், "மாவட்ட தலைவர்கள் மாற்றம் வேண்டும். தலைவர் அழகிரி கட்சியை நன்றாக கொண்டு போகிறார். இந்த கூட்டத்திலேயே எல்லா தலைவர்களும் வந்துட்டாங்க; ஒத்துழைப்பு தர்றாங்க. திருநாவுக்கரசு இருந்தபோதுகூட இப்படி இருந்ததில்ல'' என சொல்ல, அதிர்ச்சியடைந்த திருநாவுக்கரசு, ""என்ன தம்பி சொன்னீங்க. எனக்குப் புரியலை'' என கேட்க, பேச்சை மாற்றிக்கொண்டார் மாணிக்கம் தாக்கூர்.
எம்.எல்.ஏ. தொகுதி நிதியில் நானோ, கே.ஆர்.ராமசாமியோ ஒரு பைசா கூட வாங்கறதில்லை என மலேசியா பாண்டியன் சொல்ல, விஜயதாரணியும் பிரின்சும், "அப்படின்னா நாங்க வாங்கறமா?'' என குரல்கொடுக்கவும், காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் யாருமே வாங்கறதில்லை என பேச்சை மாற்றிக்கொண்டார்.
விஷ்ணுபிரசாத் பேசும்போது, "பணம் இருந்தாதான் ஜெயிக்க முடியும்; பணம் இருக்கிறவங்களுக்குத்தான் சீட் கொடுக்கணும்னு எல்லாரும் சொல்றீங்க. அப்படின்னா, எம்.பி. தேர்தல்ல அ.தி.மு.க.தான் அதிகம் செலவு செஞ்சது. அவங்க ஜெயிக்கலையே! அதனால், பணம் முக்கியம்தான். அதேசமயம், கட்சிக்கு உழைச்சவங்க, விசுவாசமானவங்க, மக்கள்ட்ட அறிமுகம் உள்ளவங்கள பார்த்து சீட் கொடுங்க. பணம் இருக்கிறவருக்கே சீட் கொடுத்தா அது ஏலம் விடுற மாதிரி ஆகிடும்'' என்றிருக்கிறார்.
கே.எஸ். அழகிரி பேசும்போது, "தென் மாவட்டங்களில் கட்சி 70 சதவீதம் வளர்ச்சியடஞ்சிருக்கு. ஆனா, மேற்கு மாவட்டத்தில் 50 சதவீதமும், வட மாவட்டத்துல 40 சதவீதமும் தான் கட்சி இருக்கு'' என்று சொல்லிக்கொண்டேபோக, எம்.பி., எம்.எல்.ஏ.க்களிடம் ஒருவித சலசலப்பு ஏற்பட்டது. கூட்டம் முடிந்து வெளியேறும்போது, மேற்கு மாவட்டத்தை சேர்ந்த மூத்த தலைவர் ஒருவர், "இப்ப நடந்த கூட்டத்துலேயே 5 பேரு முக்குலத்தோர். ரெண்டு யாதவ பிரதிநிதிகள். இப்படி அதிகாரம் முழுமைக்கும் இவங்கக்கிட்டே இருந்தா மத்த பகுதியில கட்சி எப்படி வளரும்?'' என கமெண்ட் பண்ணியபடியே வந்தார். அதனை எம்.எல்.ஏ.க்கள் சிலர், "ஆமாம் தலைவரே'' என்றனர்.
இந்த 2 நாள் பயணத்தின்போது, முன்னாள் தலைவர்களுடனும் மூத்த நிர்வாகிகளுடனும் தனிப்பட்ட முறையிலும் விவாதித்திருக்கிறார் தினேஷ் குண்டுராவ், அப்போது, "இந்த முறை 180 சீட்டுக்களுக்கும் குறையாம தி.மு.க. போட்டி போடப் போகுது. அதனால காங்கிரஸுக்கு சீட் குறைய வாய்ப்பிருக்கு. கூடுதல் சீட் கேட்டு மல்லுக்காட்டாதீங்க. நமக்கு கூட்டணி முக்கியம்'' என்றவர்கள் டெல்லியிலும் இதனை வலியுறுத்தியிருக்கிறார்கள்.
கட்சியின் முன்னாள் தலைவர்கள் இப்படி பேசியிருப்பது அதிர்ச்சியாக இருந்ததால் அதுகுறித்து விசாரித்தபோது, "தங்களின் வாரிசுகளுக்கு சீட் கேட்கவிருக்கிறார்கள் அந்த தலைவர்கள். அதற்கேற்ப தொகுதியையும் தேர்தல் செலவுக்கு பணமும் ஜெயிக்க வைக்கிறோம்ங்கிற உறுதியையும் தி.மு.க. சைடிலிருந்து கொடுக்கப் பட்டிருக்கிறது. இந்த பின்னணிதான் அவர் களை அப்படி பேச வைத்திருக்கிறது'' என்கிறார்கள் கதர்ச்சட்டையினர்.